உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 36 · 38 / 102

தன் வலிமைக்கு எதிர் நிற்போர் யாருமில்லை என்ற துணிவுடன் போருக்குப் புறப்பட்டு வந்த மன்னவனை, மற்றொரு மன்னவன் எதிர்கொண்டு அவன் தலைமையைத் தகர்ப்பதை; தும்பைத் திணைக்கு இலக்கணமாகக் குறிப்பிட்டு, அதன் சிறப்பியல்பெனக் காட்டும் காட்சியில், தொல் பழங்காலத் தமிழ் வீரம், கல்நெஞ்சையும் கலங்க வைக்கக் கூடியதாகும். இரு வேந்தர் பொருதிடும் அந்தப் போர்க்களத்தில் ஒரு வீரனின் அருகிற் சென்று தாக்குவதற்குத் தயங்கி, தொலைவில் நின்றே பகை வீரர், கணைகள் தொடுத்தனர்.

வேல்கள் எறிந்தனர். வாளும் கேடயமும் தாங்கி நெஞ்சுரத்தோடு தாக்குப் பிடித்த வீரனின் வாள், பகை வீரர்களைப் பந்தாடும் போது பாறையில் மோதி பழுதாகி விடவே; கேடயமும் உடைந்த நிலையில் அவனைச் சூழ்ந்து வந்த எண்ணற்ற ஈட்டிகளையும் கணைகளையும் எதிர் கொள்ள அவன் உடலே கேடயமாயிற்று! அம்மவோ; இறுதியாக ஒரு வாள் மின்னலெனப் பளபளத்து அந்த மின்னல் வேகத்திலேயே அவன் மீது பாய்ந்து தலை வேறு உடல் வேறு எனத் துண்டங்களாக ஆக்கிய போது, அறுபட்ட அட்டையின் உறுப்புகள், பெருநிலத்தில் படியாமல் ஆடித் துடிப்பது போல் அறவே வீழ்ந்துபடாது அவன் தலையும் உடலும் கால் கைகளும் ஆடிக்கொண்டும் துடித்துக் கொண்டுமிருக்கின்றன.

“மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலையழிக்கும் சிறப்பிற்றென்ப.” (பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 15) மைந்து = வலிமை “கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா அருநிலை வகையோடு இருபாற் பட்ட ஒரு சிறப்பின்றே.”

(பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 16) இருநிலம் = பெரியபூமி அரு = அட்டை இருபால் = இருவகை போர்க்களத்தில் பகைவரை அச்சமூட்டக் கூடிய தானை, யானை, குதிரையெனும் முப்படைகளும் அணி வகுத்து நிற்கின்றன. போர் தொடங்கிட இரு தரப்பிலும் முரசங்கள் ஒலிக்கின்றன. ஒன்று கோடை கால இடி முழக்கம் போல்! மற்றொன்று கொந்தளித்துக் கடல் தாண்டும் புயல் முழக்கம் போல்! களத்தில் மின்னும் வாட்கள்! வீரர் கரம் விடுத்துக் கிளம்பும் வேல்கள்!

காற்று கிழித்துப் புறப்பட்டுச் சில சோற்றுத்துருத்திகளின் வயிறு கிழித்திடும் கணைகள்! ஒரு கோழைக்கு இங்கு இருபடையிலும் இடமில்லையென்றுரைத்து, மிரட்சியினால் மீட்டி விட்ட யாழ் நரம்பு போல் மேனி அதிர்வோரை அடையாளம் கண்டு அவரைக் களம் விட்டு ஓடிவிட்ட நிகழ்ச்சிகளும் ஒன்றிரண்டு விதிவிலக்காக உண்டு! தம்முடைய உயிரனைய வேந்தனை மாற்றார் படை வீரர்களும், தளபதிகள் சிலரும் அயிரை மீன்களின் கூட்டம் போல் சூழ்ந்து கொண்டு போரிடும் நிலையைச் சற்று தொலைவில் போரிட்டுக் கொண்டிருந்த ஒரு வீரன் கண்டுவிட்டான்.

என் தலைவனுக்கு ஆபத்தா ? என்று கனல் மண்டிவிட்ட கண்களோடும் கையில் ஏந்திய கட்கமோடும் அங்குப் பாய்ந்தான் அடிபட்ட புலி போல! மிதிபட்ட நாகம் போல! இருபுறத்திலுமே வீரர்கள், தம்முடைய வேந்தர்களைச் சூழ்ந்து முன்னால் நின்று போரிட்டுப் பாதுகாத்திடுகின்றனர். படைத் தளபதியோ தனது படையுள்ளே புகுந்து சென்று; எதிர்பாராது பின்னடைவு தோன்றினால்; அத்தளபதியொருவனே எதிர்த்துப் பொருதிடும் பெரும்படையைத் தனியொருவனாக நின்று தாக்கிடும் “எருமை மறம்” எனும் வலிமைத் திறம் காட்டுகிறான்.

எதையும் தாங்குமல்லவா எருமை! அதற்கும் இலக்கியத்தில் இப்படியொரு பெருமை! விரைந்து வந்து வேந்தன் மேல் பாய்ந்த வேழமொன்றின் துதிக்கை பிடித்துப் போரிட்டு; அதன் காலால் மிதிபட்டு மாண்ட எதிர் வேந்தன் முடிவுக்குத் தம் வேந்தனின் போர்த் தந்திரமே காரணமென்று அவனைப் பாராட்டிக் களத்திலேயே வீரர்கள் ஆரவாரத்தில் ஈடுபடுகின்றனர். முடிவில் இரு வேந்தருமே போரில் முடிவெய்திவிட, அது கண்ட வீரனொருவன் சீறியெழுந்து சினந்து கிளம்பி தன் வாள் கொண்டு பகைவர்கள் பலரைப் பலி கொள்ளுகிறான்.

வெற்றி யாருக்கு என அறுதியிட்டுக் கூற இயலாத நிலையில்; தன் தலைவனை இழந்ததற்காகப் பகைவர் தலைகள் பலவற்றைப் பூமிக்குள் பதியம் போட்ட அந்தத் தனியொரு வீரனைச் சிறப்பிக்கத் தவறவில்லை இந்த நூற்பா! “தானை, யானை, குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த தார்நிலை, அன்றியும் இருவர் தலைவர் தபுதிப்பக்கமும், ஒருவன் ஒருவனை உடைபடைபுக்குக் கூழை தாங்கிய எருமையும், படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும், களிறு எறிந்து எதிர்த்தோர் பாடுங், களிற்றொடு பட்டவேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலையும், வாள்வாய்த்து இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும் செருவகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.”

(பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 19) நோனார் = பகைவர் தார்நிலை = முன்வரிசை தபுதி = அழிவு கூழை = படையின் பின்னணி அட்டவேந்தன் = பகையரசன் பாழி = பகைவரூர் ஏமம் = வலிமை, களிப்பு அமலை = ஆரவாரம் நூழில் = கொன்று குவிப்பது