உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 12 · 14 / 102

காதலன், காதலியிடம் கேட்டான். “கண்ணே; நீ ஓவியக் கலையில் உயர்ந்த விருதுகள் பெற்றிருக்கிறாயே; யாரும் பார்க்காத இடத்தில்; நம் இல்லத்து அறையில் நாமிருவர் மட்டுமே பார்த்துப் பார்த்துக் களித்திட நீயும் நானும் தழுவிக் கொண்டிருக்கும் ஓவியம் ஒன்று வரைந்து கொடேன்” என்று!

“ஓவியம் வரைந்து கொடுக்கிறேன். சிற்பியாயிற்றே நீங்கள். நீங்கள் விரும்பும் ஓவியம் போலவே சிலையொன்று வடித்துக் கொடுங்களேன்.” “ஓவியம், முதலில்! சிலை, அடுத்ததாக!” காதலி, காதலன் கேட்டது போலவே ஓவியம் தீட்டி முடித்து, அவனை அறைக்குள் அழைத்து ஓவியத்தைக் காட்டினாள். காதலன் காதலி கட்டித் தழுவியிருக்கும் கவின்மிகு ஓவியம். இறுகத் தழுவியிருந்ததில் அவளது ஒரு மார்பகம் மட்டுமே எடுப்பாகத் தெரிந்தது. இருவிழிகளில் ஒரு விழி கன்னத்தோடு கன்னம் வைத்திருந்த காதலனின் கன்னத்தில் மறைந்திருந்தது.

காதலனின் தோளில் அவளது அவிழ்ந்த கூந்தல், மல்லிகைச் சரத்துடன் புரண்டு கொண்டிருந்ததால் அவன் தோள் ஒன்று மட்டுமே தெரிந்தது. அவளது மற்றொரு தோளையும் அவன் கரங்கொண்டு அணைத்திருப்பது போல அந்த ஓவியம் விளங்கியது. “இலக்கணப்படியே இந்த ஓவியம் வரைந்திருக்கிறாய்” என்றான் காதலன்! மேலும் சொன்னான்: “இரண்டு கண்கள் இருப்பினும் ஓவியத்தில் ஒன்றுதான் தெரிகிறது. ஓவியத்தில் இரண்டு மார்பகங்கள் காணப்படவில்லை. ஒன்றுதான் உள்ளது.

மூங்கிலனைய உன் தோளையும் அவ்வாறே தீட்டியுள்ளாய். கண்கள், தோள்கள், மார்பகங்கள் என்றில்லாமல்; கண்ணும், தோளும், மார்பகம் மட்டுமே காண்கிறேன். அதாவது தொல்காப்பியர் கூற்று அப்படியே தோய்ந்திருக்கிறது இந்த ஓவியத்தில்!” “என்ன கூற்று?”

“என்னவென்று சொல்லட்டுமா? கண், தோள், மார்பகம் - இவையும் இவை போன்ற பிறவும், பன்மைப் பொருளை உணர்த்தும் சொற்கள் என்றாலும் - இரண்டு கண்கள், இரண்டு தோள்கள் என்பது போல் பன்மையாகவே உணர்த்தப்பட வேண்டுமென்ற வரையறை கிடையாது. இவற்றையும், இவை போன்ற பிறவற்றையும் ஒருமையில் உணர்த்தினாலே பன்மையென விளங்கிவிடும். வினைக்கேற்பப் பன்மையிலும் உணர்த்துவதில் தவறில்லை”. “அப்படியா? என் ஓவியம்; அந்த இலக்கணத்தை எடுத்துக் காட்டப் பயன்படுகிறதா?

எங்கே, அந்த நூற்பாவினைச் சொல்லுங்கள்”. “ஓ! உள்ளது உள்ளபடியே சொல்லுகிறேன்; நான் சொல்லப்போவது சொல்லதிகாரம்! நீ தீட்டியுள்ளதோ அந்தச் சொல்லின் ஓவியம்!” > “கண்ணும் தோளும் முலையும் பிறவும் > பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி > பன்மை கூறும் கடப்பாடிலவே > தம் வினைக் கியலும் எழுத்தலங் கடையே” (சொல்லதிகாரம் - கிளவியாக்கம் - நூற்பா : 62)