உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 24 · 26 / 102

பொருளதிகாரத்தில் பழந்தமிழ்ச் சொற்கள் அல்லது சொற்றொடர்களுக்கு உரையெழுதிய உயர்ந்தோர் பலரும்; அன்றும் சரி, இன்றும் சரி அவற்றைப் படிப்போரின் புலமை குறித்துக் கவலைப்படாமல்; இசை நிகழ்ச்சியில் குழுமியிருக்கின்ற ஆயிரக்கணக்கான ‘ரசிகர்’களுக்கிடையே சுமார் நூறு பேருக்கும், இசைவாணருக்கும் மட்டுமே தெரிந்த இசை நுணுக்கங்களை வெளிப்படுத்திப் பாடுவதே போல்; இயல்பாக அனைவருமே படித்து எளிதாகச் சுவைக்கக்கூடிய உரைகளையோ, விளக்கங்களையோ வழங்காமல் கற்பாறைப் பாதைகளிலேயே இலக்கியப் பயணத்தை நடத்தியுள்ளனர். குறிப்பாக “திணை” என்றால் என்ன என்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பார்கள்!

திணை என்றால் ஒழுக்கம், குலம், நிலம் தொடர்பாக வழங்கப்படும் பெயர் - உயர்திணை என்பது மக்களையும், அஃறிணை என்பது மக்கள் அல்லாதவற்றையும் குறிக்கும். அகத்திணை என்பது தலைவன் தலைவியரின் உள்ளங்கள் இணைதல், பிரிவு, ஊடல் போன்ற செய்திகளையும் பொதுவில் இல்லற வாழ்க்கையையும் கூறுகிற அகம் எனப்படும் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் ஆடவன் காதலித்துப் பெண் காதலிக்காமல் இருந்தாலும், பெண் காதலித்து ஆடவன் காதலிக்காமல் இருந்தாலும் அதைக் “கைக்கிளை” என்றும், வலியச் சென்று கூடுவதற்கு முனையும் பொருந்தாக் காதலை பெருந்திணை என்றும் கூறப்படுகிறது.

ஐந்திணை என்பது, தலைவனும் தலைவியும் அன்பால் பிணைந்து கூடி மயங்குவதைக் குறிஞ்சித் திணை எனவும், கூடிய பிறகு அவர்கள் பிரிந்திடும் நிலையைப் பாலைத் திணை எனவும், ஊடல் கொள்ளுவதை மருதத்திணை எனவும், ஊடல் காரணமாகவோ வேறு காரணமாகவோ பிரிவு காலத்தில் காத்திருந்து வரவு பார்த்தலை முல்லைத் திணை எனவும், பிரிந்த நாட்களின் எண்ணிக்கை பெருகிடப் பெருகிட இரங்கலுக்குரிய நிலை அடைவதை நெய்தல் திணை எனவும் கூறப்படுகிறது. தலைவன் தலைவிக்கிடையே கூடலோ, ஊடலோ, பிரிவோ, எதுவும் எல்லாத் திணைகளிலும் நிகழக்கூடியதே!

இங்கே திணை என்பதை இடமென்றோ நிலமென்றோ கொண்டிடல் வேண்டும்! அகத்திணைக்கு மாற்றாக அல்லாமல் வேறொரு திணையாகக் குறிக்கப்படுவதே புறத்திணையாகும்! அகம் எனப்படுவது; காதல், இல்வாழ்க்கை என்று ஆடவர் பெண்டிர் இருவர்க்கு மட்டுமே உரியதானதும், பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாததுமானது என்றிருக்கும் நிலையில், புறம் என்பது இல்வாழ்க்கையைக் கடந்து வெளியே நிகழக்கூடிய போர்கள், பொருளீட்டும் செயல்கள், பொதுப்பணிகள் போன்ற பகிர்ந்து கொண்டு ஆற்றக் கூடியவை என்ற நிலையுடையதாகும்.

ஐவகை நிலங்களிலும் நிகழ்வுற்ற மாந்தர் வாழ்வில் வீசிய தென்றல், அடித்த புயல், வெடித்த நில நடுக்கம் போன்றவற்றை அடுத்தடுத்துத் தொடர்ந்து எழுதுவதற்கு இந்த எளிமையான விளக்கம் பயன்படுமென்று நம்புகிறேன். அகத்திணையில் காணும் நிகழ்வுகள் போல, புறத்திணை நிகழ்வுகளும் பொதுவாக எல்லா நிலங்களிலும் - சிறப்பாக, குறிப்பிட்ட நிலங்களிலும் காணக் கூடியவை.