தொல்காப்பியப் பூங்கா
பகுதி 33 · 35 / 102
பழந்தமிழர் நடத்திய ஆநிரை கவரும் வெட்சிப் போராயினும், ஆநிரை மீட்கும் கரந்தைப் போராயினும் ஓர் ஒழுங்கு முறையுடன்தான் நடைபெற்றிருக்கிறது. இவர் எப்பக்கமிருந்து வேல் வீசுகிறார்; அவர் எப்பக்கமிருந்து வில்லம்பு பொழிகிறார் - இருவர் கை கலந்து களத்தில் போரிடும்போது நம்மவர் யார், பகைவர் யார் என்று அடையாளம் காண்பதற்காக கையாளப்பட்ட முறை என்ன ? “......... உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் தானையர் மலைந்த பூவும்” எதிரெதிரே நின்று போரிடும் வீரர்களில் பகைவர்க்கும் தன்படை வீரர்க்கும் வேறுபாடு கண்டறிய பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ முதலியவற்றை சூட்டிக் கொள்ளச் செய்தனர்.
“ஆர்அமர் ஓட்டலும், ஆபெயர்த்துத் தருதலும், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்து உரைத்தலும், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும், மனைக்குரி மரபினது கரந்தை அன்றியும், வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும், வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளையாட்டும், காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர” (பொருளதிகாரம் - புறத்திணையியல் நூற்பா : 5) இந்த நூற்பாவைத் தழுவிய சொல்லோவியம் வருமாறு:- போரில் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். வெட்சியார் கவர்ந்து சென்றிருந்த பசுக் கூட்டத்தை மீட்டனர்.
அதற்கான வீரத்தையும் எழுச்சியையும் தமக்கு ஊட்டிய வேந்தனின் ஆற்றல் மிகு அணுகுமுறையை முரசு கொட்டி முழக்கினர். கறந்த பால் முலை புகா என்பதே போல் கவர்ந்த பசுக் கூட்டத்தைக் கரந்தையார் திரும்பப் பெறப் போவதில்லையென்று ‘வெட்சியார்’ உரைத்த சூளுரையை வீணுரை ஆக்கிய தீரர் எம் வேந்தர் எனச் சங்கநாதம் செய்தனர். அதற்கிடையே ஆர்த்தெழுந்த அரசிளங்குமரன்; “வேந்தே! ஆணையிடுக! ஆநிரையை மீட்டது மட்டுமல்ல; வீழ்ந்தது பகைவர் பூமி முற்றாக என்று வெற்றிப் பண் இசைத்திட யாழ் மீட்டவும், ஆணையிடுக எமக்கு!
பகைவனின் பலமிக்க கோட்டையைத் தகர்த்து, அந்நிலம் காத்திடும் கொடிப்படையை சிதறுண்டு போகச் செய்கிறேன்! பகையை நம் தாள் பணிய வைக்கிறேன்; இதோ இந்த வாள் வலிமையால்! வஞ்சினம் கூறி வணங்கி நிற்கிறேன் தங்கள் முன்னால்! கொஞ்சி மகிழ்ந்தீர் என்னைக் குழந்தைப் பருவத்தில்; குன்றென நான் வளர்ந்து நிற்கும் இத் தருணத்தில் அஞ்சித் தயங்கிடலாமோ ஆணை பிறப்பிக்க ?”
எனக் கேட்டான்! வேட்டு முழக்கம் அவன் பேச்சு! “ஒரு வீரத் திருமகனைப் பெற்றதற்காகப் பெருமையடைகிறேன். நீ வாள் சுழற்றிப் பகைப் புலத்தை வெற்றி காண விடை கேட்பது கண்டு வீங்குகின்றன என் தோள்கள்! விம்மிப் புடைக்கிறது என் நெஞ்சம்! உம்; கோட்டை நோக்கிப் புறப்படு! கொடிப்படை, குதிரைப்படை, ஆட்படை, யானைப்படை எதுவானாலும் பொடிப் பொடியாக்கு! ஆணை கிடைத்து விட்டது; அரசிளங்குமரா! புறப்படுக!”
வேந்தனின் ஆணை கிடைத்த வேகத்தில், ‘வெற்றி நமதே!’ எனப் பறை கொட்டிப் புறப்பட்டது பார் அதிரப்படை! கோட்டைக் கதவுகள் நொறுங்கின! கொடிமரம், சாய்ந்தது! நாட்டைக் காத்திட நாதியற்றுப் போன நிலையில், கரந்தையாரின் வேட்டைக் காடாயிற்று வெட்சியாளரின் பூமி! ‘எமக்கு நிகர் எவருமில்லை’ எனும் பாட்டை இசைத்துக் கொண்டிருந்தனர் கரந்தைப் போராளிகள்! அரசிளங்குமரன், தனக்கும் தன் படையினர்க்கும் வெற்றித் திருமகள் மாலையணிவிக்கக் காரணமாக இருந்த வாளை, வலக்கையில் உயர்த்திப் பிடித்தபடி குதிரையிலமர்ந்து கோட்டைக்குள் நுழைந்தான்.
- நுழையும்போதே எங்கிருந்தோ பறந்து வந்த ஈட்டியொன்று அவன் மார்பில் நுழைந்தது! அதைத் தாங்கிப் பிடித்தவாறு பகைவர் தலைகள் பத்து இருபது என்று பந்துகளாக உருட்டி விட்டுத்தான் உயிர் விடுத்தான். “ஓ; மகனே! நீ பொன்முடி வேண்டாமெனப் புகழ் முடி சூடிக் கொண்டாயோ!”
எனக் கலங்கிய காவலன் அவன் நெற்றியில் முத்தமிட்டான். வெற்றியில் மகிழ்ந்திட முடியாத வீரர் கூட்டம், போரில் விழுப்புண்பட்டோர்க்குக் கல் எடுத்து நீராட்டி, நினைவு நடுகல் நாட்டிடும் முறையைப் பின்பற்றி, களத்தில் மாண்ட மன்னர் மனையின் இளவலுக்கும் நடுகல் நாட்டி நினைவு போற்றியதில் புதுமை என்ன இருக்கிறது!
