தொல்காப்பியப் பூங்கா
பகுதி 34 · 36 / 102
நிலமெலாம் கட்டி ஆண்டாலும் நீர் மீதும் ஆணை செலுத்தவே நினைத்திடுவர் - நீரும் நிலமும் தமக்குரிமையானால் வானையும் வளைத்துப் போடவே அவாக் கொள்வர். தேனடையில் மொய்க்கும் ஈக்கள்; அது தமக்குச் சிறிய இடம் என்று கருதினால் வான்வெளியில் பறந்து வையமும் வானமும் கைக்குள்ளே என்ற மகிழ்ச்சியோடு வாழும் போது; பாவம்; மனிதனுக்கு மட்டும் குறுநில மன்னன் என்ற நிலை போதுமானதாக இல்லை - மேலும் கோட்டைகள் பலவற்றின் கொற்றவன் என்ற புகழ்கூட அவனுக்குப் புளித்துப் போய் விடுகிறது - நிலம் வருகிறது!
நீ மட்டும்தானா ? என் கட்டளைக்குப் பணிய கடலும் வரட்டுமே! என்கிறான். அதுவும் வந்துவிட்டால்; பிறகு தனக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திட காலையில் கிழக்கு வானத்தையும், மாலையில் மேற்கு வானத்தையும் விரித்துப் பரப்புக என்கிறான். இந்தப் பேராசைக்காரன் நிலை என்ன ஆகும் என்பதை, தொல்காப்பியத்தில் வஞ்சித்திணை வட்டம் போட்டுக் காட்டுகிறது. மேலும், மேலும் ஆள்வதற்கு அகன்ற நிலப்பரப்பை விரும்பி, அருகில் உள்ள நாட்டின் மீது அணி தேர்ப்புரவி, ஆட்பெரும்படையுடன் மோதிய அரசனை நடுங்குமாறு செய்து; மேற்சென்று அவன் மீதே போர் தொடுத்துப் பணிய வைத்ததைக் குறிக்குமிது!
“எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்றே” (பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 7) நசை = ஆசை அடல் = வலிமையால் வெல்லுதல் பார் சிறுத்தலின் படை பெருத்ததோ; படை பெருத்தலின் பார் சிறுத்ததோ என ஐயுறும் வண்ணம் புற்றீசல் கூட்டமென ஆட்படை வருகிறது. கடிவாளமில்லாப் புரவிகள் எனப் புயல் வேகம் காட்டும் படைவரிசையின் புலிக் கண்ணர்கள்; அவர்கள் காணும் வழி யெல்லாம் “தீ பரவட்டும்; திக்கெட்டும் பரவட்டும்” என்று ஒலியெழுப்பி, பூக்காடென விளங்கிய பகுதிகளைத் தீக்காடாக்கினர்.
வல்லமையினால் வற்றாத பெருமை பெற்றவர், தமது மன்னர் என்று வாய்ப்பறை கொட்டுகின்றனர். பரிசுப் பொருள்களைப் படைக்கலன்களாகவே வழங்கிடும் பண்புடையவர் தமது பார்வேந்தன் என்று போற்றிப் புகழ்கின்றனர்! சென்ற இடமெல்லாம் சிறப்பு எம்மன்னர்க்கு; பேரிழப்புத்தான் பிற வேந்தர்க்கு! இப்படிப் பாடல் இயற்றினர்! பண் எழுப்பினர்! போர்முறை என்ற சொற்றொடருக்கும் வெற்றி என்ற மூன்று எழுத்துக்கும் பட்டை தீட்டி ஒளியேற்றியவரே அவர்தான்!
இவ்வாறு இங்கிதமின்றி உரை நிகழ்த்தினர். கார் காலப் பெருமழை ஊரெல்லாம் பெருக்கெடுத்து; ஆறெல்லாம் கரையுடைத்து ஆபத்தை அள்ளிவரும்போது; அதனைத் தடுத்து நிறுத்தும் அணையொன்றைப் போல்; ஆசை மிகக் கொண்டு அலை அலையாய்ப் படையுடன் வந்து நிலம் பறிக்க நினைக்கும் தார்வேந்தனின் தானையைத் தனியொருவனாக நின்று; வந்தவர் ஆசை நொறுங்கி நொந்து போக வாகை சூடி நின்றான். வென்றவர் ஒளியும் தோற்றவர் தேய்வும்; வென்றவனை ஆணவம் பிடித்து ஆட்டிடவில்லை.
வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோலக் கருதுவதே நன்றென நவிலும் நயத்தகு நாகரிகம் கொண்டவன் ஆனதால் போரில் புண்பட்டோர் இருபுறத்திலும் இருப்போர்க்கும் உதவி; உணவளித்து தோற்றோரிடம் பெறப்படும் கொற்றவள்ளை எனப்படும் கப்பம் பெறுவதை விலக்கி, தோற்றோர் மீது பழி நினையாமல் பெருஞ் சிறப்புக்கு இலக்கணமாய் நின்றான். படை பெருக்கிப் பாய்ந்து வந்த பேராசை வேந்தன்; பேரரசு தேவையில்லை, இருக்கும் அரசே போதுமென்று மீண்டான்; நாடு நோக்கி!
“இயங்குபடை அரவம், எரிபரந்தெடுத்தல், வயங்கல் எய்திய பெருமையானும், கொடுத்தல் எய்திய கொடைமையானும், அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும், மாராயம் பெற்ற நெடுமொழியானும், பொருளின்று உய்த்த பேராண் பக்கமும், வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும், பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும், வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும், குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே” (பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 8) எரிபரந்து = தீ வைத்தல் மாராயம் = வேந்தன் விருது கொற்றவள்ளை = கப்பம் தழிஞ்சி = பகை மறந்து பேணித் தழுவுதல்
