தொல்காப்பியப் பூங்கா
பகுதி 17 · 19 / 102
விருந்துக்கு நண்பர்களை அழைத்திருந்தான். இரு நண்பர்கள் உச்சியில் கதிரவன் உயர்ந்து நிற்பதற்கு முன்பே வந்துவிட்டனர். “என்னங்க; என்னிடம் முன்கூட்டி ஒரு வார்த்தை சொல்லாமலே விருந்துக்கு வரச் சொல்லி விட்டீர்களே ?” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாள் வீட்டுக்காரி. “விரால் மீன்கள் கிடைத்தன. நண்பர்களுடன் சாப்பிட்டால் எனக்கும் மகிழ்ச்சி; உனக்கும் பிடிக்குமே என்பதற்காகத்தான் அவர்கள் இருவரையும் கூப்பிட்டேன்.
சீக்கிரம் சமையலைக் கவனி!” அரிசி புடைத்து, நீரில் களைந்து அதை உலையிலிட்டு அடுப்பை மூட்டிவிட்டு, அதன் தொடர்ச்சியாக விரால் மீன்களைத் துண்டங்களாக நறுக்கி, அளவு மீறாமலும் குறையாமலும் உப்பு, புளி, மிளகாய்த்தூள் போட்டுச் சட்டியில் கொதிக்கும் குழம்பில் மீன் துண்டங்களை மெதுவாகப் போட்டு, இரண்டு அடுப்புகளையும் மாறி மாறிக் கவனித்துக் கொண்டு சமையல் வேலையை விரைவுபடுத்தினாள் வீட்டுக்கு அரசி! விருந்தினர்க்கு உணவு பரிமாறித் தானும் உண்பதில் அவளுக்கும் தனி இன்பம்தான்!
கணவன், வீட்டுத் திண்ணையிலிருந்தவாறு துணைவியை அழைத்து அழைத்து, “என்ன சமையல் ஆச்சா ? எவ்வளவு நேரம் ? எவ்வளவு நேரம் ?” என்று உரத்த குரலில் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவன் சப்தம் போடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. திருக்குறள் விருந்தோம்பல் அதிகாரம் - “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து; நோக்கக் குழையும் விருந்து” எனும் வரிகள் அவள் நெஞ்சில் எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டிருந்தன. பறந்து பறந்து சமையற்பணி ஆற்றிக் கொண்டிருந்தவளின் செவிகளில்; வெளியிலிருந்து கணவனின் கடுமொழி விழுந்தது!
“எந்தக் காலத்தில் சமைத்து முடிப்பது ? எந்தக் காலத்தில் பரிமாறுவது ? எந்தக் காலத்தில் நாங்கள் சாப்பிடுவது ?” வீட்டுக்காரி, தாழ்வாரத்தில் இலை போட்டுக் கொண்டே, புன்னகை புரிந்தவாறு சொன்னாள்: “எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் கடந்த காலக் குறிப்புடன் கூறுகிறேன் - இதோ சமையல் முடித்து விட்டேன்! பரிமாற வந்து விட்டேன்! நீங்கள் மூவரும் வந்து சாப்பிடலாம்!”
“ஆகா! இந்த இல்லத்தரசி ஓர் இலக்கிய அரசிதான் போலும்!” ஒரு நண்பன் பாராட்டினான். “அரசி ஒன்றுமில்லை நான் - இல்லறக் கடமையுடன் இலக்கியமும் கற்ற ஒரு பெண்; அவ்வளவுதான்!” கணவன் அவளைப் பார்த்து அன்பும் பூரிப்பும் அளவுகடந்து பொங்கிடக் கேட்டான்; “இது தொல்காப்பியம் தானே ? முழுமையாக அந்த நூற்பாவைச் சொல்லலாமே-” “முதலில் உணவு வேலை முடியட்டும். பிறகு ஆகட்டும்” என்றாள். விருந்து அருந்தியபின் அந்தத் தொல்காப்பிய இலக்கண விருந்தையும் படைத்தாள்!
“வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஒராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர்” (சொல்லதிகாரம் - வினையியல் - நூற்பா : 44) குறிப்பு :- வருங்காலம், நிகழ் காலத்தை ஒருங்கிணைத்திடும் நிகழ்ச்சியைக் கடந்த காலக்குறிப்புடன் கூறுதல், விரைவு கருதிக் கூறுவதாகும்.
