உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 40 · 42 / 102

களவியலுக்காமென காப்பிய மேலோன் தீட்டிக் காட்டும் களவொழுக்க இயல்பு எனும் நூற்பாவுக்கு, தமிழ் உளங்கொண்ட பெரியோன் வெள்ளை வாரணர் உரை வகுத்துச் சொல்வதைக் காணின் மறையோர் தேயத்து மணமுறை எட்டு என்று தொல்காப்பியர் சுட்டிக் காட்டுவது ஏன் என்று புரியும். குறையுடைய அவ்வழிகள் முழுவதையும் நிறையுடைய தமிழர் ஏற்றாரில்லை என்றும் வடமொழியாளர்க்கே அந்த முறையனைத்தும் வகையாகப் பொருந்துமென்றும் - அவற்றில் ஒன்றிரண்டே தமிழர் மணமுறைக்கு ஒத்துப் போனதென்றும் உரையாளர் மொழிகின்றார்.

எட்டுவகை மன்றல் முறை என்னவென்று சுட்டும்போது; அய்ம்பதை நெருங்கிடும் ஆண்மகன்; ஆறிரண்டு பனிரெண்டு வயதாளை மணப்பதெனில் - “பிரமம்” என்று பெயர் பெறுமாம். “பிரசாபத்தியம்” எனும் பெயரோ; பிரியமுடன் மைத்துன கோத்திரத்தானுக்கு பெண் கொடுத்தல் என்றும்; பெண்ணுக்கு பசுவும் எருதும் சிலையாகப் பொன்னாலே செய்து தருதல் “ஆரிடம்” என்றும்; ஆசிரியன் ஒருவன் வேள்வி மூட்டச் செய்து அதன் முன்னே ஆரணங்கைக் காணிக்கையாக்கல் “தெய்வீக மணம்” என்றும், ஆணும் பெண்ணும் அவரவரும் தாமே எதிர்ப்பட்டு அணைத்து மகிழ்ந்து ஆயிற்று எல்லாம் எனிலோ; அதனைக் “காந்தர்வ” மென்றும் மற்றும் கொல்லேற்று கொம்பொடித்து அடக்கியவனை கற்றவில் வித்தைப் போட்டியிலே கரைகண்டு வென்றவனை பற்றுண்டு பொருள்மேல் எனப் பேழை கேட்டுப் பெற்றவனை கற்றுணர்ந்த பெண் கழுத்தில் கூட தாலி கட்டச் செய்வதுண்டு அதற்குப் பெயர் “அசுர” மணமென்பார்; அவள் விருப்பத்திற்கு மாறாக நடத்தும் மணம்; “இராக்கத” மென்றும் வயதில் மூத்தவளை, தூங்குவதே வழக்கமாகக் கொண்டவளை பயமின்றி மதுவருந்திக் களிப்பவளை கட்டி வைக்கும் மண நிகழ்வுக்கு அட்டியின்றிப் பெயர் வைத்தார் “பைசாச” மென்று!

இந்த எட்டுவகை மணமுறை ஏற்பாட்டை ஏற்காத காரணத்தினால்தான் மறையோர் தேயத்து மணமுறை இவையென்று கூறி மறைமுகமாக உணர்த்துகின்றார் காப்பியர் என்றுரைத்து மணமுறை இவை பெரும்பாலும் தமிழர்க்குரியதல்லவென மதிப்புமிகு பெரும்புலவர் மறுப்புரையே எழுதிவிட்டார். களவு என்பது கையாடல்; சிறிய கொள்ளை; கயவர் செயல் அவை என்று கருதி வெறுப்பது இயல்பு! அவ்வியல்புக்கு மாறாக ஆண்மகன் ஒருவனும் ஆரணங்காம் ஒருத்தியும், அருகருகே நின்றாலும்; உடற்புணர்ச்சிக்கு அவசரம் காட்டாமல், உள்ளங்களின் புணர்ச்சியாலே உவகைகொண்டு நிறை கடவாமல் நினைந்துருகி மறைமுகமாய்ச் சந்தித்து மகிழ்வர் என்றும் ஆங்கதற்கான துணை நின்று ஆவன செய்தல் பாங்கன், பாங்கியர் பாசமிகு பணிகள் என்றும் அறம் பொருள் இன்ப மொடு அய்ந்தொழுக்கமிணைந்த அன்பும் கலந்து அருங்காதல் பிணைப்பு தோன்று மென்றும் ஆருயிர் இரண்டும் ஒருயிராய் ஆகுமென்றும் யாழ் மீட்டும் இசைவல்லார் - ஆழ்கடல் முத்துப் போல் அருந்தமிழ்ச் சொல்லெடுத்து வாழ்கதிர்ச் செல்வனை வாழ்த்திடுவர்; “களவியல்” குற்றமல்ல; உளமொன்று படுவதாலே தாழ்வொன்றும் இல்லையெனப் பாழ்மனப் பிறவிகட்கும் விளக்கம் சொல்லி விரித்து வைப்பார் களவியல் நிகழ்வுகளை!

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 1) காமக்கூட்டம் = காதலர்கள் அன்புச் சந்திப்பு குறிப்பு :- தொல்காப்பியனார் காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமையால் மறையோர் தேஎத்து மணமுறைக்கும் தென்றமிழ் நாட்டு மண முறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்க உணர்த்தல் அவரது கடனாயிற்று. ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே உண்டாகும் கூட்டுறவை ஒருதலைக்கேண்மையாகிய கைக்கிளை, ஒத்த கேண்மையாகிய அன்பினைத் திணை, ஒவ்வாக் கேண்மையாகிய பெருந்திணையென மூவகையாகப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு.

அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டு வகையாகப் பகுத்தல் வடநூல் மரபாகும். (வெள்ளைவாரணனார்)