தொல்காப்பியப் பூங்கா
பகுதி 19 · 21 / 102
தலைவனும் தலைவியும் புணரும் நிமித்தமும், பிரிதல் நிமித்தமும், பிரிந்த தலைவி இருத்தல் நிமித்தமும், அதற்கென இரங்கல் நிமித்தமும், ஊடல் நிமித்தமும், தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் நிமித்தமும், சுற்றத்தினர் குறுக்கிடுதல் நிமித்தமும், அவர்கள் இவர்களைப் பிரித்தமை கண்டு கலங்குதல் நிமித்தமும், கற்றிடவும், பொருள்தேடவும், போர்புரியவும் காரணங்கள் அமைந்து விடை பெறும் நிமித்தமும் அமையும் நிகழ்வுகள் எந்தப் பொழுதில், எந்த நிலத்தில் என்பதெல்லாம் இனி வருபவை என்பதால் - அவற்றுக்கான விபரங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். முல்லை நிலத்தில் பெரும்பொழுது கார் காலமாகவும், சிறுபொழுது மாலைக் காலமாகவும் இருக்கும்.
குறிஞ்சி நிலத்தில் பெரும்பொழுது குளிர்காலமாகவும், சிறுபொழுது யாமம் எனப்படும் இரவுக் காலமாகவும் இருக்கும். மருத நிலத்தில் சிறுபொழுது வைகறை விடியல் என இருக்கும். நெய்தல் நிலத்தில் சிறுபொழுது காலை நேரமாக இருக்கும். நால்வகை நிலம் என்ற பட்டியலில் இடம் பெறாமல் - நடுவு நிலைத் திணையாக அமைந்துள்ளதும், வளம் சுருங்கி இயல்பு இதுவே என முல்லையும், குறிஞ்சியும் திரிந்த பாலை நிலத்தில், சிறுபொழுது பகலாகவும், பெரும்பொழுது இளவேனில், முதுவேனிலுடன் பின்பனியும் இருக்கும்.
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 6) “பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 7) “வைகறை விடியல் மருதம்; எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 8) “நடுவு நிலைத் திணையே நன்பகல் வேனிலொடு முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 9) “பின்பனி தானும் உரித்தென மொழிப” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 10) கார் = கார்காலம் வேனில் = கோடை வெயில் யாமம் = நள்ளிரவு நெறித்தல் = முறிப்புக் கொள்ளல் எற்பாடு = காலை நேரம் முன்னிய = முற்பட்ட நடுவு நிலைத் திணை = பாலை நிலம் இத்தனையும் கூறியுள்ள தொல்காப்பியர், திணைக்குரிய ஒழுக்கங்கள் அவற்றுக்கு மாறுபட்டு நிகழ்வதும் தவிர்க்க முடியாத ஒன்று எனக் கூறிவிட்டு; ஆனால் நிலங்கள் தம்முள் மாறுபடுதல் இல்லையென்று இலக்கணமுணர்ந்த அறிஞர்கள் கூறுவார்கள் என்கிறார்.
“திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப புலன் நன்குணர்ந்த புலமை யோரே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 12) மயக்குறுதல் = மாறுபடுதல் கடிநிலை = நீக்கும் நிலை ஒருங்கு மயங்குதல் இன்றென = உடன்சேர்ந்து மாறுவது இல்லை குறிப்பு :- உரிய ஒழுக்கத்தில் விதி விலக்கானோர் உலகில் எக்காலத்திலும் இருப்பார்கள்.
