தொல்காப்பியப் பூங்கா
பகுதி 39 · 41 / 102
அவலச் சுவை நிறைந்த இத்திணையின் துறைகளைப் பட்டியலிடும் நூற்பாவும் அதற்குச் சுருக்கமான பொழிப்புரையாக உருக்கமிகு ஒரு கவிதையும் காணலாம் :- “மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும், கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும், பண்புற வரூஉம் பகுதிநோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் ஏமச்சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேய்ப் பக்கமும், இன்னனென்று இரங்கிய மன்னையானும், இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னரும் சிறப்பின் வஞ்சினத்தானும், இன்னகை மனைவி பேய்ப்புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும், நீத்த கணவன் தீர்த்த வேலின் பேஎத்த மனைவி ஆஞ்சியானும் நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும், முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகும் என்ப; பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசல் மயக்கத்தானும், தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும், கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும், நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும், கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும், காதலி இழந்த தபுதார நிலையும், காதலன் இழந்த தாபத நிலையும், நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடை இட்ட பாலை நிலையும் ஆய்பெரும் சிறப்பிற் சிறுவன் பெயரத் தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலையும் மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப் பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பின் துறைஇரண்டு உடைத்தே.”
(பொருளதிகாரம், - புறத்திணையியல் - நூற்பா : 24) அகத்திணை புறத்திணையில் அத்தனை திணைகளுக்கும் விளக்கம் தருகின்ற பணியினை அகல் விளக்கின் ஒளிபோலத் தந்துள்ளேன் எனினும்; அனைத்துத் திணை விரிவாக்கம் நினைத்தெழுத இயலாவிடினும் காஞ்சித் திணையை விட்டுவிட்டால் காஞ்சியே கனவில் வந்து கடிதோச்சி மெல்ல எறியாதா? அந்த வெல்ல மனம் எனக்குத் தெரியாதா? அனுதினமும் அணுப்பொழுதைப் பிளந்து அதிலொரு நுனிப்பொழுதை நூறு பங்காக்கி அந்தத் தனிப்பொழுதைக் காஞ்சிக்கே தந்து நெஞ்ச இனிப்புடனே காலம் கழிப்பவன் நான்!
நிலையில்லா வாழ்க்கையினை நினைவூட்டி நீர்மேல் குமிழியெனும் உவமையும் சொல்லி, அலைகின்ற மனத்துக்கு நங்கூரம் பொருத்தி மலையளவுப் புகழை மன்பதையில் நிறுத்தி, நிலைபெறவே வாழ்வதுதான் நிகரில்லாக் காஞ்சி. தலைகொடுத்துத் தன்மானம் காத்திடச் சொல்வதுதான் காஞ்சி. கூற்றுவனின் ஆற்றல் கூறி அச்சுறுத்தும் போதும் ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ எனும் கூற்றுதனை உணர்ந்தவன்தான் நீ யென் றுரைத்து உலகில் எஞ்சியுள்ள நற்பணியை ஒரு துளியும் மிச்சமின்றி முடித்திடவே உத்திரவு தருவதுதான் காஞ்சி.
பேணுதற்கு யாருமில்லாமல் போய்விடினும், பேய் கூட உதவிடவே வந்துவிடும், உன் பேருழைப்பால் தமிழர் நலன் சீர்பெற்றுத் திகழ்வதையே புகழ்ந்தவாறு! மாற்றாரை வென்று திரும்பாவிடின் தன்னை மாங்குடி மருதன் பாடாது போகட்டுமென வஞ்சின முறைத்த பாண்டிய மன்னனாய் வஞ்சகப் பகைவரை வீழ்த்திடும் காஞ்சி. விழுப்புண்பட்டு வீழ்ந்துள்ள கணவனை விழிநீரால் குளிப்பாட்டு செய்வித்த வீரமகள், “இவன் குருதி என் குருதியுடன் கலக்கும் வரை இருவரையும் யாருமே தொடாதீர்கள்!”
என்று கொழுநனை மாய்த்த கொடுவேல் கொண்டே குத்திக்கொண்டு சாய்ந்த குலக்கொடியின் காஞ்சி. தந்தையும் தாயும் சாவூர் செல்லும் நேரம் தந்திடுவீர் அவர் மகளை யென்று பெண் கேட்டுப் போர் தொடுத்து வந்தவனை, முதுகில் புண் பெற்று ஓடவைத்த ஒப்பற்ற காஞ்சி. வேல் பாய்ந்த தன் மார்பையும் பால் நிலா போல் முகத்தையும் ஆல் படரும் கொடி போல ஆளன் தலையோடு அவள் சேர்த் தணைத்த காஞ்சி. இன்னொரு மனையில் இறந்த கணவனுக்காகப் பொன் நிகர் மேனியாள் புலம்பித்தவித்து பின்னொரு வாழ்க்கை எதற்காக வென்று மின்னலாய்ப் பாய்ந்து நெருப்புக்கிரையான காஞ்சி.
கன்னல் அல்ல உயிர் என்று காட்டுதற்கும் கற்பின் பெருமை நிலை நாட்டுதற்கு மட்டுமே பெண் இனத்தார் செய்யும் இந்தத் தியாகம்; மண்ணில் ஆண் எவன் செய்வான் எனக் கேட்டு, கண் இனமாம் பெண் இனத்தை வாழவைத்து, கண் விழிக்க வைத்த காஞ்சி. இத்திணையை இதற்குமேல் எழுத எனக்குத் தினைத்துணையும் தெம்பில்லை; அதனாலே நிறுத்துகிறேன்.
