தொல்காப்பியப் பூங்கா
பகுதி 32 · 34 / 102
தொல்காப்பியத்தில் புறத்திணையியல் எனப்படுவது; அகத் திணையாகிய ஏழு திணைக்கும் புறத்தே நிகழும் ஏழு திணையை உணர்த்துவதாகும். அந்த ஏழில் ஒன்றுதான் வெட்சித் திணை! நிலமாளும் தலைவனின் ஆணைக்கிணங்க, பகை நாட்டுக்குச் சென்று, அந்நாட்டுப் பசுக் கூட்டங்களை, அந்நாட்டார் அறியாதபடி கவர்ந்து வந்து அவற்றைப் பாதுகாப்பது வெட்சி! கவரப்பட்ட பசுக் கூட்டத்தை மீட்பதற்காக அந்நாட்டார் அங்குச் சென்று போரிட்டு, கவரப்பட்ட பசுக்களை மீட்டு வருவதற்குப் பெயர்தான் கரந்தைத் திணை!
இருநிலைகளிலும் பசுக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதால் அறவழியிலேயே ஆநிரை கவர்வதும், மீட்பதுமான போர் நடைபெறும். இப்படித் தொடங்கும் போர் ஒரு நிலத்தை இன்னொரு நிலத்தார் தமக்குரியதாக விரிவுபடுத்திக் கொள்கிற அளவுக்குத் தொடர்ந்து நடந்து, நிறைவாக ஒரு சாரார் வெற்றி கொள்ளவும் கூடும். ஒருவர் மேல் ஒருவர் போர் நடத்திடப் படையெடுத்துச் செல்வதை “வஞ்சி” என்றும், பகைநாட்டின் கோட்டைச் சுவரை வளைத்து முற்றுகையிடுவதை “உழிஞை” என்றும், இருசாரார் படைகளும் - படைத் தலைவர்களும், நிலத் தலைவர்களும் எதிர் எதிராக நின்று படைகளுடன் போர் நடத்துவதைத் “தும்பை” என்றும், இருசாராரில் ஒரு சாரார் போரில் வெற்றி பெறுவதை “வாகை” என்றும், திணை பிரித்துக் கூறப்படுகிறது.
இவற்றையன்றியும் காஞ்சித் திணை, பாடாண் திணை பற்றியும் குறிக்கப்படுகிறது. ஆநிரை கவர்வது, மீட்பது பற்றிய நிகழ்வுகள் இப்போது தொடங்குகின்றன. “வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்” (பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 2) நிலமாளும் தலைவனாகிய வேந்தனால் ஏவப் பெற்றவர்கள் பகை நாட்டில் உள்ள பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வந்து தமது நாட்டில் பாதுகாப்பாக வைத்திடுவர்.
இதற்கெனப் படை புறப்பட்டுச் செல்கின்ற முழக்கம், செல்லும் வழியில் பிறர் பேசும் நல்வாக்குகளை ஆராய்ந்திடுதல், எப்பக்கம் படை செல்கிறது என்பதைப் பகைவர் அறியாமல் பயணித்தல், முன்கூட்டியே நிலை அறிய ஒற்றர்களை அனுப்புதல், அவர்கள் உளவுப் பணியை செம்மையாக நடத்தி வேறோரிடம் இருத்தல், சூழ்ந்து வரும் பகையை அழித்தல், பசுக் கூட்டத்தைக் கவருதல், அப்போது எதிர்ப்போரைத் தாக்குதல், கவரப்பட்ட பசுக் கூட்டங்களை நோய் நொடி அணுகாமல் நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தல், சொல்லப்பட்ட இடத்திற்குப் பசுக்களைக் கொண்டுவரல், அந்த இடத்தில் அவற்றை நிறுத்துதல், அவற்றை எண்ணிக் கணக்கிட்டுப் பங்கு வைத்தல், சிலவற்றைத் தானமாகக் கொடுத்தல், மகிழ்ச்சியால் உண்டுகளித்தல் ஆகிய பதினான்கு காரியங்கள் ஆநிரை கவரும் போருக்காக முறைப்படுத்திச் சொல்லப்படுகின்றன.
“படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி, புடைகெடப் போகிய செலவே, புடைகெட ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை, முற்றிய ஊர்கொலை, ஆகோள், பூசல்மாற்றே, நோயின்று உய்த்தல், நுவலுழித் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடைஎன வந்த ஈர்ஏழ் வகையிற்றாகும்” (பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 3) அரவம் = ஆரவாரம் விரிச்சி = நல்வாக்கு ஊர்கொலை = ஆநிரைக் காவலரைக் கொல்லுதல் பூசல்மாற்று = எதிர்ப்போருடன் போரிடுதல் பாதீடு = பங்கீடு தொன்மைக்காலச் செய்திகளைத் தொகுத்து வழங்கும் தொல்காப்பியத்தில் மட்டுமல்ல; இந்த ஆநிரை கவரும் நிகழ்ச்சியையும், அதற்காக விளையும் போர்களில் ஒன்றையும் ஒளவைத் தமிழச்சி விவரித்துப் புகழ்வதை புறநானூறும் குறிப்பிடுகிறது.
அது இதோ:- “குயிலின் வாய் அலகு போன்ற கூரிய மொட்டுக்களையுடைய புனலிக் கொடியின் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையைக் கரிய முடியில் சூட்டிக் கொண்டு, புலியின் கண்ணைப் போல் வெண்மையான தேறல் எனும் கள்ளை, படை வீரர்கள் ஒருமுறைக்கு இருமுறை அருந்தி மகிழ்ந்தனர். அப்போது ஆநிரை கவரும் போருக்குப் புறப்படும் வேளையில்; துடி கொட்டுவோன் துடி கொட்டி அறிவித்த பிறகு, மீண்டும் அனைவர்க்கும் தேறல் வழங்கப்பட்டது.
அரசனிடமும் சென்று அருந்துமாறு கோரினர். அரசன், அதை வேண்டாமென்றுரைத்து உடன் வாளைக் கொண்டு வருமாறு பணித்தான் என்பதை ஆங்கிருந்த ஆன்றோர் கூறினர். அத்தகைய நீ இப்போது வெட்சிப் போரில் வெற்றி மாலை சூடியிருக்கிறாய். பகைவர் நடத்திய ஆநிரை மீட்கும் கரந்தைப் போரில் அவர்களை வீழ்த்திய அந்த வாளைத்தானே வாங்கிச் சென்றாய். நின் வீரம் மேம்படுவதாகுக” பண்டைத் தமிழர் ஒருவருக்கொருவர் போரிட்டு வெற்றியும் தோல்வியும் அடைந்தனர் எனினும்; இருநிலையிலும் அவர்கள் வீரம் விளைத்தனர்.
தீரம் காட்டினர். மானம் காத்தனர் என்பதற்கு தொல்காப்பியத்திற்குத் துணை நின்று புறநானூறும் ஒளவையார் வாயிலாகச் சான்று கூறுகிறதன்றோ! “குயில்வா யன்ன கூர்முகை யதிரல் பயிலா தல்கிய பல்காழ் மாலை மையிரும் பித்தை பொலியச் சூட்டிப் புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்றிரு முறையிருந் துண்ட பின்றை உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப் பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது கொள்ளா யென்ப கள்ளின் வாழ்த்திக் கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற் பல்லா னினநிரை தழீஇய வில்லோர்க் கொடுஞ்சிறைக் குரூஉப்பருந் தார்ப்பத் தழிந்துமாறு பெயர்த்தவிக் கருங்கை வாளே!”
(புறநானூறு) கூர்முகை = கூரிய மொட்டு அதிரல் = புனலிக்கொடி மையிரும் பித்தை = கரிய தலைமுடி பிழிமகிழ் வல்சி = வடித்த இனிய கள் தழீஇய = சூழ்ந்த வில்லோர் = கரந்தையராகிய வில்லாளர்கள் குரூஉப்பருந்து = வளைந்த சிறகினையுடைய பருந்து
