தொல்காப்பியப் பூங்கா
பகுதி 20 · 22 / 102
முதல் பொருளான நிலம் பொழுது இவற்றைத் தொடர்ந்து, உரிப் பொருளில் நிகழ்வுகள் குறித்து தெளிந்த பின்னர், கருப்பொருள் விளக்கம் அறிந்திடுவதும் இனி வரும் நிகழ்வுகளுக்குப் பின்னணி எனலாம். வழிபடுதெய்வம், வயிற்றுக்கு உணவு, விலங்கினம், மரம் செடி கொடிகள், பறவையினம், தோல் கருவிகள், தொழில், யாழ் அனைய நரம்புக் கருவிகள், இன்ன பிறவும் கருப்பொருள் என்பதில் அடக்கம். ஊர், நீர், பூ போன்றனவும் கருப்பொருள் என்பார்.
“தெய்வம், உணவே, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கரு என மொழிப” இந்தக் கருப்பொருள் பட்டியலில் பூவும், பறவைகளும் எந்த நிலத்திற்கு உரியவை என்று கூறப் பெற்றிருந்தாலும் - அவை பிற நிலங்களில் வரினும், அந்நிலத்தின் கருப்பொருளாகவே கொள்ளப்படும். “எந்நில மருங்கில் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்தவாகும்” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 18, 19) ஆயர், வேட்டுவர் என முல்லை நிலத்து மக்கள் போலவும் அவர்க்குத் தலைவர்கள் போலவும் - ஏனைய நிலத்து மக்களைப் பற்றியும் ஆராயும்போது அவ்விடங்களிலும் உழவர், உழத்தியர், ஊரன், மகிழ்நன் என்று திணைப் பெயர்கள் உள்ளன.
“ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே” “ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 21, 22) ஆவயின் = அவ்விடம் கிழவர் = தலைவர்கள் “ஏவல் மரபின் ஏனோரும் உரியர் ஆகிய நிலைமை அவரும் அன்னர்” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 24) உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற நிலையினைக் கொள்ளாமல் பன்னெடு நாட்களுக்கு முன்பே பழந்தமிழர் காலத்தில் ஏவல் மரபினரெனப்படும் பணிவிடை புரிவோருங்கூடத் தலைவர்களாக உரிமையுடையவர்களாக இருந்தனர் என்கிறது தொல்காப்பியம். ஏவல் மரபு என்பதற்குப் பணியாளர் மரபு என்பதை விடுத்து; பணி ஏவுகின்ற மரபு என்றும் பொருந்தாப் பொருள் உரைப்போரும் உண்டு.
ஏனோர் = மற்றவர்.
