தொல்காப்பியப் பூங்கா
பகுதி 18 · 20 / 102
டார்வின் சித்தாந்தம், குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய விதம் பற்றி அறிவியல் ரீதியில் விளக்கி வெற்றி கண்டிருக்கிறது. உலகில் பரிணாம வளர்ச்சி காரணமாகப் பல்கிப் பெருகிய மனித சமுதாயத்தில் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முறையான வாழ்வுக்கு மெல்ல மெல்லத் தயாராகிக் கொண்டது தமிழ் இனம். உயிர் வாழ்வது வேறு; அந்த வாழ்வை வரையறுத்து வாழ்க்கை நடத்துவது என்பது வேறு. அத்தகைய வாழ்க்கை அமைந்திட தொடர்புச் சாதனங்கள் தேவை.
அந்தத் தொடர்புச் சாதனங்களில் முதன்மையானதும்; காலம் கனியக் கனிய இன்றியமையாததுமாக மொழியே இருந்தது. உலகில் பல பகுதிகளில் உருவான இனங்கள் மொழிச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின எனினும்; அவற்றில் மொழியில் இலக்கியம் கண்டு, அதற்கு இலக்கணமும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பமான வளர்ச்சிக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே மெருகேற்றிக் கொண்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தமிழ் இனத்துக்கே உண்டு.
அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரமாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் பழங்கால வாழ்க்கை முறைக் குறிப்புகள், ஒழுக்கம் பற்றிய பல செய்திகள், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் நிலத்தில் நடைமுறையில் இருந்தன எனினும்; அவற்றையும் செப்பனிட்டுச் சேர்த்து தம் காலத்து வாழ்க்கை முறை நிலைமைகளையும் தொல்காப்பியர் தொகுத்து, இலக்கிய மணம் வீசும் இலக்கணப் பூங்கொத்தாக வழங்கியிருக்கிறார் என்பதுதான் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்வதாகும்.
அந்தக் காலத்தில் இந்த இனம் கொண்டிருந்த கோட்பாடுகள், நம்பிக்கைகள், காதல், வீரம், அவற்றில் வெற்றி கொள்ளப் பின்பற்றிய வழி முறைகள்; இந்தக் காலத்திற்கு எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவை என்பது விவாதத்திற்குரியதாக இருப்பினும்; தொல்காப்பியம் போன்ற நூல்கள் இல்லையேல் நாம் காலக் கண்ணாடிகளை இழந்தவர்களாயிருப்போம். அந்த அடிப்படையிலும், பின்னணியிலும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் சில மலர்களின் மணம் நுகர்வோம்.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என இலக்கியத்தில் வழங்குவதை முறையாகச் சொல்லும் வகையில் அமைத்துக்கொண்டு, இந்த மூன்றில் முதல் பொருள் எனப்படுவதை நிலம், பொழுது என இரண்டாகப் பிரித்து அவற்றின் தன்மையும் இயல்பும் கூறப்படுகிறது. “முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே !”
(பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 4) நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பிரித்து ஒவ்வொன்றிலும் முறையே கண்ணன், முருகன், இந்திரன், வருணன் என வழிபடு தெய்வங்களைக் கற்பித்துக் கொண்டு போற்றி வாழ்ந்தனர். “மாயோன் மேய காடுறை உலகமும்” கண்ணன் விரும்புகிற காடுடைய முல்லை நிலமும், “சேயோன் மேய மைவரை உலகமும்” முருகன் விரும்புகிற மேகம் சூழ்ந்த மலைகளை உடைய குறிஞ்சி நிலமும், “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” இந்திரன் விரும்புகின்ற மிகுதியான நீர் வளம் கொண்ட மருத நிலமும், “வருணன் மேய பெருமணல் உலகமும்” வருணன் விரும்புகின்ற பெருமணல் நிரம்பிய நெய்தல் நிலமும், அந்தத் தெய்வங்களின் அருட்பார்வையில் இருப்பதாக நம்பினார்கள்.
ஆனால் வறண்டு வளம் திரிந்துவிட்ட ‘பாலை’ நிலங்களுக்குத் தான் எந்தத் தெய்வமும் இல்லை என்பது, இந்தச் செய்யுளில் இருந்து தெரிகிறது. பாலை நிலத் தெய்வமாக வர யாரும் விரும்பவில்லை போலும்! “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (சொல்லதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 5)
