தொல்காப்பியப் பூங்கா
பகுதி 30 · 32 / 102
நால்வகை நிலமென்றும், இடைச்செருகலாக பாலை நிலமென்றும் ஐவகை நிலம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலத்திற்கும், தெய்வங்களும் குறிக்கப் பெற்று, தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தில் வேந்தன் என்று அழைக்கப்பட்ட, மருத நிலத்தின் தெய்வம்; சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிறமொழிக் கலாச்சார நுழைவினால் இந்திரன் என மாறிவிட்ட கால கட்டத்திலும்; அக்காலத்து அகத்திணையில் இடம் பெற்றுள்ள ‘கைக்கிளை’. இன்றைக்கும் இலக்கண அடிப்படையில் ‘கைக்கிளை’யை அறிந்திடாவிடினும் நடைமுறையில் காணக் கூடியதாகவே இருக்கிறது.
அதை ஒரு நாடகக் காட்சியாகவும் அதன் தொடர்ச்சியாக ‘கைக்கிளை’ விளக்கமாகவும் இங்கே சித்தரிக்கப்படுகிறது. மருத நில மக்கள் இந்திர விழா நிகழ்ச்சியை தாமரைப்பூ சூடியும், கழுநீர்ப் பூக்கள் அணிந்தும், காஞ்சி - வஞ்சி - மருதமெனும் மரங்கள் நிறைந்த பகுதியில், மருதயாழ் கொண்டு, மருதப்பண் இசைத்தும், கடா விடுதல், புது நீராடல் போன்ற களியாட்டங்களில் ஈடுபட்டும் - கொண்டாடுகின்றனர். நாடக அரங்கமொன்றும் அமைக்கப்பட்டு; ‘சாகுந்தலம்’ நாடகம் நடைபெறுகிறது.
இதோ முடிமன்னன் துஷ்யந்தனும், முனிவர் மகள் சகுந்தலையும் சந்திக்கின்றனர்; வனச் சோலையில் வற்றாது பாயும் அருவியோரம். “சகுந்தலா; இந்தச் சந்திப்பு நம் அழியாத காதலுக்கு அச்சாரம்!” “வேட்டைக்கு வந்த வேந்தர் தாங்கள் - ஏதோ, ஒரு மானைப் போல் என்னை வேட்டையாடிவிட்டு; காதலுக்கு அச்சாரம் இது என்று அரண்மனை சொல்வதை ஆசிரமம் ஏற்றுக் கொள்ள முடியுமா?”
“வேட்டையின்போது எத்தனையோ விலங்குகளைக் கண்டேன்; ஆனால் நீயும் உன்பால் எழுந்த காதலும் எனக்கு விலங்காகி விட்டதை உணர்கிறேன். இனி இந்த இடத்தை விடுத்து அரண்மனை நோக்கி ஓர் அடி கூட எடுத்துவைக்க மாட்டேன்” “வேண்டாம்; நாட்டுப் பொறுப்பை கைவிடாதீர்கள் - இந்தக் காட்டுப் பூவையும் கைவிடாதீர்கள்!”
“காட்டுப் பூவா நீ? இல்லை - என் உயிர்ப்பூ - ஆம்; என் உயிர்ப்பே நீ தான்!” “மறந்து விட மாட்டீர்களே?” “மறதியா? இந்த ரதியையா? இதோ மறக்கமாட்டேன் என்பதற்கு அடையாளம்; இந்தக் கணையாழி!” துஷ்யந்தன் சகுந்தலையின் விரலில் கணையாழி அணிவித்து, அவள் விரல்களை முத்தமிடுகிறான்.... (நாடகத்தின் மற்றக் காட்சிகள் தொடர்வதற்கு முன்பு மேடையின் பக்கமுள்ள ஒப்பனை அறைக்கு இருவரும் வருகிறார்கள்; ஒப்பனை திருத்தவும், உடைகள், அணிகள் திருத்தவும்) துஷ்யந்தன் வேடமிட்டவன், சகுந்தலை வேடமிட்டவளை ஒப்பனை அறையில் நெருங்கி வந்து; “என்ன தாமரை; கணையாழி அணிந்த விரல்களை முத்தமிட்டேனே; இன்னும் சுவைக்கிறதா அது?”
என்று கேட்டு பல்லை இளிக்கிறான். “நாடகத்தில்தான் நான் சகுந்தலை! நீங்கள் துஷ்யந்தன்!” “வாழ்க்கையிலும் அப்படியே இருந்தால் என்ன?” “புண்போடு பேசுங்கள்; உமது வயது என்ன? என் வயது என்ன?” “திடமான வாலிபன்தான் நான் - நீ இன்றைய அரும்பு; இன்னும் சில நாட்களில் மலர்! அரும்பு விரைவில் மலராகும் பெண்ணே; என் போன்ற ஆடவனை நினைத்து உருகினால்!”
“வீண் கனவு வேண்டாம்; விலகிச் செல்வீர்!” “நாடகத்தில் அடுத்த காட்சி; நான் உன்னை மறந்து விடுவது போல!” “கணையாழி காணாமற் போன பிறகு தானே அந்தக் காட்சி!” “காணாமற் போவதற்குள் கட்டித் தழுவி ஒரு முத்தம் கொடுத்தால்....” “அது இப்போதே காணாமற் போகட்டும்” என்று அவள் கணையாழியைக் கழற்றி ஒப்பனை அறைக்குள் வீசுகிறாள் - வெளியே வேகமாக நடக்கிறாள்; நடக்கும்போதே ஆசிரம முடியலங்காரத்தைக் கலைக்கிறாள்.
“அய்யோ பெண்ணே; கணையாழியை மீனல்லவா விழுங்க வேண்டும்? அதுவல்லவா கதை?” “அதற்குள் நீ என்னை விழுங்கி விடாதே” “தாமரை; நீ மிதப்பதற்கேற்ற தெண்ணீர்க் குளம் நான்!” அவளை இழுக்கிறான். அவள், சீறிச் சினந்து அவனைத் தள்ளிவிட்டு ஓடி விடுகிறாள். அந்தக் கோபத்தையும் ரசித்தவாறு நாடக துஷ்யந்தன் அசைவற்று நிற்கின்றான். இந்த ஒரு தலைக்காதலுக்குப் பெயர் தான் கைக்கிளை. “காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்று இரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல் - நூற்பா : 50) குறிப்பு :- காம உணர்வே அரும்பாத இளம் பெண் ஒருத்தியிடம், பெருமைக்குரிய துன்பத்தைக் காதலினால் அனுபவிப்பது போல் புகழ்ந்தும் பழித்தும் தனக்கும் அவளுக்கும் ஏற்ற சொற்களைக் கூறி அவளிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிட்டாமல் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு ஒருவர் அற்பமாகத் தோன்றுவதே கைக்கிளைக் குறிப்பாகும்.
