தொல்காப்பியப் பூங்கா
பகுதி 46 · 48 / 102
மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் மாநாய்கன் மகள் கண்ணகிக்கும் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து திருமணம் நிகழ்த்தினர் நல்ல நாள் நல்ல நேரம் கணித்துத்தான் எல்லோரும் மகிழ மணவிழா நடந்தபின் மாசறு பொன் என்றும் வலம்புரி முத்தென்றும் காசறு விரை யென்றும் கரும்பென்றும் தேன் என்றும் மஞ்சத்தில் கொஞ்சிக் குலவிய மங்கைநல்லாள் கண்ணகியின் மணவாளன் பிரியாமல் இருந்திடவும் - அவள் மங்கல நாண் காத்திடவும், நாளும் நேரமும் துணையாய் நில்லாது, வாளும் வேலுமாய் அவள் வாழ்வைத் துளைத்தது! கணவனை இழந்தாள் கைம்பெண் ஆனாள் கள்வனின் மனைவியெனக் காவலனும் இகழ்ந்தான்.
பார்ப்பனர் ஓதிய மந்திரமும் - கோள் பார்த்துக் குறித்த நல் ஓரையுமே பாதுகாத்திடவில்லை அவர்களையென்று பகரும் சான்று, சிலப்பதிகாரம்! சிலம்புக்கு மிக முற்பட்ட காலத்திலேயே சீர்மிகு இலக்கண இலக்கியப் பூங்காவாக, தமிழர்க்குக் கிடைத்த கருவூலம் தன்னேரில்லாத் தொல்காப்பியம்! வடமொழியாளர் வந்து புகுந்த நேரம் அடியோடு கெடவில்லை தமிழர் நலன். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பமானது அந்தப் பண்பாடு! அதனையேன் இல்லையென மறுக்கவேண்டும்?
அய்யன் தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார்; கற்பியலுக்கு முன்னால் இடம் பெற்ற களவியலில் காதலியைச் சந்திக்க வருகின்ற காளை, காட்டுவழிப் பாதையென்று கருதி நின்றோ காவல் மிகுதியெனக் கலங்கிச் சோர்ந்தோ, கடிய துன்பம் கொடிய விலங்குகளால் நெடிய தொலைவு இருக்குமென அஞ்சியோ; தலைவியுடன் சந்திப்பைத் தலைவனவன் தவிர்த்திடுதல் ஒருநாளுமில்லை எனினும்; களவொழுக்க முறையை ஒட்டி காதலர்கள் கூடிப் பேச வாய்ப்பு வந்த வேளை ஓரையும் நாளும் உத்தம மாயில்லை யென்று ஒத்திப் போடும் வழக்கமட்டும் உண்டாம் என்று; நச்சினார்க்கினியர் எனும் உரையாளர் நவிலுகின்றார் நாளும் ஓரையும் பார்த்தல் நலமே என்று. இன்னொரு உரையாளர் இளம்பூரணர் என்பார் இதற்கு அதே உரை கூறியுள்ளார் ஏறத்தாழ!
ஆய்வுரை எழுதியுள்ள அறிஞர் வெள்ளைவாரணர் ஓரை எனில் விழாவும் விளையாட்டும் என்கிறார். உற்ற நண்பர்களுடன் ஊர் விழாவில் கலந்து கொண்டான் காதல் தலைவன் எனச் செய்தி ஒன்றும் சொல்கிறார் இல்லையெல் இவன் எங்கே போனானென்று காதல் தலைவனின் களவொழுக்கத்தை கண்டுகொள்வார் ஊராரென்றும் கழறுகின்றார் இப்புலவர். ஒன்றல்ல; இரண்டல்ல; ஓரை யெனில் விழா தானென்று எடுத்துக்காட்டுப் பலவற்றை அடுக்கிக் காட்டுகின்றார். காப்பியர் நூற்பாவில் ஓரை யென்ற சொல்லுக்கு காலம் நேரமெனும் பொருள் தவிர்த்து விழாவெனவும் ஒரு பொருள் கொள்வதானால் அக்கால வழக்கத்தில் நாள்கோள் பார்ப்பதில்லை எனும் செய்தி நிலைநாட்டப்படும்!
இல்லை இல்லை பார்ப்பதுண்டு என்று சொன்னால்; இடையில் புகுந்த கொள்கையினால் நாளும் கோளும் நம்மினத்தில் தேளும் பாம்புமாய் வந்து சேர்ந்தது என்போம்! “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா:- 44) “ஆற்றினது அருமையும், அழிவும், அச்சமும், ஊறும் உளப்பட அதனோரன்ன” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 45) ஒழுக்கம் = நெறி, நல்வழி ஓரை = முகூர்த்த நேரம் கிழவோன் = தலைவன் ஆற்றினது அருமை = கடிய வழி
