தொல்காப்பியப் பூங்கா
பகுதி 27 · 29 / 102
காதலால் கட்டுண்ட தலைவியை அழைத்துச் சென்றான் தலைவன்! இந்தக் “கொண்டு தலைக் கழிதல்” எனும் செயல், முல்லைத் திணையில் தொடங்கி பாலைத் திணையிலும் பயணம் தொடர்வதால் தொல்காப்பியப் பின்னணியில் கலித்தொகைக் காட்சியொன்றையும் காணும் வாய்ப்பைப் பெறுகிறோம். வைகறைப் பொழுதில் தாயைப் பிரிந்து, காதலனின் கைதனைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டவள், மான்களும் முயல்களும் கொன்றை, காயா, குருந்தம் எனும் மரங்களிடையே துள்ளிக் குதிப்பதையும் முல்லைப் பூவும், குல்லைப் பூவும், பிடவம்பூவும் மலர முனைந்து படர்ந்து கிடப்பதையும்; சாமை, வரகு போன்ற உணவு தானியங்களை வேளாண் பெரு மக்கள் விதைப்பதற்கு ஓடோடுவதையும் கண்டவாறு அவனுடன் செல்கிறாள்.
வைகறை தேய்ந்து விடியல் வெளிச்சம் தோன்றிவிட்ட நிலையில் அவர்களை யாரும் காணாமல் இருக்க முடியாது. வானில், வாரியிறைக்கப்பட்டது போல மின்னுகின்ற விண்மீன்களோ; எம்மைப்பார் என்று நம்மை இழுக்கின்றன! எண்ணற்ற அந்த விண்மீன்களுக்கிடையே ஒரே ஒரு நிலவைத்தானே முதலில் காண்கிறோம். அப்படி வந்த நிலவுதான் அந்த ஆரணங்கு! அழகில் அவளோர் சிலை! அசைவிலோ அற்புதக் கலை! அவளுக்கேற்ற வனப்பும் வலிமையும் கொண்ட காதலனுடன் அவள் செல்வதைக் காணும்பொழுது அந்த இணையின் பொருத்தத்தை ஒருக்கணம் தமக்குள் பாராட்டிச் செல்லாதார் யாருமில்லை.
தொலைதூரம் கடந்து பாலை நிலத்தில் அவர்களின் பயணம் நடக்கும்போது எப்படியும் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமெனச் செவிலித்தாய் பின்தொடர்ந்து வருகிறாள். இளைத்துப் போன யானைகளும் செந்நாய்களும் திரியும், நீரில்லாக் குளங்களும் கிணறுகளும் நிறைந்த அந்த நிலத்தில் பறை ஒலியையும், பாலை யாழ் இசையையும் கேட்டுக் கொண்டு, தலைவியின் வளர்ப்புத் தாய், வழியில் சந்திப்போரிடமெல்லாம் தன் மகளைப் பற்றியும் மகளின் மனம் கவர்ந்தவனைப் பற்றியும் விசாரித்துக் கொண்டு வருகிறாள்.
“தாயே! நீ ஏன் தனியாக அச்சமூட்டும் வழியில் அவர்களைத் தேடி அலைகிறாய்? இருவரையும் நாங்கள் கண்டோம். எங்கள் ஊர் மிகவும் அருகில் உள்ளது. எமது இடத்தில் தங்கிச் செல்லலாம்” என்று சொல்லி, அவர்களும் அவ்வாறே உடன்பட்டுத் தங்கியிருந்து பின்னர் நெடுந்தொலைவில் உள்ள ஊருக்குப் புறப்பட்டனர்.
சிற்றூரார் சொன்ன இந்தச் செய்தி செவிலித் தாய்க்குச் செந்தேனாய் இனித்தது; ஆனாலும் மகள் பிரிவு செந்தேளாய்க் கொட்டியது! “அம்மா; உன் நிலை எமக்குப் புரிகிறது. பிரிந்து போனவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தே மகிழும் தாய்; அவர்கள் விரும்பியவாறு மணம் முடித்துக் கொள்ளவும் துணையிருப்பது தானே மேலும் மகிழத் தக்கது” எனத் தடுக்கிறார்கள் அந்தத் தாயை! “பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும், புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்தெதிர் கூறி விடுப்பினும், ஆங்கு அத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டது என்ப” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 40) ஆறு = வழி உட்கு = அச்சம் நெடுந்தொலைவில் உள்ள ஊரா?
