தொல்காப்பியப் பூங்கா
பகுதி 29 · 31 / 102
தொல்காப்பியப் பூங்காவில் “உள்ளுறை உவமம்” என ஓர் இலக்கண ரோஜா மலர் உண்டு. ரோஜா என்று குறிப்பிடக் காரணம் முள்ளில் ரோஜாவாக; இலக்கணத்தில் இலக்கியமாக இம்மலர் இருப்பதால்தான். ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் காட்டுவது “உவமம்” எனப்படும். “உள்ளுறை” என்பது மறைபொருளாகச் சொல்லப்படுவது. எடுத்துக்காட்டாக ‘மருதக்கலி’ பாடலில் வெளிப்படையாகச் சொல்லப்படும் பொருளைக் கண்டால்; ஒரு இயற்கைக் காட்சியை ஊரின் ஒரு பகுதியில் பார்த்து ரசிப்பது போல் இருக்கும்.
“வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந்து ஊர்புகுந்த வரிவண்டு ஓங்குயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கவை விருந்து ஆற்றப் பகல் அல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழ்நர்ப் புணர்ந்தவர் தேங்கமிழ் கதுப்பினுள் அரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதாம் மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர்!”
வீங்கு நீர் = மிக்க நீர் ஞாங்கர் = இடம் கடாம் = யானை மத நீர் அல்கி = தங்கி வீங்குஇறை = பூரிப்பு மிகுதியால் பருத்த முன் கை நீர் பெருகிய வயலில் பூத்த கருங்குவளை மலர்களை விற்பனைக்குக் கொண்டு வரும்போது, அந்த மலர்களுடன் வண்டுகளும் சுழன்று சூழ்ந்து வருகின்றன. அப்படி வந்த வண்டுகள் யானைகளின் மதநீரில் மொய்த்துப் பருகுகின்றன. பகலில் இவ்வாறு பருகிய வண்டுகள், இரவுப் பொழுதில் முல்லை மலர்களில் பாய்ந்து மணம் நுகர்ந்திடுகின்றன.
பிறகு வேறு மலர்களை நினைக்காமலே தங்கள் இருப்பிடத்தையே மறந்து விடுகின்றன! மேலெழுந்தவாரியாகத் தோற்றமளிப்பவை கருங்குவளை மலர், வண்டு, யானை மதநீர், முல்லை மலர், பூம்பொய்கை என்பதால், இது வண்டுகளையும் மலர்களையும் பற்றிய ஒரு வர்ணனைக் காட்சியாகத் தெரியும். தலைவனின் பிரிவை நினைத்து வருந்தும் தலைவி ஆடவர்களை வண்டுகளாகவும், யானை மதநீரை தெருவில் திரியும் பரத்தைகளாகவும், பகல் பொழுதில் அவர்களுடன் ஆடிக்கிடந்த ஆடவர்கள், முல்லைப் பூக்கள் எனும் தமது காமக் கிழத்திகளுடன் அவர்தம் இல்லங்களில் இரவுப் பொழுதில் சுகித்திருப்பதாகவும் - தங்களின் இருப்பிடமான பூம்பொய்கையை மறந்து விட்டதாகவும் விரிகிறது இந்த உவமை.
தொடக்கத்திலேயே; தலைவி, தன்னுடைய தலைவனைப் போன்ற ஆடவர்களை வெளிப்படையாகக் குறிப்பிடாமல்; வெறும் உவமையை மட்டும் கூறி வருந்துவதால்; அவள் சொல்லவந்தது, மறை பொருளாக வைக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த உள்ளுறை உவமத்தின் வாயிலாக அவள் தன் உள் காயத்தைப் புலப்படுத்துகிறாள். பாவம்; தலைவி, பூம்பொய்கையாக இருந்து புலம்புகிறாள்! மருதக் கலியின் பாடலுக்கு இலக்கணம் கூறுவதே பொருளதிகாரத்தின் இந்த நூற்பா. “உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகஎன உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 48) உள்ளுறை = மறை பொருளாகச் சொல்லுதல் உள்ளுறுத்தல் = உட் கருதுதல்
