உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 21 · 23 / 102

காடுறை உலகம், தீம்புனல் உலகம் என்று நிலங்களை உலகம் என்றே குறித்துத் தொல்காப்பியர் காட்டுவதைக் காணும்போது தமிழ் இனத்துக்கு இணையான, தனித்த பெருமையும், சிறப்பும் இல்லா விடினும் உலகம் எனும் பொதுவான கண்ணோட்டத்துடனேயே மாந்தர் தம் வாழ்வை, அவர் வகைப்படுத்துகிறார் என்பது புலனாகிறது. ஒவ்வொரு நிலத்திலும் உள்ள மரபும், தொழிலும் திட்டவட்டமாக அந்த நிலங்களில் மட்டுமே அல்லாமல் மற்ற நிலங்களுக்கும் ஊடுருவின எனினும்; சிறிது தலைகாட்டிப் பரவின எனினும் பெரும்பாலும் குறித்துணர்த்தப்பட்ட அந்த வகை நிலங்களுக்கே உரியதாகக் கருத வேண்டியுள்ளது.

ஒவ்வொரு திணைக்கும் மரபு பற்றி வரும் பெயரும், தொழில் பற்றி வரும் பெயரும் என்று இருவகைப்படும். “பெயரும் வினையும் என்று ஆ இருவகைய; திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 20) “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 26) இரு செயலிலும்; அறிவிலும், ஒழுக்கத்திலும், ஆற்றலிலும் உயர்ந்தோர் பொறுப்பேற்க விட வேண்டுமென்கின்றார்.

அரசனோ அல்லது தனது தானைத் தலைவர்களோ அரசனின் விருப்பத்திற்கேற்பப் போருக்குச் செல்லலாம்; அது அரசனின் பொறுப்பு என்கிறார். “தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 27) எனவே தலைமை ஏற்பதற்கு, நிலம் ஆள்வதற்கு, போர் புரிதல், ஓதுதல், தூது எனும் அரிய பணிகளுக்கு, உரிய ஒழுக்கத்திலும் ஓங்கிய அறிவிலும் வீரத்திலும் உயர்ந்த சிறந்தோர் இருந்திடல் வேண்டும் என்பதோடு; ‘முல்லை’ முதலாகச் சொல்லப்பட்ட எல்லா நிலங்களிலும், தெய்வவழிபாடும், விழாக்களும் செம்மையாக நடைபெறவும் மக்கள் தவறான வழியிற் செல்லாமல் தடுத்து நிறுத்தப்படவும், பொருள் ஆக்கப்படுவதற்கும் காக்கப்படுவதற்கும் பிரிவுகள் அமைவதைக் குறிப்பிடுகிறது இந்த நூற்பா.

“மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய, முல்லை முதலாச் சொல்லிய முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 28) இவ்வாறு, குறிப்பிட்ட நிலத்துக்குரிய, ஆளுமையானது; தலைமக்கள், நிலமக்கள், அடியோர், வினையாற்றுவோர் என நால்வருக்கும் உரியதாகும். “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்து” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 29) நால்வருக்கும் என்பதை உரையெழுதிய ஒரு சாரார் “நால்வருணத்தார்” எனத் திரித்துக் கூறுவர்.

ஆளுமைக்காக அமைக்கப்பட்ட எல்லாப் பிரிவுகளுமே வருணம் காரணமான பிரிவுகள் என்பது குறுகிய நோக்குடன் வாதாடும் “பெரியோர்”(?)களின் வக்கிரச் சிந்தனையே தவிர வேறில்லை.