கவலையில்லை; கொடிய பாதை எனினும் கடிய பயணம் செய்து என் மகளை மீட்பேன் எனச் சூளுரைத்துப் புறப்பட்டாள் தாய்! அன்னை உள்ளமல்லவா; அலை மோதுமே! நன்றாயிருக்கிறாள் மகள் என நற்செய்தி கேட்டாலும், அவள்; வளர்ப்புத் தாயான தன்னுடனும் பெற்ற தாயுடனும் இருப்பதே சிறந்தது; இல்லையேல் இத்தனை நாள் அவளை வளர்ப்பதற்கு எடுத்த முயற்சி அனைத்தும் எங்கோ பறந்தது என்றெண்ணி உளம் புழுங்கி ஓடினாள், அவர்கள் சென்றதாகச் சொல்லப்பட்ட திக்கு நோக்கி!
வெயில் சுட்டெரிக்கிறது. எதிரே இறையன்பர்கள் சிலர் அப்பாலை வழியில் பயணம் செய்வோர் அந்தத் தாயைக் காணுகின்றனர். அவள், அவர்களிடம் தன் நிலையைச் சொல்லி; “மலைத் தோளனுடன் செல்லும் என் மகளைக் கண்டீர்களோ?” எனக் கேட்டுத் துடிக்கிறாள். “கண்டோம் அம்மா அவர்களை! காதலாம் பட்டுக் கொடி பறக்கிறது அவர்கள் இதயத்தில், அதைக் கத்தரிக்க நினைக்காதே தாயே!”
“என்ன சொல்கிறீர்கள்? பெற்றவளும் வளர்த்தவளும் புலம்பித் தவிக்க எமைவிட்டுச் சென்றவளுக்காக வாதாடுவது முறைதானா?” “அம்மையே, கேள்! மணக்கும் சந்தனம் மலையிலே பிறந்தாலும் - வளர்ந்தாலும் அது மலைக்குரியதல்ல; உடலிலே பூசிக் கொள்ளத்தான்! நீரிலே பிறந்தது என்று வெண்முத்து நீருக்குள்ளேயே இருக்க முடியுமா? அணிபவர்க்குத்தானே அழகு தரும்? யாழிலே பிறக்கும் இசை, யாழுக்கே இன்பம் தருகிறதா; அல்லது இசைப்பவர்க்கு இன்பம் தருகிறதா?
அன்னையே! உன் மகள் மலையில் பிறந்த சந்தனத்தையும், கடலில் பிறந்த முத்தையும், யாழில் பிறந்திடும் இசையையும் ஒத்தவள் - எனவே இப்போது உரியவரிடம் இருப்பதே உத்தமம்!” என விவரித்து விளக்கம் கூறி, அவள் கவலையை மாற்றுகின்றனர். “காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை; ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறிர்; பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை, நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை, யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? சூழுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!”
(பாலைக்கலி) அருஞ்சுரம் = நிழலற்ற நீளிடம் சாந்தம் = சந்தனம் முரல்பவர் = ஒலிப்பவர் காதல் தலைவனும் தலைவியும் கடும் சோதனைகளை வென்று, நிலையான வாழ்வு கண்டபிறகு, கற்பின் மாண்பு தவழ் இல்லறம் நடத்துகின்றார் என்றறிந்து; அதன் பின்னரும் தாயும், வளர்ப்புத் தாயும் அவர்களைத் தேடிச் செல்லும் வேலை விடுத்து; நாடிச் சென்று நலம்கேட்டு சில நாட்கள் உடனிருந்து சிந்தை குளிர்ந்தனர் என்பது இயற்கையாக எங்கும் நடப்பது தானே - அது இங்கும் நடந்திருக்குமென, பொருளதிகாரச் செய்யுளும், பாலைக்கலி பாடலும் இணைந்து கூறுகின்றன அல்லவா?
