தொல்காப்பியப் பூங்கா
பகுதி 43 · 45 / 102
அம்மன் கோயில் அருகில் கண்ட அழகுச் சிலையை நினைத்தவாறு ஆண்மகனும் அன்றுமுதல் அவன் உருவை நெஞ்சில் பதித்தவாறு ஆயிழையும் அடுத்தொரு நாள் எப்போது காண்பதென்று தவமிருந்தார். கண் துஞ்சார் பசி நோக்கார். புண்மீது காரப்பொடி பட்டது போல் இதயத்தின் வேதனையை இதழ் அழுத்திக் கடித்துக் கொள்வார் எத்தனை நாள் வெளியிடாமல் பெற்றவர்க்குத் தெரியாமல் இருவருமே பொறுத்துக் கொள்வார்? இருளில் மறைவதுண்டோ மின்னல் ஒளி?
அல்லால் இருள்தான் தடுத்ததுண்டோ இருள் கிழிக்கும் அவ்வொளியை! ஏற்றதொரு பாங்கனைத் தலைமகன் பெற்றது போல் எழிலார் தோழி யொருத்தித் தலைமகளுக்கும் உண்டு! “தெய்வமகளோ நீ யென்று திகைத்தான் கள்வன் என்றாய்; தெளிவிக்கும் சான்றுகளால் தெரிந்து கொண்டான் அவன் உன்னை! பூமிமகள், பூமகள், புதுமை பொலியும் மகள் எனினும்; புனலோடும் வழிதனிலே புல் சாய்ந்தாற் போலக் கருமமே காதலென்று சாய்ந்தாடுகின்றாய்! இருவர் உருவமும் உணர்வும் ஒன்றிக் கலந்து;” - தோழன்; தோழி ஆறுதல் பலவற்றை அடுக்கிக் கூறியும், மாறுதல் இல்லை மனத்தே பதிந்த காதலில்!
தோழியும் தோற்கிறாள்; தோழனுக்கும் வெற்றியில்லை; தொகை தொகையாய்ப் படை எதிர்த்த போரில் அல்ல, தொடருகின்ற காதல்தனை தொடராமல் வேகம் தடுக்கும் செயலில்! தோகை மயிலாளும், துணைவனையே “ஒருதலையுள்ளுதல்” எனும் இலக்கண நெறியில் கண்டாள். இடைவிடாது நினைவில் உண்டாள்; இவன் என்ன ஆனான்? தேக்கு மரத் தேகக் கட்டழகு நாயகனும் ஊக்கமது தளர்ந்து உடல்வாடி; காதல் உச்சியிலே நின்றான். கண்ணிற் காணும் பொருள் எல்லாம் காதலுக்குக் காதலனாகத் தெரியும் காதலனுக்குக் காதலியாய்த் தோன்றும் நாமதற்கு என் செய்வதென்று தோழன் தோழி; தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் இறைவனைத் துணைக்கு வந்து அருள் புரியக் கேட்பார்!
ஆண்மகன் நெஞ்சிலும் ஆயிழை நெஞ்சிலும் நான் காதலாயிருக்கிறேன், கடவுளாயில்லை எனப் பதில் வரும். காதல் நினைவால் செயல் மறப்பார் - எதையும் கருதிச் செயல்படும் நிலை மறப்பார் மயக்கம், மறத்தல் என மோகமுற்று, பித்தாகி தயக்கமில்லை சாவதற்கென்று தலைகொடுக்கத் துணிந்து விடும் காதலால் களவியலின் மாண்பனைத்துக்கும் காட்சியாகத் தோன்றி நிற்பார்! களவியலின் ஒழுகலாறு என்றுரைப்பார் இவற்றை! காதலியலின் கரை சேர்வதற்குள்ளாக, கடக்க வேண்டிய தடைக் கற்கள் இவையெனிலோ; தடந்தோளும் திட நெஞ்சும் உண்டு தாண்டுதற்கு என்று தலைமகனும் தலைமகளும் சூளுரைத்தார் அன்று நிலைபெற்ற அக்காப்பியத்தை நினைவூட்டுகின்றேன் இன்று!
“வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்று அச் சிறப்புடை மரபின் அவை களவு என மொழிப” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 9) வேட்கை = குறையாத விருப்பம் ஒருதலையுள்ளுதல் = இடைவிடாது நினைத்தல் நாணுவரை இறத்தல் = நாணத்தின் எல்லையைக் கடத்தல் போறல் = போன்ற மறத்தல் = பித்தாதல் மயக்கம் = மோகித்தல்
