தொல்காப்பியப் பூங்கா
பகுதி 28 · 30 / 102
ஆடவர்க்கு, மகளிரைப் பிரிந்து செல்ல எத்தனையோ காரணங்கள் அமைகின்றன. பிரிவு என்றாலே அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத தவிப்பு தையலர்க்கு ஏற்படுவதும், அத்துன்பம் துடைத்து, அவளிடம் விடைபெற்றுச் செல்லத் தலைமகன் படும்பாடும் சொல்லத் தரமன்று! போர்ப்பயிற்சி பெறவோ அல்லது அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் கல்வி பெறவோ; இவற்றைக் கற்றறிந்தவனாக இருப்பின் அவன் அறக்காவல் காரணமாகப் பிரிய வேண்டியிருக்கிறது; பிரியத்துக்குரியவளை விடுத்து!
போற்றுதற்குரிய காரியம் தானே போய்வரட்டுமே யென்று அந்தப் பொற்கொடியாள் நினைப்பதில்லை. அவன் இல்லாத வெறுமை நிலைக்கு கால அளவு குறைவானதுதான் என்றாலும் இருவருக்குமிடையே நூலொன்று நுழைந்து வெளியேறுவதற்கும் இடைவெளி கூடாது என இறுகத் தழுவிக் கிடக்கும் அவள் பிரிந்திருக்கும் நாள் ஒவ்வொன்றையும் தன் நெஞ்சைத் துண்டாடும் வாள் என்று தானே கருதுவாள். பிரிந்து சென்று தமிழ் இலக்கிய இலக்கணம் அறிந்து வருவதாலும், போர்ப்பயிற்சி பெற்று வருவதாலும் வீட்டுக்கும் நாட்டுக்கும் விளையும் பயன் பற்றித் தலைமகளுக்கு அவன் விளக்கினாலும் அவள் விழியிரண்டும் அருவிகளாக மாறித்தான் விடை கொடுக்கும்.
அந்தத் தலைமகன் நிலமாளும் அரசனாக இருந்து, நட்பினால் கட்டுண்ட பிறிதொரு நிலமாளும் வேந்தனுக்குப் போரில் துணை புரியச் சென்றாலும், அல்லது வேந்தனால் வேற்று நாட்டுக்குத் தூதனாக அனுப்பி வைக்கப்பட்டாலும் போரில் வீரத்தையும் தூதில் விவேகத்தையும் காட்டும் பொறுப்புடையவனாகிறான். தன் வலியும், வினை வலியும், துணை வலியும் கணக்கிட்டு ஆட்படையில், குதிரைப்படையில், யானைப்படையில் பகையரசன் மேன்மையுற்றுத் திகழ்வதை அவன் எண்ணிப் பார்க்காமல் இல்லை.
எண்ணிப் பார்த்தும்கூட அவனே அவற்றை எதிர்கொண்டு வென்றிட முடியும் என்ற ஊக்கத்துடன் களம் நோக்கிச் செல்லத் தன் கண்மணியாம் காதல் தலைவியிடம் பிரியா விடை கேட்கிறான். நாட்டுக்காற்றிடும் கடமை என்பதற்காக நங்கையும்; கங்கை காவிரிகள் கண்களாக மாறிய நிலையில் ‘வீரரே வெற்றியுடன் வருக’ என விடை தருகிறாள். போர் நடந்த இடத்தில், புலியொன்று யானைகள் நடுவே சிக்கியது போல் சிக்கி உறுதிப்பாட்டின் வலிமையால் வெளிவருகிறான்.
போர் முடியவில்லை.....இரு தரப்புப் படைகளும் ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல என்பதை நமது தலைமகன் தன் ஆற்றல் கொண்டு நிலை நாட்டுகிறான். அப்போது தான் ஓர் இரவு போர்ப்பாசறையில் அந்தப் பொன்னவிர்மேனியாள் அவனைக் கனவில் வந்து கலக்குகிறாள். அவளை நினைத்துத் தனித்து வருந்துவதும் போர் வெறியைத் தணிக்குமென; அந்த நினைப்பைத் தவிர்க்கிறான். வெற்றிக் கொடி உயரப் போர் முடிகிறது. தேரோட்டியை விரைவுபடுத்துகிறான்; “தேன்மொழியாள் காத்திருப்பாள் - அவள் தரும் கதகதப்பு முத்தங்கள் என் காயங்களை ஆற்றட்டும்; கடுகிச் செல்” என்கிறான்....
“புரவிகளே; உமக்குப் புண்ணியமுண்டு; புயலாய்ச் சென்று என் பூங்கொடியிடம் எனைச் சேர்த்திடுக” என நெஞ்சால் கெஞ்சுகிறான். இவனே சில நேரம்; இடையில் - வழியில் - பரத்தையின் கடைவிழிபட்டு அவளையும் சந்தித்துக் குலவியதால்; இல்லத்தில் காத்திருந்தவள் செவியில் இந்தச் செய்தி விழுந்து; உடன் முளைத்திடும் ஊடல்! அதையும் நீக்கி இல்லற ஓடத்தை இன்ப ஆற்றில் போக்கிட வேண்டும்; இப்படி எத்தனை கடமையும் பொறுப்பும் இலக்கியத் தலைமகனுக்கு!
“வாயினும் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒருதிறத்தானும் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூது இடையிட்ட வகையினானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் காவற்பாங்கின் ஆங்கோர் பக்கமும் பரத்தையின் அகற்சியின் பரிந்தோள் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையொடு உரைத்திற நாட்டம் கிழவோன் மேன” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 41) பக்கம் = படை ஊதியம் = கல்வி பாங்கோர் = நட்பினர் தெளித்தல் = ஊடல் தெளிவித்தல் அகற்சி = பிரிதல் கிழவோன் = நிலத்தலைவன்
