தொல்காப்பியப் பூங்கா
பகுதி 23 · 25 / 102
பரிசளிக்கப்பட்ட புத்தகங்களுடன் முல்லைக்கொடி வகுப்பறையை விட்டு வெளியே வந்தபோது, முகிலன் அவள் அருகில் நெருங்கி; “மகிழ்ச்சி! நல்வாழ்த்துகள்” என்று முறுவல் பூத்த முகத்துடன் சொன்னான் என்றாலும், முல்லைக்கொடி மீது தனக்கிருந்த கோபத்தை வெளிக்காட்டவே விரும்பினான் என்பது தெரிந்தது.
“முகில்! தூக்க முடியவில்லை இந்தப் புத்தகங்களைக் கொஞ்சம் பிடி!” “ஆங்! நான் என்ன தூக்குத் தூக்கியா?” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பரிசுப் புத்தக அடுக்கினை முகிலன் வாங்கிக்கொண்டான். “ஏன் முல்லை; அது என்ன புதுமைப் பெண் நீ! நீ போய் ஆண் ஆதிக்கத்திற்கு ஆலவட்டம் சுற்றினாய்?”
“நானா? ஆணாதிக்கத்துக்கு ஆலவட்டமா?” “ஆமாம்; மகளிர், கடல் பயணம் ஆண்களுடன் போகக்கூடாது - என்ற தொல்காப்பியக் கருத்துக்கு நீ வக்காலத்தா?” “அது தொல்காப்பியர் கருத்தென்று யார் சொன்னது? பழங்காலத்தில் அப்படி ஒரு பண்பாடு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது; அதை அவர் மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார்” “அந்த பிற்போக்கான கொள்கைக்குப் பெண்களைத் தள்ளக் கூடாது என்றுதான் அதை நான் குறிப்பிடவில்லை!
அதாவது தனக்கு எதிரான விஷயத்தை ஒரு பெண் ஆதரித்துச் சொல்லி, அதற்கு ஒரு பாராட்டைப் பெற்றுவிட்டாய். சரியான பெண்ணடிமைத் தனம்! தொல்காப்பியமே இப்படித்தான் பெண்களைச் சித்தரிக்கிறது!” “இந்த வரலாற்று உண்மைகள், அந்தக் கால மக்களின் வாழ்க்கை நிலைகள், அவர்களின் நம்பிக்கைகள், அதன் அடிப்படையில் அவர்களது நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்று கூட மறைக்காமல் எடுத்துக்காட்டுவதே இலக்கியம். ஒன்று தெரியுமா முகில்; பெண்களுக்குக் கடல் பயணம் கூடாது என்றிருந்ததை எடுத்துக்காட்டியவர், பெண்களுக்கு ஒரு நன்மையும் அந்தக் காலத்தில் இருந்ததைச் சொல்லியிருக்கிறார்!”
“என்ன அது; முல்லை?” “காதலியை எப்படியும் அடைய வேண்டுமென்று ஆண்கள் மடலேறுவார்கள் அல்லவா அந்தக் காலத்தில். . . . .!” “ஆமாம்! பனங்கருக்கால் குதிரை செய்து, அதன்மீது உட்கார்ந்துகொண்டு - கையில் காதலியின் படம் வரையப்பட்ட கொடியைப் பிடித்தவாறு, பனங்கருக்கினால் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியக் கசிய - பெண்ணைக் கொடுங்கள் என்று தெருவில் போய்க்கொண்டே பெண்ணின் பெற்றோரை வற்புறுத்துவார்கள், ஆண்கள்; அதற்குத்தான் மடலேறுதல் என்று பெயர்!”
“அந்த வேதனை எங்களுக்கு வேண்டாம் என்று; மகளிர் மடலேறுதல் கூடாது என்று தொல்காப்பிய காலத்திலேயே தடுக்கப்பட்டிருக்கிறது!” “எங்கள் காதல் நிறைவேற நாங்கள் மடலேற வேண்டும்; உங்கள் காதல் நிறைவேற வேண்டுமென்றால் மட்டும். . . .” “நாங்கள் மடலேறத் தேவையில்லை; மடல் எழுதினாலே போதும்!”
“அப்படியா? அவ்வளவு சுலபமாகவா? எழுதட்டுமா?” “மணவிழா மடல் தானே!” என்று கேட்டு முல்லைக்கொடி நாணத்துடன் நகரத் தொடங்கினாள், முகிலனிடமிருந்த புத்தகங்களை வாங்கி அவற்றை மார்பகத்தில் அணைத்துக்கொண்டு! “அந்தப் புத்தகங்களாக நானிருக்கக் கூடாதா?”
என்று முகிலன் கேட்கவில்லை. கேட்டது போல இருந்தது அந்தக் குறும்புப் பார்வை! “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மையான” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 35) (பெண்கள் மடலேறுதல் சிறப்பான ஒழுக்கம் இல்லை)
