உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 25 · 27 / 102

ஆசைக்கயிறில் ஆணையும் பெண்ணையும் கட்டிப் போட்டு; ஆனால் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்க முடியாமல்; இன்பச் சிகரம் எட்டிப் பிடிக்க இயலாமல் ஊசலாட விடுவது காதல்! அந்தக் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி, தன்னைப் பெற்ற தாயின் அருகே படுத்திருக்கிறாள். தாயின் கை அவள் மீது மெல்லப் படர்ந்த கொடி போலவும், அதுவும் காற்றில் மெதுவாக அசையும் கொடி போலவும் அன்பு மகளின் மீது ஊர்ந்தும், நகர்ந்தும் அவள் விழித்துக் கொண்டிருப்பதை அந்த மகளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

முல்லை நிலத்துக்குரிய குளிர் பருவம் அது. அந்நிலத்துக்குரிய சிறு பொழுது எனப்படும் நடு யாமத்தில்கூட அந்நிலத்தின் வழிபாட்டுக்குரிய கண்ணனைப் போற்றி முழங்கிடும் ஒலி தாயின் செவியிலும், தங்க மகளின் செவியிலும் உரக்க ஒலித்து அடங்கியிருந்தாலும் மலைமுகடுகளிலும் காட்டு மரங்களிலும் இன்னமும் எதிரொலிப்பது போலவே அவர்கள் இருவர்க்கும் தோன்றியது. திடீரென அந்தத் தலைவி எழுந்து உட்காருகிறாள். தாய் விழித்துக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

புரண்டு படுக்கிறாள். மகளோ உட்கார்ந்திருந்தவாறே கைகூப்பி, “கண்ணா! உன் கருணைக்கு நன்றி! நான் விரும்பியது போலவே அவரும் என்னை மறப்பதற்கு ஒப்புக் கொண்டார். நானும் அவரை இனி நினைக்க மாட்டேன்” பரவாயில்லை, முல்லைத் தெய்வம் தன் மகள் மனத்தையும், அவன் மனத்தையும் மாற்றிவிட்டது என்ற மகிழ்ச்சியில் அந்த அன்னை விழி மூடினாள். சூழ்ச்சி பலித்ததென்று சற்று நேரம் தாயின் அருகில் படுத்திருப்பதாகப் பாவனை காட்டிய அந்த இளமயில், தனது பூனைப் பாதமும் பூமியில் அழுந்தாமல் நடந்து வந்து, வெளியில் மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த ஆணழகனின் தோளைப் பற்றிக் கொண்டாள்.

தொடர்ந்தனர் இருவரும் பயணம்! பெற்றோர் அறியாமல் இவ்வாறு காதலியைக் கொண்டு செல்லும் “கொண்டு தலைக் கழிதல்” எனும் செயலைக் காதலன் செய்து, அதற்குக் காதலியும் உடன்பட்டு உடன் சென்றதை வைகைப் பொழுதை அறிவிக்கும் சேவல் கூவியதால்; விழித்துக் கொண்ட, தாய் உணர்ந்து அதிர்ந்து ஆடிப்போனாள். இந்த ஏற்பாட்டுக்குத் துணை புரிந்த தோழியோ; தானும் அந்தத் தாயுடன் சேர்ந்து வருந்துகிறாள். பச்சிளம் சிசுவாய்ப் பக்கம் படுத்திருந்து கொவ்வைச் செவ்வாய் கொண்டு என் கொங்கையில் பாலருந்திய நாள் முதல், பலா, வாழை, மா எனப் பழங்கள் உண்டும் தேனுடன் தினைமாவும் தின்று வளர்ந்துப் பருவமடைந்த காலம் வரையில் என் நிழலிலேயே இருந்த நேரிழையாள் நேற்று வந்த உறவுடன், பருத்திக் காய் வெடித்துப் பறக்கும் பஞ்செனப் பறந்து விட்டாளே; அவளை நத்திக் கிடந்த எனை விடுத்துச் சென்றவளும், அவளை அழைத்துச் சென்றவனும் நலமுடன் இருப்பதற்கு சகுன சாத்திரம் பார்க்க வேண்டாமா தோழி?

அருள் வாக்கு கேட்க வேண்டாமா? முல்லைத் தெய்வமாம் கண்ணனுக்கு வேண்டுதல் செய்ய வேண்டாமா? செல்லும் வழியில் அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ? இப்போது அவர்கள் கதி என்னவோ? இனி எத்தகைய தீமைகளை எதிர்கொள்ள வேண்டுமோ? என்று மகளும், மகளின் காதலனும் தன்னை ஏமாற்றியது குறித்து சினம் கொள்ளாமல்; அந்த நல்ல மனம் கொண்ட தாய்; அவர்களைக் கேடு எதுவும் சூழக் கூடாதேயென்று வழியில் காணுகின்றவர்களிடமெல்லாம் புலம்புகிறாளாம்; அவள்தானே தாய்!

“தன்னும் அவனும் அவளும் சுட்டி மன்னு நிமித்தம், மொழிப் பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சம் சார்தல் என்று அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி உரிய” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 36)