தொல்காப்பியப் பூங்கா
பகுதி 45 · 47 / 102
காதலனைச் சந்தித்து வருகின்றேன் என்றாள் காதல் தலைவி கலை கூந்தல் கண்டவுடன் புரிந்து கொண்டேன் என்றாள் தோழி! நிலை குலையுமளவுக்கு நேர்ந்ததேன் பாவாய்; மனம் அலைபாயும் விதமாக ஆனதேன் சொல்வாய்! தோழிக்குப் புரிய வைக்க - தன் தோளைக் காட்டினாள் தலைவி! கிழித்து விட்ட குருதிக் கோடு! கீறிவிட்ட பிறைக் குறிகள்! ஆறிவிட்டாலும் பின்னர் வடு மறையாத ஆழமிகு காயங்கள்! அப்பப்பா; மிகக் கொடுமை! “தலைவனை இகழ்வதாகத் தயைகூர்ந்து எண்ணிடாதே; விலங்கினமா?
மனிதன்தானா? விழுந்து விட்டாய் அவன் வலையில்; உன்னை, விழுங்கியிருந்தாலும் பரவாயில்லை; அவன் வெறி பிடித்து விளையாட ஏன் விடுத்தாய்?” “துன்பத்தால் நீ துடிக்கின்றாய் தோழி இன்பத்துக் களத்தினிலே இனியவனாம் என் தலைவன் - ஒரு முனிவனைப் போல் எனை நெருங்காமல் தானிருந்தான் நித்த நித்தம் நாங்கள் சந்தித்தாலும் அந்த நிலைமையிலே மாற்றமில்லை. களவொழுக்கம் காணும்போது காந்தர்வம் எங்கோ ஒன்றிரண்டு விதி விலக்காய் உண்டே தவிர காம நிகழ்வுக்கு கடுகளவும் உடன்பட்டதில்லை”.
“பின் எவ்வாறு பெண்ணே; உன் கன்னத்தில் காயம்? கையில் கீறல்? விரலில் வீக்கம்?” “இடம் குறித்து, எப்போதும் போல் இருவரும் சந்தித்தோம்; பிரிந்தோம். பெற்றோரின் சம்மதமும் இருவர்க்கும் உற்ற தோழி உன்னாலே கிடைத்ததாலே மணம் விரைவில் நடக்குமென்ற மகிழ்ச்சியுடன் மணல் திட்டைக் கடந்து முல்லை மலர் பூத்திருக்கும் கொல்லைவழி; அது தொல்லை வழி எனத் தெரியாமல் வந்துவிட்டேன். பல்லை ஒருவன் இளித்தவாறு பக்கம் வந்து பேசலானான்.
கதை முடித்து வருகிறாயா? அடுத்த காட்சி தொடரலாமா என்றவன் கேட்டவுடன் களவொழுக்கத்திற்கே களங்கம் கற்பித்த கயவன் அவனைக் காண்பதற்கும் மனமில்லாமல் நடையினிலே வேகம் சேர்த்து அந்த நந்தவனம் தாண்டத் துடித்தேன் அதற்குள் அவன் என்னை அணைப்பதற்குக் கைகள் நீட்டி எதற்கும் நீ அஞ்ச வேண்டாம் எவரும் நமைப் பார்க்க மாட்டார் நாணம் விடு நங்காய் என்று நன்றாக வளைத்து விட்டான் தழுவிக் கொண்டிருந்த அவன் பிடியிலிருந்து நழுவிக் கொண்டு நான் சொன்னேன்; நாணம் உயிரினும் சிறந்தது நாயினும் கீழானவனே அறிக என்று!
நாணத்துக்கு அத்துணை நன்மதிப்பா? நங்கையே நாணம் வேண்டாம் நான் கேட்கும் உன் கற்பை நாணத்துக்கு மாற்றாகக் கொடுத்துவிடு என்றான். ஓநாய் மனிதனே ஒன்றறிவாய்; உயிரினும் சிறந்தது நாணம் நாணத்தை விடச் சிறந்தது கற்பு நானிப்போது சொல்லுகின்றேன் நாணத்தை யிழக்கவும் துணிந்துவிட்டேன் நாணம் பெண்ணின் பலவீனம் என்றுதானே நடுத்தெருவில் குறுக்கே வந்து என்னைச் கெடுத்திடவே முனைகின்றாய்! இதோ நாணத்தை உதறி என் கற்பை நானே காத்துக் கொள்வேன் சூறைக் காற்றாகச் சுழன்றேன் பாறைக் கல் எடுத்து வீசினேன் அவனும் வாளாயில்லை ஆங்கொரு வாளாகவே மாறி - எனை அடக்கியாளப் படபடத்தான் ஆண்மகனைத் தாக்குவதா?
என்ற நாணம் மட்டும் நான் கொண்டிருந்தால் என் மானம் போகக் கற்பு பறி போயிருக்கும். காயங்களுக்கு காரணம் புரிகிறதா தோழி உயிரினும் சிறந்தது நாணம் அதனினும் சிறந்தது மானம் அதுதான் பெண்களின் கற்பு” என்றாள் தோழி மகிழ்ந்து நின்றாள் தோகையாள் பிரிந்து சென்றாள். “உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர் நீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே”.
(பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 22) சிறந்தன்று = சிறந்தது செயிர் நீர் = குற்றம் நீங்கிய தொல்லோர் கிளவி = மூதறிஞர் மொழி புல்லிய = பொருந்திய தாவில் = வருத்தம் இல்லாத
