தொல்காப்பியப் பூங்கா
பகுதி 37 · 39 / 102
பிறருடன் போட்டியிட்டும் வெற்றி பெறலாம்; அல்லது தாமே முயற்சி மேற்கொண்டும் வெற்றி பெறலாம். வாகை என்பது போரில் அடையும் வெற்றியை மாத்திரம் குறிப்பிடுவதல்ல. வாழ்க்கையில் ஒரு உன்னதமான குறிக்கோளை நல்லொழுக்க வழியில் அடைவதுமாகும். வாகையின் இயல்பு, இலக்கணம் இவற்றையொட்டி தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அதன் பாகுபாடு விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த நூற்பா; “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்று ஆரம்பமாகிறது.
அதென்ன “பார்ப்பன பக்கம்”? தொல்காப்பியத்தில் பார்ப்பனர் எங்கே வந்தனர்? கேட்கத் தோன்றும்! அவர்கள் வந்து விட்டனர் - ஆனால் அவர்கள் வரப்போகின்றனர் என்பது, சொல்லதிகாரத்திலேயே சுட்டிக்காட்டப்படுகிறது! முன்னால் மணியோசை வந்தால், பின்னால் யானை வரும் என்பதை எப்படியோ அறியாமல் இருந்து விட்டனர் தமிழ் மக்கள்! கழனிகளில் கதிர் நடுவே களை முளைப்பது; அறிவித்து விட்டு முளைப்பதில்லை. அதைத் தொல்காப்பியம் பின்வருமாறு தொட்டுக் காட்டுகிறது.
“வட சொற்கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.” வடமொழி ஒலி நீக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுடன் அமைந்த சொற்கள் வட சொல்லாகும். இதற்கு வாசற்கதவு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது? தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்று ஆய்வு செய்துள்ள ஆன்றோர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். அதாவது ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே, வடமொழி, மோப்பம்பார்த்து முடித்து, ஆரியர்கள் நுழைவுக்குத் தமிழ் நிலத்தில் வழி அமைத்துக் கொடுக்கப்பட்டு விட்டது.
அவர்கள் வந்து அமர்ந்து விட்டார்கள் என்பதற்குச் சான்றாகத்தான் வாகைத் திணையில் பாகுபாடு குறிக்கும் இந்த நூற்பா அமைந்திருக்கிறது. “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும், பாலறி மரபின் பொருநர் கண்ணும், அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.”
(பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 20) ஏனோர் = மற்றோர் அறிவன் = ஆய்வு செய்யும் நல்லறிவாளன் தாபதம் = துறவற நிலை பாலறி = இயல்பு அறிந்த பொருநர் = அரசர், படைத்தலைவர் “என்மனார் புலவர்” என்று “புலவர்கள் கூறுவார்கள்” எனக் குறிப்பிடுவதிலிருந்தே, ஆரியர் வரவும், அவர்கள் புதிதாக வகுத்த தமிழர்க்குப் புறம்பான மரபும்; தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தில் அல்லது அவர் தோன்றுவதற்கு முன்பு நம் நிலத்தையும் இனத்தையும் வளைத்து விட்டன என்பது தெளிவாகும்!
பார்ப்பனர் கடமையாக ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு வகையும்; அரசர் கடமையாக ஓதல், வேட்டல், ஈதல், படை உதவி வழங்குதல், குடிகளைப் பாதுகாத்தல் ஆகிய ஐந்து வகையும்; வணிகர்க்கும் வேளாளர் எனும் உழவர் பெருங்குடியினர்க்கும் கடமைகளாக ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வணிகம், கால்நடை பேணுதல் ஆகிய ஆறு வகையும், கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எனும் மூவகைக் காலத்தையும் கணித்து ஆய்ந்திடும் நல்லறிவாளன் கடமையும், எட்டு வகை ஒழுக்கம் போற்றும் துறவோர் கடமையும், பாகுபாட்டினை அறிந்த படைத் தலைவர் கடமையும், வாள் கொண்டோ, தோள் கொண்டோ போரிட்டு வெற்றி பெறுதலன்றி இந்தக் கடமைகள் வழியில் வெற்றி விளைப்பதே நிலையானது என்று புலவர்கள் கூறுவார்கள் என்கிறார் தொல்காப்பியர்.
இவற்றில் கோடிட்டுக் காட்டப்படும் கடமைகள் பல வாழ்க்கை நெறியை உயர்த்தக் கூடியவை எனினும்; பார்ப்பனருக்கும் பாராள்பவருக்கும் ஏனையோர் சிலருக்கும் பாகுபாடு செய்த கடமைகளில் இரண்டு; வேட்டலும் வேட்பித்தலும் தமிழ் நிலத்துக்கு வித்தியாசமானவைகளாகும். வேட்டல் என்றால் வேள்வித்தீ வளர்த்தல்; வேட்பித்தல் என்றால் வேள்வி செய்ய வைத்தல்! வேள்வியும் யாகமும் வேதியர்களின் சாதுர்யத்தால் தமிழ் நிலத்தில் வேர் விட்டுக் கிளை பரப்பி விழுதுகளும் விடத்தொடங்கி விட்டன.
