உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 15 · 17 / 102

ஒன்றுபட்டிருந்த தென் ஆற்காடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரவானைப் பலியிடும் கூவாகம் திருவிழாவில் வழக்கம்போல் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து ஏராளமான அரவாணிகள் கூடியிருந்தார்கள். கூத்தும் கும்மாளமும் நிறைந்த அந்த கோலாகல உற்சவத்தில் அலிகள், விதவிதமான அலங்காரங்களுடன், அவர்கள் விருப்பத்துக்குப் பல்வேறு வேடங்களுடன் ஆடிப்பாடியும், அணிஅணியாக வட்டமிட்டுக் குனிந்து வளைந்து கும்மியடித்தும் அவற்றைக் காண வந்த இளவெட்டுக்கள் கிழவெட்டுக்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்தனர்.

பாரதப் போரில் அரவானைக் களப்பலி கொடுத்து போர் தொடங்குவதாகவும், அவன் இறந்தவுடன் மஞ்சள், குங்குமம், மாங்கல்யம் இழப்பதற்காகவே அந்த விழாவில் அலிகள் கலந்து கொண்டு மாரடித்து அழுது புலம்பி மாங்கல்யம் அறுப்பது என்பது ஓர் ஐதீகம்! ஆட்டபாட்டங்கள் அமர்க்களப்பட்டு விழா முடிந்து, களைத்துப் போன அரவாணிகள் எனும் அலிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தங்கு மிடங்களில் படுத்துத் தூங்கினர். புயல் அடித்து ஓய்ந்தது போன்று, திருவிழா அமளி முடிந்து எழுந்த அந்த அமைதியான இரவில் ‘இராதா’ என்ற அலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும்போது; அந்த உறக்கத்தில் ஒரு கனவு.

‘இராதா’ என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பெயரே அந்த அலியின் பெயர். கனவில் கண்ணபிரான் வருவது போலவும் அவனுடன் பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் இருப்பது போன்றதுமான காட்சி - பாண்டவர்களின் வனவாசத்தில் ஒரு கட்டமாக, யாருமறியாமல் மாறுவேடத்தில் அவர்கள் அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டுமென்பது நிபந்தனை! இல்லையேல் தருமன், துரியனுடன் ஆடிய சூதாட்டத்தில் வைத்து இழந்த நாடு கிடைக்காது. எனவே பாண்டவர்கள் ஒவ்வொருவரும் மாறுவேடம் பூண்டு மறைந்து வாழ்கிறார்கள்.

அவர்களில் அலியாக மாறி, மறைந்து திரியும் அர்ச்சுனன், கண்ணபிரானைத் தனியாகச் சந்திக்கிறான்; ஆம்; அரவாணி இராதாவின் கனவில்! “கண்ணா! எனக்கொரு சந்தேகம்!” “என்ன அர்ச்சுனா? சொல்!” “நான் இப்போது ஆண்பாலா? பெண்பாலா?” “திடீரென இது என்ன உனக்கு இலக்கணக் குழப்பம்?”

“என்னை, அவன் என்பார்களா? அவள் என்பார்களா?” “சற்றுப் பொறு! தொல்காப்பியத்தைப் பார்த்துச் சொல்லுகிறேன்!” என்றவாறு கண்ணபிரான், எதிர்த்திசையில் கையை நீட்டுகிறார். திடீரென அவர் கையில் தொல்காப்பியச் சுவடி தோன்றுகிறது. அலி உருவில் இருக்கும் அர்ச்சுனன் கண்ணனைப் பார்த்து, “என்ன கண்ணா இது; இந்தக் காலத்தில் தொல்காப்பியம்?”

என வினவிட; “காண்டவா! கனவு தானே இது! எல்லாம் நடக்கும்!” என்று கூறிக் கொண்டே சுவடியைப் புரட்டுகிறார் கண்ணபிரான். “இதோ பார்! உன் கேள்விக்குத் தொல்காப்பியத்தில் விடை இருக்கிறது!” “என்ன விடை? நான் ஆணா? பெண்ணா?” “இரண்டுமில்லை. ‘பேடி’ என்று இருக்கிறது.”

“நான் ஆண் தானே!” “அர்ச்சுனா! ஆண்மை திரிந்த பேடியைப் பற்றி இலக்கணம் சொல்லும் தொல்காப்பியம், ஆண்மை திரிந்த பிறகு அவர்களை ஆண்மைத் தன்மையை சுட்டுகிற சொல்லுடன் சேர்த்துச் சொல்லக்கூடாது. அதாவது பேடி வந்தான், போனான், பேசினான், என்று சொல்லாமல், பேடி வந்தாள், போனாள் என்றே சொல்ல வேண்டுமென்கிறார்” “அதற்கு என்ன செய்யுள் இருக்கிறது?”

“இதோ; படிக்கிறேன் கேள்!” ‘ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே.” இதைக் கேட்ட அர்ச்சுனன் முகவாட்டத்துடன், “கண்ணா, எல்லாம் சரி, தொல்காப்பியக் கூற்றுப்படி ஆண்மை திரிந்து அதாவது மாறிப் போய்ப் பேடி உருவம் பெற்றால் பெண்பாலில் தான் குறிப்பிடவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், பால் திரிந்து போய் உருமாற்றம் பெற்றது போல என் ஆண்மை திரிந்து பேடியாகவில்லையே! சூதாட்ட நிபந்தனைப்படி பேடி உருவில் மறைந்துதானே வாழ்கிறேன்!”

“அதனால் உன்னை ஆணை அழைப்பது போல் வந்தான், போனான் என்றே அழைக்கலாம் என்கிறாய்; அப்படி அழைத்தால் நீ மாட்டிக் கொள்வாய்! எனவே பெண்ணாகவே உன்னைப் பாவிப்பதைப் பேடியாகவே இருந்து சகித்துக்கொள்” “பார்த்தாமா! நானாவது பஞ்சத்துக்கு ஆண்டி! சகித்துக் கொள்கிறேன். ஆனால் பாவம் ஆண்மை திரிந்து பேடியாக மாறியவர்கள் எத்தனை ஆயிரம் பேர்; தங்களைப் பெண்பாலில் அழைக்கும்போது எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?”

“பார்த்திபா! பெண்பால் என்றால் ஏன் இழிவாகக் கருதுகிறாய்? பாவம் உனக்கு பெண் என்றாலே பிடிக்காது! பாஞ்சாலி, அல்லி, பவளக்கொடி, சுபத்திரை, இன்னும் யார் யாரோ எல்லாரும் பெண்பாலர்தானே?” அர்ச்சுனன் நாணத்தால் தலைகுனிகிறான். உடனே கண்ணபிரான், “அடடே; தொல்காப்பிய இலக்கணம் இப்போது உன்னிடம் நூற்றுக்கு - தொண்ணூறு சதவிகிதம் பொருந்துகிறதே!”

திடுக்கென அரவாணி இராதா விழித்துக் கொள்ள, அவள் கண்ட கதம்பக் கனவு கலைகிறது. > “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி > ஆண்மை அறிசொற்கு ஆகுஇடன் இன்றே” (சொல்லதிகாரம் - கிளவியாக்கம் - நூற்பா : 12) திரிந்த = மாற்றம் பெற்ற கிளவி = சொல்.