உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 22 · 24 / 102

கல்லூரி வகுப்பறையில் தமிழ்ப் பேராசிரியர் ஓர் அறிவிப்பு செய்தார். “மாணவ மணிகளே; தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பரிசுப் போட்டி அறிவிக்கிறேன். பழந்தமிழ் இலக்கிய மரபுக்கும், வரலாற்றுண்மைக்கும் மாறுபாடு இல்லாத முறையில் உங்களில் யார் ஒருவர், கவரும் நடையில் கற்கண்டுத் தமிழில் ஓர் ஆணையும் பெண்ணையும் கதாபாத்திரங்களாக்கிக் கவின்மிகு காட்சியொன்றைச் சித்தரிக்கிறீர்களோ அதில் முதல் பரிசு பெறுபவருக்கு ஐயாயிரம் ரூபாய்க்கான இலக்கிய நூல்கள் வழங்கப்படும்.

உம்; இப்போதே எழுதத் தொடங்கி வகுப்பு நேரம் முடிவதற்குள், என் முன் வந்து படித்துக்காட்ட வேண்டும்.” அந்த அறிவிப்பை வரவேற்ற மாணவர்கள், பரிசைப் பெற்றிட ஆர்வமுடன் நான் முந்தி நீ முந்தி என அங்கேயே எழுதத் தொடங்கி விட்டார்கள். “பரிசு பெறுவதற்கு மற்றொரு நிபந்தனை! முதலில் எழுதி முடிக்கவேண்டும். எழுதியது பரிசுக்குரியதாகவும் இருக்க வேண்டும்” அறிவிப்பு முடிந்து ஒரு மணி நேரத்திற்கெல்லாம், போட்டியில் கலந்து கொள்ளும் முதல் மாணவனாக “பேராசிரியர் அய்யா!

எழுதி முடித்து விட்டேன்” என்று எழுதிய தாள்களுடன் அவரிடம் சென்றான், முகிலன்! “அப்படியா! மகிழ்ச்சி! எங்கே உரக்கப்படி” என்றார் தமிழ்ப் பேராசிரியர்! மாணவன் முகிலன் மடமடவெனப் படிக்க ஆரம்பித்தான். “காதலன், காதலியிடம் சென்று வருத்தமாக உட்காருகிறான். காதலி, அவனைப் பார்த்து; ‘ஏன் வருத்தம்? எதற்காக இந்த முகவாட்டம்?’

எனக் கேட்கிறாள். ‘ஊடல்’ என்கிறான் அவன். “ஊடலா? அப்படியென்றால். . .?” “சரிதான் போ, ஊடல் என்றால் தெரியாதா? திருக்குறள் இன்பத்துப் பாலிலேயே தலைசிறந்தது அதுதானே! ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் சிணுங்கிக் கொள்வது; பிறகு சமாதானமாகிச் சந்தோஷமாக இருப்பது!”

“சிணுங்குவானேன்? பிறகு சமாதானம் ஆவானேன்?” “சமாதானமாவதற்காகவே சண்டை போட்டுக் கொள்வதுதான் ஊடல்!” “சரி; சண்டையை ஆரம்பியுங்கள்!” “உனக்குப் பிடிக்காத செய்தி ஒன்று சொல்லப்போகிறேன்!” “என்னத்தான் அது?” “நாளைக் காலையில் உரோமாபுரிப் பயணம்!”

“மறுபடியும் வெளிநாட்டுக்கா?” “ஆமாம், தமிழ்நாட்டு முத்துக்களை ஏற்றிச் செல்ல வேண்டும்” “அய்யோ! கடல் அலையில் கட்டுமரம் போல் தவிப்பதற்கோ நான் பிறந்தேன்? இல்லை; உங்கள் பயணத்தைத் தடுப்பதற்குத் துணிந்தேன்” “தடை வேண்டாம். தணல் வேண்டாம் உன் விழியில்! புனல் கடந்து ஒளிமுத்து விற்று வந்தால் மடை திறந்த வெள்ளம் போல் பொற்காசு குவியும்; விடை கொடு பாவாய்!”

“குத்து விளக்கொன்றை இங்கே தவிக்கவிட்டு, கத்து கடல் கீறிச் செல்கின்றீர்; நான் செத்து மடிந்தபிறகு என்னை வந்து காண்பீர்!” “அடடா; இதோ பார்! சிப்பியிலே விளையாத சிரிப்பு முத்து நீ காட்டப் போகிறாய்! என் சிந்தையிலே உறவாடும் செந்தமிழே! என்னுடன் நீயும் வருகிறாய் உரோமாபுரிக்கு! சரிதானே!”

அதுகேட்டு சத்தான முத்தங்கள் சத்தமுடன் தந்து அவள் அத்தானைத் தழுவிக் கொண்டாள். வகுப்பறையில் முகிலனைப் பாராட்டி மாணவர்கள் கையொலி செய்தனர். பேராசிரியராம் தமிழ் ஆசிரியர்; “என்ன மாணவர்களே! முகிலனுக்கு முதற் பரிசு தரலாமா? ஆனால் ஒன்று, இது முழுமையாக முகிலன் எழுதியதில்லை; பூம்புகார் நாடக உரையாடல் சில வரிகளைப் படித்தது போல இருக்கிறது! முல்லைக்கொடி என்ற மாணவி குறுக்கிட்டாள் - “ஆசிரியர் அவர்களே!

நண்பர் முகிலன் எழுதியது இலக்கிய மரபையும், பழந்தமிழ் மரபையும் ஒட்டியதாக இல்லை! பூம்புகார் உரையாடலும் இப்படி இல்லை!” “என்னம்மா உன் மறுப்பு? எங்கே; நான் நினைப்பதைச் சொன்னால் உனக்குப் பரிசு வழங்கப்படும்” “அய்யா; கடந்த வாரம் நீங்கள் நடத்திய தொல்காப்பிய வகுப்பில்; “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை” என்ற செய்யுளுக்கு, கடல் வழிப் பயணமாக வெளிநாடு செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்வதில்லை என்று பொருள் கூறி; பழந்தமிழர்கள் மரபை விளக்கினீர்கள் - ஆனால் இப்போது முகிலன் எழுதியது அதற்கு முரண்பாடாக இருக்கிறதே?”

“ஆமாம், முல்லைக்கொடி! நான் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டாய்! தம்பீ முகிலன்; உன் கட்டுரை அருமை! - நீ வர்ணித்த காட்சி கண்ணிலேயே நிற்கிறது! ஆனால் முல்லைக்கொடி எழுப்பியுள்ள மறுப்புக்குத்தான் பரிசு!” அதற்கும் மாணவர்கள் கையொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 34)