உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 16 · 18 / 102

தோட்டத்து முல்லைப் புதரோரம் அமர்ந்து மரகதமும், தங்கமும் ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள். “ஏய், தங்கம் தெரியுமாடி சேதி! நம்ப அன்னத்துக்குக் கொஞ்ச நாட்களாகவே மனநலம் அவ்வளவாகச் சரியில்லை என்கிறார்கள்” “ஏன்; ஏதாவது காதல் தோல்வியா? அப்படி அவள் யாரையும் காதலிப்பதாகவோ - அல்லது இவளைத்தான் யாரும் காதலிப்பதாகவோ நான் கேள்விப்படவில்லையே!”

“நானும் அப்படி சந்தேகப்பட்டுத்தான் நேற்று அவளைப் போய்ப் பார்த்தேன்” “நேரிலேயே பார்த்தாயா? எப்படியிருக்கிறாள்? ஏதாவது தாறுமாறாகப் பேசினாளா?” “நேரில்தான் பார்த்தேன்! அவளைச் சுற்றி ஒரே புத்தகங்களின் குப்பை!” “புத்தகங்களின் குப்பையா? அல்லது குப்பைப் புத்தகங்களா?”

“அதெல்லாம், அன்னம் கையால் கூடத் தொட மாட்டாளே! அந்த வகை புத்தகமோ, அல்லது வார இதழ்களில் வரும் வக்கிரம் பிடித்த கதைகளோ அவளுக்கு அறவே பிடிக்காது. யாராவது கொடுத்தால்கூட வாங்கி, வீசி எறிவாள்!” “அது கிடக்கட்டும். இது போல பெண்களும், ஆண்களும் அந்த விஷயங்களை வெறுப்பது போல் நடந்து கொண்டாலும்; ரகசியமாக வாங்கிப் படிக்காமல் இருக்கமாட்டார்கள். சரி, மரகதம்! அன்னம் எப்போதும் இலக்கியங்களில்தான் மூழ்கியிருப்பாள் - இப்போது என்ன ஆச்சு அவளுக்கு?”

“அதனால்தான் இலக்கியப் பைத்தியம் பிடித்துவிட்டது!” “நீயும்தான் இலக்கிய ரசிகை!” “இருந்தாலும் இப்படியா? தன் தலையும் சுற்றி, மற்றவர்கள் தலையையும் சுற்ற வைப்பதற்கு?” “சொல்லுடி; என்ன விஷயம்?” “அதாவது - ஆண்மை திரிந்து பேடியானால் - அந்தப் பேடியை ஆண்பாலால் குறிப்பிடக் கூடாது. ‘வந்தாள், பேசினாள்’ என்றே பெண் பாலால் சொல்லவேண்டும் என்று இலக்கணம்!”

“ஆமாம்! அதற்கென்ன? அன்னம் என்ன சொல்லுகிறாள்?” “என்ன அது?” “பெண் மகன் வந்தாள் என்று சொல்லலாமாம்!” “அது எப்படி? பெண் மகனா? பேடியைச் சொல்கிறாயா?” “இல்லை யில்லை! முன்பெல்லாம் பருவமடையாத பெண்ணைப் பெண் மகன் என்று அழைக்கும் வழக்கு இருந்ததாம். அதனால் பெண் மகன் வந்தாள் என்று கூறலாம் என்று அன்னம் கூறுகிறாள்!”

“சரி; சரி; சந்தேகமில்லாமல் அவளுக்கு மூளைக் கோளாறு தான்! நல்ல கற்பனை செய்கிறாள்; பைத்தியம், பைத்தியம், பைத்தியமே தான்!” “யாருக்கடி பைத்தியம்? ஏய், தங்கம்! மரகதம்! நானாகச் சொல்வதல்லடி இது!” என்று உரக்க ஒலித்தவாறு அன்னம் அங்கே நுழைந்து, தன் கையிலிருந்த தொல்காப்பியப் புத்தகத்தைத் திறந்து, “இதோ இதை நன்றாகக் கண்ணைத் திறந்து படியுங்கள்” என்று பக்கத்தைப் புரட்டிக் காட்டினாள்.

“எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர்” மற்றும்; “மகடூஉ மருங்கின் பால் திரிகிளவி மகடூஉ இயற்கை தொழில் வயினான” சொல்லதிகாரத்தில் உள்ள இந்த நூற்பாவிற்கு பொருள் என்ன தெரியுமா? சுருக்கமாகச் சொன்னால்; “பால் திரிந்து வழங்கும் பெண்மகன் என்ற சொல், பெண் மகன் வந்தாள் என்று பெண் பால் வினை கொள்ளும்” அன்னம் மேலும் சொன்னாள்; “எல்லாரும் எல்லீரும் பெண்மகன் போன்ற சொற்களும் உயர்திணைப் பெயர்கள் என்பர்.

முன்பெல்லாம் பருவம் வராத பெண்ணைப் பெண்மகன் என அழைக்கும் வழக்கம் இருந்தது” தங்கமும் மரகதமும் அன்னத்தை விழி மூடாமல் பார்த்து வியந்து போயினர். “தொல்காப்பிய நூற்பா, மற்றும் உரை, அதற்கான விளக்கம் இவற்றைப் படியுங்கள்; பிறகு தீர்மானம் செய்யுங்கள் அன்னம் பைத்தியமா என்று!”

இவ்வாறு கூறிக் கொண்டே அன்னம் வெளியேறினாள். > “எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் > எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் > பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் > அன்ன இயல என்மனார் புலவர்” (சொல்லதிகாரம் - பெயரியல் - நூற்பா : 10) > “மகடூஉ மருங்கின் பால் திரிகிளவி > மகடூஉ இயற்கை தொழில் வயினான” (சொல்லதிகாரம் - பெயரியல் - நூற்பா : 40)