உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 44 · 46 / 102

“தேவ மகள் இவள் இல்லை யென்றாலும் தேவ மகள் இவள் போல் இருக்கமாட்டாள் என்பேன் தேடியலைந்து பிடித்தாலும், ஒரு கோடிப் பெண்களில் தேர்வு செய்தாலும் நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலம் உட்பட நிலவுக்கு நிகரான இவளைப் போல் வேறொருத்தி நில உலகிலானாலும் புராணங்கள் கூறுகின்ற பல உலகிலானாலும் நிச்சயமாய்க் காணமாட்டோம் நீ இவளைக் கண்டதனால் மறுக்க மாட்டாய்; உண்மைதானே நான் உரைப்ப”தென்று; ஓடாமல் நின்றிருந்த புரவித் தேரினிலே, உட்கார்ந்து கொண்டு உயிரனைய தோழனிடம் ஒராயிர முறை கேட்டுவிட்டான்; அலுத்துக் கொள்ளாமல் அவனும் “ஆம், ஆம்” என்று ஒப்புதலும் அளித்துவிட்டான் அப்போதவள் ஒரு மதிற்சுவரில் மறைந்திருந்தாள் தலைமகனும் அது தெரியாதது போலத்தான் - அவள் தலை முதல் கால் வரையில் வர்ணித்துக் கொண்டிருந்தான்.

“அழகின் சிகரம் அவள் ஐம்பால் எனும் கூந்தலை; அள்ளியெடுத்து வாரி முடித்து, கொண்டை போட்டுக் கொண்டாலும்; குழல், பனிச்சை, சுருள் எனவே கூந்தல் அலங்காரம் செய்து கொண்டாலும் சுழலும் நம் விழிகள் இந்தச் சுந்தர மோகினி யார்? அந்தர தேவதையோ, அல்லால் அரம்பை, ஊர்வசி என்கிறார்களே; அவர்தானோ என்று! அவளையும் என் நெஞ்சுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை அன்புப் பாங்கனே நீ உரைத்தால்தான் என்ன? ஆயுள் என்ன உனக்கு குறைந்தா போகும்” என்று அந்தத் தேர்த்தட்டை ஒரு மிதிமிதித்த வேகத்தில் மிரண்டு போன புரவி இரண்டும், தேரோடு பாய்ந்து சென்று மின்னற்கொடியாள் மீது மோதிடும் நிலைவந்தபோது அடடா; நீயா?

என்றலறி அவள் கரம்பிடித்து இழுத்துக் கொண்டான். “வண்ணமயில் இங்கு வந்தது எனக்குத் தெரியாதே; என்னவோ நல்ல காலம் எப்படியோ பிழைத்து விட்டாய் கன்னலே; காயமொன்றுமில்லையே” என்று கவலையால் துவண்டு கேட்டு தழுவிய கைகளை எடுக்காமல் தாங்கிக் கொண்டு; ஏங்கிக் கொண்டிருந்தேன் எத்தனை நாளாய் எனச் சொல்ல; “நானுந்தான்” என்று அவள் சொல்லாமல் நாணம் தடுக்க நின்றாள்.

நாணேற்றி விட்டான் காமன் வில்லை இனி நமக்கிங்கே வேலை இல்லையென இரு புரவிகளைத் தேரோடு சேர்த்து இழுத்துக் கொண்டு - இனிய பாங்கன்; இடம், வசதிதான் என்பதை இமை சொடக்கிக் கூறி இமைப்பதற்கு முன்பே இடம் பெயர்ந்தான் - உயர்ந்திருந்த மரம், செடி, கொடிகள் அசைந்து உதிர்த்திருந்த மலர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பயன் தரு நற்பணியாற்றும்; பஞ்சு மெத்தைப் படுக்கையாக! பக்கத்தில் யாருமில்லை - சற்று “பயம்” மட்டும் துணையாக அவனுக்கு!

பாதுகாப்புத் தோழியாக மகளிர் பண்பாடே பாவைக்கிருந்ததாலே ஏதுநேரும் என்கின்ற துணிவுடனே சூதறியாச் சோதி நிலா - அந்தச் சுந்தரனின் வெளியழகைச் சுவைத்தமர்ந்தாள் கண்களாலே ஈர விறகைக் காயவைத்து எரிப்பதற்கு முனைவதன்றி இன்றைய கற்பூரம் போல் காம நிகழ்வுக்கு அவளை எதிர்பார்த்தான். உள்ளத்தால் உடன்பட்டு அவளோ உடல் தீண்டமட்டும் உடன்படாமல் ஒதுங்கி அமர்ந்து கொண்டாள்; ஓர விழிப் பார்வையாலே - அவன் உயிர் மொண்டு விட்டாள் அதில் ஒப்பம் கண்டுவிட்டான் அவனும்!

இனியென்ன பயமென்று இன்பக் கனிகள் பற்றிச் சுவைப்பதற்கும் ஈருயிர் ஒருயிராக மட்டுமல்ல ஈருடலும் ஒருடலாக ஒட்டிக் கிடப்பதற்கும் அட்டியின்றி உரிமை அளிக்கப்பட்டதென்று மகிழ்ந்து அளவுக்கு மேல் சென்றவனை; அவள் தடுத்த போது; இரந்து கேட்கின்றேன் எத்தனை இடையூறுக்கிடையே நாமிருவர் சந்திக்க வருகின்றோம் எண்ணிப்பார் இளமானே எனக்கேட்டு தழுவுகின்ற தலைவனிடம் “இடையூறு கிடக்கட்டும்; இப்போது என் இடையிலே ஊருகின்ற விரல்களை எடுங்கள்” என்று சைகையால் கூறிவிட்டுச் சற்றுத் தள்ளிப் படுத்துக் கொண்டாள்.

இனிப் பொறுக்க முடியாது இளங்கிளியே; என்னை இறந்து போக விட்டு விடாதேயென்று வஞ்சியினைக் கெஞ்சிடவே அவளும் நாணத்தை விலக்கி வைத்து நாயகனை விலக்காமல் விட்டுவிட்டாள் இணங்கினாள் முதலில் அவன் விருப்பத்திற்கு என்றாலும் இணைந்தனர் பிறகு இருவர் விருப்பமும் ஒன்றாக ஆனதாலே! “மெய்தொட்டுப் பயிறல், பொய்பாராட்டல், இடம்பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடுநினைந்து இரங்கல், கூடுதல் உறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்....”

(பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 11) பயிறல் = ஒலித்தல், கூடுதல் தழாஅல் = தழுவுதல் இடையூறு = தடை, துன்பம் கிளத்தல் = விதந்து கூறுதல் தேற்றம் = துணிவு, மனம் கலங்காமை