உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 42 · 44 / 102

புதர் மறைவில் வெகுநேரம் மறைந்திருந்து காதலர்க்கு இடர் எதுவும் விளைவிக்காமல் இருமல் ஒன்று தொண்டையிலே எட்டிப் பார்த்தபோதும் தருணமல்ல இதுவென்று தடை போட்டு நிறுத்திவிட்டு என்ன பேசுகின்றார் இருவரும் எனக் கேட்பதற்கு இரு செவியும் அகலமாய்த் திறந்துவைத்தான் அன்புப்பாங்கன் எதுவுமே ஓசையில்லை; ஏன் என்ற குழப்பத்தால் “எங்குதான் போய்விட்டார்; இருக்கின்றாரா இல்லையா?”

என்று எட்டிப் பார்த்துக் கண்டுகொண்டான் இருவருமே சிலைகளாக நின்றிருந்தார் வீணாகப் பேசுவதற்கு விழியிரண்டு இருக்கும்போது கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல என்பதை அறிந்திருந்தார். கவின் மலராய் இருந்த காதல் காயாகி விட்டதின்று கனிந்து பழமாகுமட்டும் காத்திருத்தல் என்பதே களவியல் காட்டும் தமிழ்நெறி அறிவார் “உளமிரண்டு இணைந்த கதை சிறுகதையல்ல; இஃதோர் தொடர்கதையாக வாழ்த்துகிறேன்!

இன்றுபோய் நாளை வருக” என்றான் இனியதோழன். இறையன்பர்கள் கோயிலுக்கு வரும்வேளை என்பதால் இன்றிந்தக் கண்மொழி போதுமென்று பிரிந்து சென்றார். தோழனவன் தலைமகனின் தோளைப் பிடித்துச் சொன்னான் “தோகையவள் அச்சம் நாணம் மடன் கொண்ட அழகி”யென்று. தலைமகனோ பாங்கன் சொல்லைத் திருத்திச் சொன்னான்; “அத் திருமகளோ திருவென மெய் தீண்ட அச்சம் கொண்டவள் நாணம் என்பது நங்கையரின் உடன்பிறந்த நல்லியல்பு. நான் ஏற்காத ஒன்று, மடன் எனும் அறியாமை, அணியாக மகளிர்க்கு ஆயிற்று என்பதைத்தான் - அவளும் நானும் அறியாமை பூண்டிருந்தால் உடல் உறவு நிகழ்ந்திருக்குமன்றோ!

காதற் பறவைகளாம் யாமிருவர் களவியல் வழி என்பது உளம் சேரும் வழிதான் என்றும் உடல் சேரும் காந்தர்வ வழியல்ல என்றும் உணர்ந்து இருந்தோம் - உளம் மட்டும் புணர்ந்து பிரிந்தோம்!” உற்ற தலைவன் உரை நிகழ்த்தி முடித்தவுடன் உயிர்த்த தோழன்; வியப்பாலே விழி விரித்து “நாட்டம் உணர்த்தியும் நல்ல குறிப்புகள் காட்டியும் ஆடவர் வலிமையும் ஆயிழை பெருமையும் ஊமை மொழியிலேயே உறுதிப்படுத்தியிருக்கின்றீர் ஒருநாள் இதுபோல்; ஒவ்வொரு நாளும் திருநாள் ஆகட்டும் உமக்”கென்று பாங்கன் வாழ்த்தினான் பரிவுடன் தமிழ்ப் பண்புடன்!

1. “நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்” 2. “குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்” 3. “பெருமையும் உரனும் ஆடூஉ மேன” 4. “அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 5, 6, 7, 8) நாட்டம் = விருப்பம் உரன் = வலிமை ஆடூஉ = ஆடவர் மடன் = அறியாமை நிச்சம் = நித்தம்