உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 26 · 28 / 102

தலைவன், தலைவியைத் தன்னுடன் இட்டுச் செல்லும் வேளையில் இடையில் துணையாக இருக்கும் தோழியின் பொறுப்புமிக்கப் பணிகள் பொருளதிகாரத்தில் பட்டியலிட்டுக் காட்டப்படுகின்றன. “தலைவியைத் தனி விடுத்து நீ மட்டும் தன்னலத்திற்காகவோ, பொதுநலத்தின் பொருட்டோ பிரிந்து செல்வது எவ்வகையில் நியாயம்?”

எனக் கேட்டு; “உனைப் பிரிந்து அவள் உயிர் வாழ்வாள் என்பது நீரை விட்டுப் பிரிந்த மீன், வாழும் என்ற கதைதான் என்பதை நினைத்துப் பார்த்து, அவளையும் அழைத்துப் போவாயாக!” என்று தலைவனிடம் கூறுகிறாள். அதற்கிடையே தன் உற்றார் உறவினரை விட்டுச் செல்வதால் ஏற்படக்கூடிய துன்பங்களை எண்ணி வருந்தும் காதல் தலைவியின் கண்ணீரைத் துடைத்து, அவளை அவனுடன் அனுப்பிவைக்க தோழி முயற்சி மேற்கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு திடீரென ஒரு ஐயப்பாடு!

“இவன் இவளை உண்மையாக அன்பு காட்டிக் காதலித்தாலும்கூட, ஒரு நாள் மாயோன் கோயில் மலர்ச்சோலையில் இவளைப் போலவே இன்னொருத்தி கையில் எட்டாத கிளையிலிருந்த கனி பறித்துக் கொடுத்து விட்டு, குறும்புச் சிரிப்புடன் கரும்புக் கேள்வியொன்று கேட்டானே; அந்தக் கனி கிடைத்துவிட்டது - இந்தக் கனிகள் கிடைக்குமா என்று! அத்துடன் அவளை ஏற இறங்கப் பார்த்தானே; இப்படி உண்மைக்கும் பொய்க்கும் ஒரே உருவமாய் இருப்பவனை இவள் அறிந்து கொள்ள வேண்டாமா?”

என ஒருக்கணம் நினைத்துப் பார்த்தாள். ஆனாலும் ஒரு திருப்பம் அவள் மனத்தில்! தலைவனைப் பற்றியும், தலைவியின் தாயாரின் நிலைமை பற்றியும் எண்ணிய தோழிக்கு, மாயோன் கோயில் மலர்ச்சோலை நினைவு மன மாற்றத்தை ஏற்படுத்திய போதிலும்; காதலன் பிரிவைத் தன்னால் தாங்கவே இயலாது என்று கலங்கித் தவித்துத் துடித்துத் துவண்ட சுடர்க் கொடியாளின் சோர்வகற்ற, அவளின் காதலன் கூறிய ஆறுதல் மொழிகளைக் கூறித் தேற்றினாள். ஆனால் அது, பயனின்றி, “தனிமைத் தணலில் பசலைக்கொடி போல் வதங்கிடவோ நான்!”

எனக் கேட்டாள்; கேட்கும்போதே தணலில் விழுந்தது போல! தோழி அவளைத் தேற்றி மகிழ்வித்து அவனுடன் சேர்த்து அனுப்ப முன் வந்தாள். தலைவனையும், தலைவியையும், தாயையும் நயந்து நலம் செயும் தோழியின் பணிகள் வியந்து நோக்கத் தக்கதே! “தலைவரும் விழும நிலை எடுத்துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும், நீக்கலின் வந்த தம்முறு விழுமமும், வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகித் தன்நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு என்றிவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன.”

(பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 39) விழுமம் = தொல்லை கலுழ்தல் = கலங்குதல் வன்புறை = தலைவன் தலைவிக்கு ஆறுதல் மேன = மேயின