தொல்காப்பியப் பூங்கா
பகுதி 31 · 33 / 102
பனைமட்டையால் உருவாக்கப்பட்ட குதிரை மீது ஏறி; அந்த மட்டைகளின் முட்கள் உடலெங்கும் அறுத்துக் கீறி செந்நீர் ஆடி வருபவனைப் போல ஆண் மகனை ஆக்குகின்ற மடலேறுதல் வாயிலாக வற்புறுத்திப் பெண்ணை அடைய முனையும் முறையும், ஆண் பெண் இருபாலார்க்கும் இளமை தீர்ந்து போன பிறகும் கூடி முயங்க வேண்டுமென்ற கொள்ளை ஆசை குத்தீட்டியாகப் பாய்கிற நிலையும், என்னதான் அமைதிப்படுத்தினாலும் வீறிட்டழுது, துள்ளிக் குதிக்கிற முரட்டுக் குழந்தையைப் போல அடம்பிடித்து ஆட்டம் போடும் காம உணர்வின் உச்ச கட்டமும், கடற்கோள் எனக் குமுறிப் பொங்கும் வலிமையினால் காமந்தணித்துக் கொள்ளப் பாய்ந்திடும் செயலும், ‘பெருந்திணை’ எனப்படும்.
இந்த நான்கும் ‘கைக்கிளை’க்கும் விலக்கல்ல, அதற்கும் பொருந்தும். மடலேறுதல் தலைமகனின் இல்லத்து வாயிலோடு நிற்பதல்ல - அந்தப் பனைமட்டைக் குதிரை தெருவுக்கும் வரும் - ஊரின் பல பகுதிகளுக்கும் வரும். அவன் விரும்பும் பெண்ணின் பெற்றோர்; பெண்ணைத் தருகிறேன் என ஒப்புக்கொண்டு அவளை ஒப்படைக்கும்வரையில் அது நடக்கும். இல்லையேல், அந்த ஆடவன் ஆவி துறப்பது பற்றியும் கவலைப்படமாட்டான். ஆவி துறப்பான். இருபாலார்க்கும் - இளமை தீர்ந்த பின்னும்; இனி வரும் சந்ததியினர்க்கும், அந்தச் சந்ததியினர் உள்ளிட்ட மொத்தச் சமுதாயத்திற்கும்; “இருக்கும் காலம் வரையில் என்ன செய்யலாம்” எனும் நினைப்பே இருக்க வேண்டுமேயல்லாமல்; இன்பத்துப் பாலை இறுதிப் பாலாகக் குறளில் வைத்திருப்பதற்குக் காரணமே, “இறுதி!
இறுதி!” என இனியும் பருகிக் கொண்டிராமல் “இதுவே இறுதி” என எண்ணி முடிப்பதற்குத்தான் என்பதை உணர்ந்து மன்பதைத் தொண்டினைத் தொடருதல் வேண்டும். அடக்க முடியாத காமவெறியினாலும், வெறி தணித்திட நெறி கடந்து உடற்பசியைத் தீர்த்துக் கொள்ள முனைவதாலும் - கொலை, கற்பழிப்பு எனப்படும் சமுதாயத்தைச் சீரழிக்கும் கீழ்த்தரக் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் செயல்களில் தம்மையறியாமல் குறிப்பிட்ட சிலர் தள்ளப்படுகிறார்கள்.
அதனை விளக்கித் திருத்திட இந்தப் பெருந்திணைப் பெட்டகம்; பயன்படட்டும்! அல்லவை பட்டியலில் வருவது எவை எனக்காட்டவே; அறிவுச்சுடர் கொளுத்தி இவையும் அல்லவை என உணர்த்த பெருந்திணை பற்றிக் குறிக்கப்பட்டது. “ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (பொருளதிகாரம் - அகத்திணை இயல், நூற்பா : 51) மிடல் = வலிமை
