தொல்காப்பியப் பூங்கா
பகுதி 35 · 37 / 102
திருக்கோயில்களில் இன்றைக்கும் குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கு மூலவர் என்று ஒரு சிலை, உட்புறத்தில் கல்லிலும்; உற்சவர் சிலையொன்று பஞ்ச உலோகத்திலுமென்று இரண்டு சிலைகள் உண்டு. இவற்றில் மூலவரை அச்சிலை இருக்குமிடம் சென்றே வழிபடுவர். உற்சவரோ விழாக் காலங்களில் வெளியில் எழுந்தருளி, மூலவரின் பிரதிநிதியாகக் காட்சி அளிப்பார். இதுவே தமிழகத்துத் திருக்கோயில்கள் அனைத்திலும் காணக் கூடியது.
ஆனால் விதி விலக்காக திருவாரூர் மற்றும் அந்த ஊரையொத்த திருக்குவளை, திருக்கோபுரவாசல், திருமறைக்காடு, திருநாகை, திருவாய்மூர் உள்ளிட்ட ஆறு கோயில்களில் மூலவரும் உற்சவரும்; முறையே கல்லிலும், உலோகத்திலும் தனித்தனிச் சிலைகளாக அமைக்கப்படாமல் உற்சவருக்கான சிலைகளே மூலவருக்காகவும் அமைக்கப்பட்டிருக்கும். இறை அன்பர்கள் உள்ளே சென்று வணங்குகிற தியாகராசரின் உற்சவர் சிலையேதான் வெளியிலும் விழாக்களில் எடுத்து வரப்படுகிற உற்சவர் சிலையாக இருக்கும்.
தேர் உலா கூட அந்தச் சிலைக்கேதான்! எனவே இந்த ஆலயங்களில் மட்டும் மூலவரைவிட உற்சவருக்கே சிறப்பு அதிகம்! அந்தச் சிலையை ஆண்டுக்கொருமுறை திருவாதிரைத் திருநாளில் பக்தர்களும், குருக்கள்மார்களும் பீடத்தில் வைத்துத் தோள் கொடுத்துத் தூக்கி விழாக் கொண்டாடுவர். தேரிலும் வைத்து தேரோட்ட விழா நடத்துவர். விழா முடிந்த பிறகு கோயிலின் உட்புறம் கொண்டு வந்து அமர்த்திடுவர். இவ்வாறு ஒரு தெய்வத்திற்கு அளிக்கப்படும் பக்தி நிறைந்த பெருமையை, அக்காலத்தில் மன்னர்கள் தங்களின் போர்வாளுக்கு அளித்துச் சிறப்புச் செய்தனர் என்ற செய்தியையும் இணைத்து, இதோ தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உழிஞைத் திணை பேசுகிறது.
ஒரு மன்னன், தன் ஆதிக்கத்தையும் ஆட்சியையும் ஏற்றுக் கொள்ளாத பிறநாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டின் கோட்டையைக் கைப்பற்ற முற்றுகையிடுவதும்; முற்றுகையிடப்பட்ட கோட்டையின் மன்னன் உள்ளிருந்தவாறு பகைவரை எதிர்த்துப் போரிடுவதும், கோட்டையைப் பகைவர் கைப்பற்றுவதும் உழிஞைத் திணைக்கு இலக்கணமெனக் கூறுவர். முற்றுகை நடத்துவோர், முற்றுகையைத் தடுப்போர் எனப்படும் முடி மன்னர்கள் இருவருமே போர் தொடங்கும் காலத்தில், முன்னதாகவே வெண்கொற்றக் குடையையும், அதன் நிழலில் போர்வாளையும் நல்ல நேரம் பார்த்து புறப்படச் செய்வார்கள்.
கோட்டையைக் காத்திடும் வீரர்கள் உள்ளேயிருந்தும், அதைக் கைப்பற்ற முனையும் வீரர்கள் புறத்தேயிருந்தும்; கோட்டைச் சுவரின் மீது பலகைகளைப் பொருத்திச் செய்யப்பட்ட ஏணிகளில் நின்று கொண்டும், ஏறிக் கொண்டும், ஒருவர் மீதொருவர் கடுந்தாக்குதல் நடத்துவார்கள். உள்ளேயிருப்போரும், வெளியே இருப்போரும் மோதிக் கொண்டும் விலகிக் கொண்டும் போரிடுவது என்பது; கோட்டை மதிலின் அகழில் உள்ள நீரின் மேல் படர்ந்துள்ள பாசி, ஒரு சமயம் நெருங்கிக் கலந்தும், காற்றசைவு, கடும்போரின் அதிர்வு காரணமாக வேறு சமயம் விலகி நின்றும் காட்சி தருவது போல் இருக்கிறதாம்.
கோட்டை முற்றுகையைத் தொடர்ந்து ஊரகத்திலும் பல பகுதிகளில் படைகள் பொருதுகின்றன. இருதரப்பு வீரர்களையும் மட்டுமே விட்டுவிடாமல் தம்முடைய உறுதி படைத்த வீர நெஞ்சங்களையும் மெய்ப்பித்துக் காட்டும் வண்ணம் கோட்டை மதிலின்கண்ணே பகை மன்னர் இருவரும் வாள் கொண்டு போரிடுகின்றனர் உயிரைப் பற்றிய ஒரு துளி கவலையுமின்றி! இருவரில் வெற்றி மாலை ஒருவர் கழுத்துக்குத்தானே! தோல்வியைத் தழுவுவதற்கு முன்னே ஒரு மன்னன், மரணத்தைத் தழுவி, மானம் காத்திடுகிறான்.
வென்ற வேந்தனின், வெல்லுதற்குக் காரணமாக அமைந்த போர் வாளுக்கு, புனித நீராட்டும் பூசைகளும் நடைபெறுகின்றன. மூலவராகவும், உற்சவராகவும் விளங்கி முற்றுகைப் போரில் வெற்றியை நிச்சயித்த அந்த வாளுக்கு வெண்கொற்றக் குடை பிடித்து, சிறப்புச் செய்வது அக்கால வழக்கமாக இருந்திருக்கிறது! ஆம், வீரத்தை மதித்து மரியாதை செய்யும் காலம்; போர்க்காலமாயினும் அப்போதும் தமிழரின் மாண்புரைக்கும் பொற்காலம்! மறைந்த வேந்தன் பெயரால் வென்ற வேந்தன் முடி புனைகிறான் என்று “உழிஞை”, முடிவுரை கூறுகிறது.
அடடா; இதுவன்றோ நமது முன்னோரின் பெருந்தன்மை! “குடையும் வாளும் நாள்கோள், அன்றி மடையமை ஏணிமிசை மயக்கமும், கடைஇச் சுற்றுஅமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும், அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும், நீர்ச்செரு வீழ்ந்த பாசியும், அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும், மதின்மிசைக்கு இவர்ந்தோன் பக்கமும், இகன்மதில் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோடு ஒன்றத் தொகை நிலை என்னும் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறை என மொழிப” (பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 13) நாள்கோள் = நன்னாள் மடை = பூட்டு மயக்கம் = மலைதல், எதிர்த்துப் பொருதல் முற்றிய அகத்தோன் = வளைக்கப்பெற்ற அகப்படைத்தலைவன் நொச்சி = மதில் அதாஅன்று = அதுவுமின்றி
