உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 47 · 49 / 102

கரணம் என்பதைக் கற்பியல்; திருமண மென்றே தெளிவாக்கும்! இளம்பூரணர் எழுதிய உரையில், அந்தணர் அரசர் வணிகர் என அம்மூவர்க்கே உரியது “கரணம்” என்றார். காரணம்; அவர்கள் மேல் வருணமென்றார். “கரணம்” கீழோராகிய வேளாளருக்கும் ஆகிய காலமும் உண்டென்றார். அவ்வாறே நச்சினார்க்கினியரும் ஆமோதித்தார் வருண பேதத்தை! மேலோர் மூவர் என்பது ஆண்டிருந்த மூவேந்தர் மரபே என்றும் அவர் ஆளுகையின் கீழிருந்த குடிமக்களையே கீழோர் என்று குறித்தனர் என்றும் ஆன்றோர் பலர் இன்று ஆதாரம் தருகின்றார் “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்” என்பதை சான்றுகளில் ஒன்றாகச் சாற்றும் தொல்காப்பியம் கொளற்குரிய மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது ‘கரணம்’ எனக் கற்பியல் ஒப்பியதே போல் களவொழுக்கம் காண்போரிடமும் கொடுப்போரின்றியும் ‘கரணம்’ உண்டாம் என்பதை ஒப்பியதாம்; இணைந்து உடன் போகிய காரணத்தால்!

“கற்பு எனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்து உடன்போகிய காலையான” “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 1, 2, 3) கரணம் = மணம் கொளற்குரி = கொள்ளுவதற்குரிய குறிப்பு:- “மேலோர் மூவர்” என்றது, அந்தணர், அரசர், வணிகர் என்னும் மேற்குலத்தார் மூவரையும் குறித்தது எனவும், “கீழோர்” என்றது நாலாம் வருணத்தவராகிய வேளாண் மாந்தரைக் குறித்ததெனவும் கொண்டு உரைவரைந்த இளம்பூரண அடிகள், “இதனாற் சொல்லியது, முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்தலின் எல்லார்க்கும் ஆம் என்பதும், பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத் தவிர்ந்தது எனவும் கூறியவாறு போலும்” என விளக்கந்தருவர்.

இவ்விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் “எல்லார்க்குங் கரணம் பொதுப்பட நிகழ்ந்த முற்காலம்” என்றது, தமிழகத்தில் நால்வகை வருணப்பாகுபாடு இடம் பெறாத தொன்மைக் காலத்தினையும் அக்காலத்தில் எல்லா மாந்தர்க்கும் வதுவைச் சடங்காகிய கரணம் பொதுவாக அமைந்த திறத்தினையும் “பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத் தவிர்ந்தது” என்றது, பிற்காலத்தில் ஒரு குலத்துக்கு ஒரு நீதியாக வருண வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு கரும சாத்திரத்தில் வகுக்கப்பட்ட வதுவைச் சடங்கினை வேளாண் மாந்தர் ஏற்றுக் கொள்ளாமையால் அவர்க்கு அது தவிர்ந்தது என்னும் உண்மையினையும் உய்த்துணரவைத்தல் அறியத்தகுவதாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் தமிழ் மக்களை நிலவகையாற் பகுத்துரைத்ததல்லது குலவகையாற் பகுத்துரையாமையாலும், இந்நூற்பாவில் “மேலோர் மூவர்” என இன்றிவர் என்னும் எண்ணியற் பெயராற் குறிக்கப் பெற்றோர் தமிழகத்தை ஆட்சி புரியும் முடியுடை வேந்தர் மூவருமே என்பதனை “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” (தொல்-செய்யுளியல் 75) எனவரும் நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளமையாலும் நன்குணரலாம்.

இனி ஈண்டுக் “கீழோர்” என்றது அம்மூவேந்தரது ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் எல்லோரையும் குறிப்பதாகும். நச்சினார்க்கினியரின் உரையும் விளக்கமும் இளம்பூரணர் உரையினை அடியொற்றி அமைந்தன. வெள்ளைவாரணனார் - (தொல்காப்பியம் - கற்பியல்)