உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 38 · 40 / 102

அழகிய முகத்தில் குறுமறுப்போல் தோன்றி அறுவை சிகிச்சையன்றி அடுத்து ஓர் வழியில்லை; குணப்படுத்துவதற்கு, எனும் நிலையில் ஆரியக் கலாச்சாரத்தின் ஆதிக்கம் அடியெடுத்து வைத்து நிலைத்துவிட்ட சூழலிலும் அக்காலத் தமிழர்கள் வாழ்ந்து காட்டிய முறையை, வாகைத் திணை பின்வருமாறு சிறப்பித்துக் காட்டத் தவறவில்லை. குளிர் காலத்துப் பாசறை, கோடை காலத்துப் பாசறை ஆகிய இருவகைப் பாசறையிடத்தும் வீரர்களும் தளபதிகளும் கூடிப் போருக்குத் தயார் நிலையில் பயிற்சிகளும், வழிமுறைகளும் மேற்கொள்கிறார்கள்.

வாழ வைக்க உழைத்திடும் உழவர்கள் விளைச்சல் வெற்றி கண்டு உவகைக் கூத்தாடுகின்றனர். தேர்ப்படை நடத்திப் பகைப் போர்ப்படையைத் தீர்த்துக்கட்டிய நிகழ்வை, தெவிட்டாத இன்பமெனக் கருதி வீரர்களின் நடுவில் கலந்து வேந்தனே குரவைக் கூத்து ஆடுகிறான். விறலியரும் நாட்டிய விருந்தளிக்கின்றனர்; வீரர்களுடன் அணிவகுத்து! வாய்ப்பு நேருமிடத்து வஞ்சினம் கூறித் தம் உயிரையும் களப்பலியாக வழங்கிட முன்வந்தோர் வாழ்த்துக் குவியலில் மூழ்கித் திளைக்கின்றனர்.

பகைவரிடமும் அன்பு பாராட்டுகின்ற பண்பினைப் புலப்படுத்துகின்றனர்; மனித நேய மாண்பினர்! சால்பு நிறைந்த சான்றோர் மன்னர்தம் மணிமண்டபத்திலும் மக்கள் மன்றத்திலும் மதித்துப் பாராட்டப்படுகிறார்கள். வாழ்ந்து காட்டுவோம் எனச் சூளுரைப்போர், வரையறுக்கப்பட்ட ஒழுக்கம் பேணும் வைராக்கியத்துடன், வாழ்க்கை இலக்கியம் வரைந்து காட்டுகின்றனர். தவறிழைத்தோரைத் தண்டித்தே திருத்த வேண்டுமென்றில்லாமல் மன்னித்து நல்வழிப்படுத்துவதில் தனி இன்பம் காணுகின்றனர்.

கொடை வழங்கிக் குதூகலிக்கின்றனர். காமத்தை வெறுத்து மேற்கொள்ளும் துறவு மட்டுமல்ல; அரியணை, அரண்மனை, ஆட்சியின் மாட்சி அனைத்தும் துறந்து மன்னர்கள்; மக்கள் கடலில் கலந்து திளைக்கின்றனர். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய வாகைத்திணை நூற்பாவின் துறைகளுக்கான விரிவான வடிவம் இதோ:- “கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும், ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும், தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும், ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும், பெரும்பகை தாங்கும் வேலினாலும், அரும்பகை தாங்கும் ஆற்றலானும், புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும், ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும், ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும், பகட்டினானும் ஆவினானும் துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும், கட்டில் நீத்த பாலினானும், எட்டுவகை நுதலிய அவையத்தானும், கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும், இடையில் வண்புகழ்க் கொடைமையானும், பிழைத்தோர்த் தாங்கும் காவலானும் பொருளோடு புணர்ந்த பக்கத்தானும் அருளொடு புணர்ந்த அகற்சியானும் காமம் நீத்த பாலினானும் என்று இருபாற்பட்ட ஒன்பதின் துறைத்தே.”

(பொருளதிகாரம் - புறத்திணையியல் - நூற்பா : 21) ஒல்லார் = பகைவர் அவிப்பலி = களப்பலி துகள் = குற்றம் தபு = கெட அகற்சி = அகலம், விரிவு