உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 13 · 15 / 102

இடுப்பில் தூய கைத்தறி ஆடை, தோளில் குட்டையான ஒரு கைத்தறித் துண்டு, சட்டையில்லாத உடம்பு, வியர்வையோ, குளிர்காற்றோ இரண்டையும் சட்டை செய்யாத இயல்பு. பக்கத்தில் சின்னாளப்பட்டி சேலை யணிந்து அவரது நடுத்தர வயது மனைவி. அவர்களுடன் கைகளில் சில புதிய புத்தகங்களுடன் அவர்களின் ஆசை மகள் கண்ணகி. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பெண். இந்தக் கச்சிதமான குடும்பம், கடைத்தெருவில் சில புத்தகக் கடைகளைப் பார்த்துவிட்டு; பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த கோகலே புத்தகக் கடைக்குள் நுழைந்தார்கள்.

புத்தகக் கடை உரிமையாளர் பெயரும் கோகலே தான். பழுத்த தேசியவாதி போலத் தோற்றமளித்தார். அவருடைய மகன், அருணன் பட்டுச் சொக்காயுடனும் பகட்டான கைக்கடிகாரத்துடனும் தனது சுருண்ட கேசத்தை அடிக்கடி தடவி விட்டுக் கொண்டு, அவனும் தந்தைக்குத் துணையாக, புத்தக வியாபாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டிருந்தான். இருந்தாலும்கூட கண்ணகி அந்தக் கடையில் நுழைந்தவுடன், அவன் கவனம் வியாபாரத்தில் அவ்வளவாகத் திரும்பவில்லை.

ஆனால் அவனை முந்திக் கொண்டு அவன் தந்தை கோகலே, கண்ணகியின் தந்தையைப் பார்த்து; “தங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும்?” என்று ஆவலுடன் வினவினார். “நேரு எழுதியது ‘உலக சரித்திரம்’ இருக்கிறதா?” கோகலே சற்று யோசித்து தலையைச் சொரிந்து கொண்டு; “காந்தியடிகளின் சத்தியசோதனை” இருக்கிறது என்றார். கண்ணகியின் தந்தை, “அது என்னிடமே இருக்கிறது; அதனால் வேண்டாம்! சரி போகட்டும்; அண்ணா எழுதிய ‘இரு பரம்பரைகள்’ புத்தகம் இருக்கிறதா?”

கோகலே, மீண்டும் தலையைச் சொரிந்து கொண்டு; “புத்தம் புதிய பதிப்பு வந்திருக்கிறது; அண்ணா எழுதிய ‘வெள்ளை மாளிகையில்’ வேணுங்களா? அந்தப் புத்தகம் இருக்கிறது” “‘இரு பரம்பரைகள்’ இல்லையா? பரவாயில்லை; நீங்கள் சொன்ன ‘வெள்ளை மாளிகையில்’ எங்க கண்ணகி நூல் நிலையத்திலேயே இருக்கிறது!”

“ஓ; நீங்க நூல் நிலையமே வைத்திருக்கிறீர்களா? ஆயிரம் நூல்களாவது இருக்குமா?” என்று கண்ணகியைப் பார்த்து அருணன் கேட்டவாறு விழிகளை அவள் மீது மேயவிட்டான். அவளுக்கு அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேறு பக்கம் திரும்பி, புத்தகங்களைத் தேடினாள்! அப்போது அருணனின் தந்தை; வந்த வியாபாரத்தை விட்டு விடக் கூடாது என்ற முடிவோடு; கண்ணகியின் பெற்றோரைப் பார்த்து, “திருக்குறள் உரை நிறைய இருக்கிறது!”

என்றார். “புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ இருந்தால் கொடுங்கள்!” “இராமாயணம் இருக்கிறது, அது தான் எல்லோரும் படிப்பது!” கண்ணகி, இடைமறித்து “அது வேண்டாம் - பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’ இருக்கிறதா?” அருணன், இதுதான் சமயமென்று நினைத்து; “‘எதிர்பாராத முத்தம்’ இருக்கிறது. வேண்டுமா?”

என்றான், முகத்தில் அசடு வழிய; ஆனால் குறும்புத்தனமாக! கண்ணகியைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டே! கண்ணகி கடுமையான குரலில், “என்னிடம் ‘தமிழச்சியின் கத்தி’ இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, சற்று நிறுத்தி “அதுவும் பாரதிதாசன் எழுதியதுதான்” என்றாள்.

கண்களில் கனல் பறந்தது. அருணன் அடங்கி விட்டான். அவளது தந்தை, கடை உரிமையாளர் கோகலேயைப் பார்த்து, “ஆமாம், எது கேட்டாலும் கேட்ட புத்தகத்தை விட்டு விட்டு, வேறு புத்தகம் இருப்பதாகச் சொல்கிறீர்! இது என்ன வேடிக்கை?” என்று எரிச்சலாகக் கேட்கவே; உரிமையாளர் கோகலே, புன்னகை புரிந்தவாறு, “அய்யா! இது தொல்காப்பியத்தின் வழிகாட்டுதல்! அதைத்தான் வணிகர்கள் பின்பற்ற வேண்டும். கடையை நாடி வந்து எந்தப் பொருளும் கேட்பவர்களிடம் எதையும் “இல்லை” என்று சொல்லாமல்; என்ன இருக்கிறதோ அதைச் சொல்லி, அதை வாங்க வைத்தால் வணிகம் பெருகும் என்று அவர்தான் சொல்லியிருக்கிறார்”.

இதுவரையில் மெளனமாக இருந்த கண்ணகியின் தாய், “அப்படியென்றால் தொல்காப்பிய உரையாவது இருக்கிறதா?” என்று கேட்கவே - உடனே உரிமையாளர் கோகலே, “மகாபாரதம் மலிவுப் பதிப்பு இருக்கிறது” என்றார். > “எப்பொருளாயினும் அல்லது இல் எனின் > அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” (சொல்லதிகாரம் - கிளவியாக்கம் - நூற்பா : 35)