“வீரத்தால் வெற்றிகளைக் குவிக்கலாம்; அதற்கு வெஞ்சமர் புரிவதுடன் விவேகத்தாலும் வாழ்க்கையின் வெற்றிக்கு விதவிதமான நற்செயல்களை நாடு கடந்த அளவில் கூட நடத்தி மகிழலாம். அவற்றை மறுத்து எதற்காக இந்த வீணான வேலையாக வேள்வியும் யாகமும்? வேண்டாமிது!”
வேந்தன் தரப்பு இப்படி வெகுண்டு பேசுகிறதே எனக்கண்டு வேதியர் தரப்பு விட்டுவிடுமா? சகலகலா வல்லமையுடன் சாதுர்யப் பொடியும் தூவினால்; அந்த மெளடீகச் சாம்பிராணிப் புகையிலே மன்னராயின் என்ன? மயங்கித்தானே தீர வேண்டும். எனவே; வேட்டலும் வேட்பித்தலும் மெல்லத் தொடங்கிக் காட்டு வெள்ளமெனக் கரை புரண்டன. வேல், வாள், ஈட்டி, கட்டாரி எனப் போர்க் கருவிகள் ஏந்தி, புரவி மீதமர்ந்து போர் போர் என முழங்கியவர்கள், “காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு; காதல் தலைவனுக்கும் தலைவிக்கும் தாயகமே மூச்சு!”
எனக் குரல் எழுப்பியவர்கள் ஓம குண்டங்களுக்கு முன்னால் குனிந்து வணங்கிக் கூன் போட்டுக் கொண்டு “கோமயம்” பருக வேண்டும்; வேள்விக்கும் யாகத்திற்குமாக! இதன் தொடர்ச்சி, இமயம் வரை சென்று கண்ணகி சிலை அமைக்கக் கல் எடுத்து, அதைக் கனகவிசயர் தலையிலே ஏற்றிவந்தானே; அந்த சிலப்பதிகாரத்துச் சேரன் செங்குட்டுவனையும் விட்டபாடில்லை! வேத மந்திரம் அந்த வீராதி வீரனையும் வீழ்த்திக் காட்டியது! படையெடுப்பும், கண்ணகி சிலைக்கான கல் எடுப்பும் முடிந்து, கனகவிசயரையும் கொண்டு வந்து சிறையிலும் அடைத்தாயிற்று.
மாடலமறையோன் எனும் ஆரிய குருநாதர் அரசனைச் சந்தித்தார். அருள் உபதேசம் பொழிந்தார். அது பலித்தது. வடவேந்தர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மாடலனின் அறிவுரையை ஆணையாக ஏற்று வேள்விக்கும் ஏற்பாடு செய்தான். அந்த வேலை, வில்லவன் கோதையிடம் விடப்பட்டது. “மாடல மறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி, ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாம்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததன் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதும் சொல்லி, ஆம் மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என வில்லவன் கோதையை விருப்புடன் ஏவினான்.”
(சிலப்பதிகாரம்) தொல்காப்பியத்தில் அகத்திணை புறத்திணை இயல்களில் எங்குமே வடநூலார் கூறும் வருண வகைக் குறிப்பு ஒரு சிறிதும் இல்லையென்று திட்டவட்டமாக மறுக்கிறார் நாவலர் சோமசுந்தரபாரதியார், தமது தொல்காப்பியக் கருத்துரையில்! அதை எழுத்துப் பிசகாமல் ஏற்றுக் கொண்டு பெரும்புலவர் வெள்ளை வாரணார் தொல்காப்பிய ஆய்வுரைப் பகுதியில் “வடவாரிய நூல்களில் பேசப்படும் நால்வகை வருணப் பாகுபாடு, பண்டைத் தமிழ் மக்களிடம் வழங்காத ஒன்று” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.
“பழந்தமிழகத்தில் மக்களை நிலவகையாற் பகுத்தல் அல்லாது குலவகையாற் பகுத்துரைக்கும் வழக்கம் என்றுமே நிலவியதில்லை” என்றும் குறிப்பிடுகிறார். இப்பெரியோர் இருவரும் இவ்வாறு கூறிடினும், வெளிப்படையாக அல்லது ஒளிந்து ஒளிந்து இருந்த வருணப் பாகுபாடு; நிலப் பாகுபாடு, தொழில் பாகுபாடு என்பனவற்றை மாற்றித் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியதை மறுத்திட இயலாது. வருணங்கள் வர; வேள்வி யாகம் என்ற தருணங்கள் தோன்ற வாகைத் திணையிலேயே பார்ப்பனர் வருகை தந்துவிட்டனரே!
சற்று வேதனையுடன் கூறவேண்டுமெனில் இதனை “வாகைத் திணை” என்பதைக் காட்டிலும் “ஆரியர் வருகைத் திணை” என்றால் அற்புதமாய்ப் பொருந்தும்!
