உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 41 · 43 / 102

குறும்பு செய்யும் தோழன் எனினும் குணநலன் மிகவும் கொண்டவன் அலைகடல், கரைமீது கொண்ட காதலேபோல் தலைமகன் மீது தனியா அன்பை என்றும் பொழிபவன் அந்திசாயும் நேரத்திலே அம்மன்கோயில் ஓரத்திலே முந்திச் சென்ற தலைமகனை கையொலித்துக் கூப்பிட்டு “பந்திக்குச் செல்வது போல் ஏனிந்த பதைப்பு? பாதிச் சந்திர ஒளி தனிலே பார்த்து வருகின்றேன் ஒரு தேவதையை! தெய்வமேதான் அவள்; திருக்கோயிலுக்குள்ளிருந்து திருவாயில் பக்கம் வந்து நிற்கின்ற காட்சி கண்டேன்”.

பாங்கன் இதைச் சொன்னவுடன், தலைவன் பார்த்துவிட வேண்டும் அவளையென்று பருந்தொன்று கிளி நோக்கிப் பாய்வது போல் பாங்கன் சொன்ன திசை நோக்கிப் பறந்து சென்றான். அய்யப்பாடு அணுவுமில்லை; அம்பிகை தெய்வம்தான் அவன் அருகே அவதரித்து அணிமணியால் அலங்கரித்து அழகுருவாய் நிற்பதாக எண்ணிக் கொண்டு அடியார்ந்து முன்னேறிச் சென்றான் மிக அருகில்! வாய்திறந்து பேசி சந்தேகம் போக்கிக் கொள்ள வாய்ப்பில்லை; தெய்வம் பேசாது என்பதாலே!

கண்களாலே ஆய்வுசெய்து கண்டுபிடிப்போம் கடவுள்தானா அறிவோம் எனத் துணிந்தான்! கூந்தலில் சரிந்த மலர்களை நுகர்ந்து ஆங்கொரு வண்டு அலைந்து திரிந்ததால் மக்கள் சூடும் மலருக்குத்தான் மணம் உண்டென்று மனத்தெளிவு தினையளவு பெற்றான் அவள் ‘மாதேவி’யல்ல வென்று! அணிமணிகள் பூண்டிருந்த அங்கம் கண்டு அத்தனையும் பூவுலகில் பொற்கொல்லர் செய்தறிந்து அரைப்பகுதி ஆய்வை முடித்து அகமகிழ்ந்தான் அவள் தேவதை அல்லவென்று!

கொங்கை மீதும் தோள்மீதும் வள்ளிக் கொடியின் தொய்யல் எழுதியிருந்தமையால் கையில் இருந்த கழுநீர்ப் பூவின் கடிமணம் நுகர்ந்து கொண்டிருந்தமையால் வான் கண்ணல்ல உன் கண்தான் அந்த வட்ட நிலா முகத்தில் என்றறிந்தமையால் தெய்வப் பெண் என்றால் இப்படித் திறந்து மூடாதே இமைகள் என்று தெரிந்தமையால் ஆடவன் தன்னைக் கண்டு அச்சத்தால் தடுமாற்றம் ஏற்பட்டமையால் தெய்வமகள் அல்ல; அவள்; தன்னைத் தேடிவந்த மாடப்புறாதான் என - முழுமையாகத் தெளிந்தான் - குறும்புக்காரத் தோழனோ நெளிந்தான் - நிலையறிந்து புதரோரம் ஒளிந்தான்! “வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று அன்னவை பிறவும் ஆங்கு அவண் நிகழ நின்றவை களையும் கருவி என்ப” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 4) இழை = அணிகலன் அலமரல் = தடுமாற்றம் இமைப்பே = கண்ணிமைத்தலும்