உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 14 · 16 / 102

மயிலைக் காளைகள் பூட்டிய வில்வண்டியில் சாய்ந்தவாறு சவாரி செய்து கொண்டு வந்த கலியபெருமாள், “கருணையானந்த அச்சகம் வந்துவிட்டது அய்யா” என்று வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப் பிடித்து வண்டியை நிறுத்தியதும் கீழே இறங்கினார் கையில் ஒரு பையுடன்!

அச்சகத்து முகப்பில் உள்ள மேலாளர் அறைக்குள் நுழைந்ததும் அங்கே மேலாளர் மெய்யப்பன், ‘வரவேண்டும்! வரவேண்டும்!’ என்று கலியபெருமாளைக் கைகூப்பி வணங்கி அமரவைத்தார். கலியபெருமாள், கையிலிருந்த பையை எடுத்து, அதற்குள்ளேயிருந்து ஐந்தாறு அகலமான தாள்களை வெளியே இழுத்தபடியே, “ஒரு நல்ல காரியம் நமது வீட்டில் நடக்கப் போகிறது. அதற்காக வந்தேன்” என்றதும்; “ரொம்ப மகிழ்ச்சி, பையனுக்குத் திருமணம் போல இருக்கு - பத்திரிகை அடிக்க வந்திருக்கீங்க!

செய்தி படித்தேன்!” “ஆமாம் - அவசரமாக முடிவான திருமணம். ஆயிரம் அழைப்பிதழ் அச்சியற்றிக் கொடுக்கணும். பையன் பெயர் - பெண்ணு பெயர் பாக்கி விபரமெல்லாம் இதிலே இருக்குது! தேவையான திருத்தங்களை நீங்களே செய்து கொள்ளுங்க!” அவர் நீட்டிய தாளை அச்சக மேலாளர் வாங்கி விபரங்களைப் படித்துப் பார்த்துவிட்டு; “ஆமாம்! சீர்திருத்த முறையிலே திருமணம்னு பத்திரிகையிலே எழுதியிருக்கு - அழைப்பிதழிலே விவாக சுப முகூர்த்தம்னு மஞ்சள் தடவி, அய்யர் தேதி, லக்னம் எல்லாம் குறித்துக் கொடுத்திருக்கிறாரே?”

“அப்படியா? விவாக சுப முகூர்த்தம்னா எழுதியிருக்கிறாரு? பார்த்தீங்களா? அய்யர் அவர் வேலையைக் காட்டியிருக்காரு! பரவாயில்லை; அய்யர் வந்து நாள் குறிச்சிருந்தா கூட, இது பெரியார் சொன்ன முறைப்படி நடக்கிற மணவிழாதான் - அதனால “மணவிழா அழைப்பிதழ்” என்றே தலைப்புப் போடுங்க!”

“சீர்திருத்தத் திருமணம்! அப்புறம் ஏன்; நாள் நட்சத்திரம் பார்க்கிறீங்க?” “உமக்குத் தெரியாதா? சில நேரங்களிலே மணமகன் வீட்டிலே வைதீகப் பிடிவாதம் இருக்கும் - சில நேரத்திலே மணமகள் வீட்டார் அப்படி இருப்பார்கள். இங்கே மணமகள் வீட்டார் விருப்பத்துக்கு நாள் நட்சத்திரம் - நமது விருப்பத்துக்கு, சீர்திருத்தத் திருமணம்!”

மேலாளர், மெல்லப் புன்னகை புரிந்து கொண்டே; அச்சியற்றுவதற்காகக் கலியபெருமாள், அவரிடம் தந்த மணவிழா அழைப்புத்தாளைக் கவனமாகப் படித்துப் பார்த்தார். “எல்லாம் சரியா இருக்கா? ஏன் கேட்கிறேன் தெரியுமா? நீர் தமிழிலே பாண்டித்தியம் பெற்றவர் - எதிலும் ஒரு சின்னப் பிழை கூட வராமல் பார்க்கக் கூடியவர்! அதனால்தானே இந்த அச்சகத்திற்கு வருவது!”

“எல்லாம் சரியா இருக்கு! ஒரே ஒரு பிழைதான்!” “என்ன அது?” “ஒண்ணும் பெரிய விஷயமில்லை. மணமகன் பெயரைக் குறிப்பிடும்போது ‘எனது மகன்’ என்று எழுதியிருக்கிறீர்களே.....” “ஆமாம் - மணமகன் எனது மகன்தான்.....” “அதுதான் அய்யா தவறு!” “என்ன சொல்கிறீர் மெய்யப்பன்? அவன் எனது மகன் இல்லாமல் வேறு யார்?”

“அதுதான் சரியாக இல்லை!” “ஓய்! கொடுமய்யா அந்தத் தாளை! என்ன பேச்சு இது? சே! சே!” மெய்யப்பன் கையிலிருந்த தாளை வேகமாகப் பிடுங்கிக் கொண்டு கலியபெருமாள் எழுந்தபோது; மெய்யப்பன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு; “மன்னிக்கவும். நீங்க தானே என்னுடைய தமிழ்ப் புலமையைப் பாராட்டினீர்கள் - அதற்குள் ஆத்திரப்பட்டால் எப்படி?”

“சரி; என்ன சொல்கிறீர்? சொல்லும்!” “எனது மகன் என்று எழுதும்போது; உயர்திணையுடன் “அது” என்ற ஆறாம் வேற்றுமை உருபுக்குப் பதிலாக, நான்காம் வேற்றுமையாகிய “கு” உருபு வருதல் வேண்டும். இல்லையேல் “எனது” என்று குறித்திடும் போது திணை தவறாகிவிடும்.

எனவே ‘கு’ உருபை இணைத்து “எனக்கு மகன்” என்பதே சரியாகும்” கலியபெருமாள், கோபம் தணிந்து கலகலவெனச் சிரித்தபடி; “அதென்னமோ, வேற்றுமையோ, உருபோ, உயர்திணை, அஃறிணையோ, நீர் சொன்னாச் சரி!” “நான் சொல்லவில்லை! தொல்காப்பியம் சொல்லுது!” “எது சொன்னாலும், யார் சொன்னாலும், அவன் எனக்கு மகன்தான்! சீக்கிரம் அழைப்பிதழை அச்சடித்து முடியுங்கள். இந்தாரும் முன் பணம்! வருகிறேன்! வணக்கம்!”. (இருவரும் வணங்குதல்) > “அது என் வேற்றுமை உயர்திணைத் > தொகைவயின் > அது என் உருபு கெடக் ‘குகரம்’ வருமே” (சொல்லதிகாரம் - வேற்றுமை மயங்கியல் - நூற்பா : 11)