உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 48 · 50 / 102

குளக்கரையில் நதிக்கரையில் குதிரைகள் புரளும் மணல்வெளியில் - அந்தக் குமரனை நான் அடிக்கடி காணுகின்றேன் குளத்தில் கெண்டை மீன் துள்ள மறந்தாலும்; நதியில் வாளை மீன் வர மறந்தாலும்; குதிரைகள் ஒருநாள் வராத குறை இருந்தாலும்; இந்தக் குமரி மட்டும் காத்திருப்பாள் குமரனுக்காக! குன்றின் மறைவில் குடிலின் அருகில், மாமரத் தோப்பில் மல்லிகைப் பொழிலில் தென்னஞ் சோலையில் தேக்கு மரக்காட்டில் நிழலுருவம் இரு உருவம் நித்த நித்தம் நிமிர்ந்து நோக்காமல் கை கோத்துக்கொண்டு ஒலி எழாமல் பேசுவதும் உருவிரண்டில் ஒளி விழாமல் உலவுவதும் ஊரார் அறியா ஒளிமறைவு என்றெண்ணி ஏமாறுகின்றார் உளிபடாச் சிலை அவளையும் - உருமறைத்து வருகின்ற அவனையும் கையும் களவுமாகப் பிடித்து களவொழுக்கக் காட்சிக்கு நாம் கட்டாயம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கரணம் எனும் திருமணத்தை நடத்தவேண்டும் - அல்லால் மரணம் தன்னைத் தழுவிடினும் மறக்கமாட்டேன் என்று கூறி; இந்தக் குமரியை அந்தக் குமரன் கைவிடவும் கூடும் - எனவே பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், பூங்கொடியை நாம் பறி கொடுத்துவிட்டு புலம்பித் திரிந்து பயனேதுமில்லை இன்றைக்கே இருவரிடம் பேசிப் பார்ப்போம் இவர்களின் பெற்றோர் பார்வைக்கும் வழக்கை வைப்போம் இப்படி பொது மண்டபத்தில் நல்லோர் கூடி எப்படி இதனைத் தீர்த்து வைப்பதென்று ஆளுக்கொரு யோசனை சொல்லி அவரவர் முடியை அவரவர் பிய்த்துக் கொண்டபோது அவ்வளவு தொல்லையேன் உங்களுக்கென்று அவனும் அவளும் அவையில் புகுந்தனர்! ஊர்த் தலைவர் ஓடிநின்ற தேர் போல வடிவுடையார் “பார்த்தீரோ பதைக்கின்றார் தெருவோர் எல்லாம் பகல் குறி யென்றும் இரவுக் குறி யென்றும் - பதுங்கி மனைஅருகே; ஒதுங்கி மதிலருகே; கண்ட கண்ட இடமெல்லாம் சந்திக்கின்றீர் களவொழுக்கம் கடைப்பிடிக்கின்றீர்; இறுதியில் இவளை ஏமாற்றமாட்டாய் என்பதற்கு உறுதியாக எங்களுக்கு நீ அறிவிக்கப் போவதென்ன?”

என்று கேட்டார் விழியிரண்டும் கனல் உமிழ! “நன்று கேட்டீர் பெரியவரே - நான் சொல்லுகின்றேன் இறப்புலகிலும் யாம் ஒன்றாக இருப்போம்” என்றான். ஏய்ப்புலகமாக மாறிவரும் காலமப்பா எதற்கும் நம் அய்யரை அழைப்போம் என்றார் ஏனழைத்தீர் எனக் கேட்டவாறு அவரும் வந்துவிட்டார் அய்யர் எதற்காக என்று கேட்டொருவர் அவர் வேறு குலம், நம்மிடையே ஏன் வரவேண்டும் என்றார். அன்பரே அந்த அய்யரல்ல இவர்; அறிக! அறநெறி வகுத்து தீநெறி விலக்கும் தக்கவர் இவர் - தலைமைச் சிறப்புடையார் இவர் களவு ஒழுக்கம் தவறி பொய்யும் வழுவும் தோன்றியபோது கரணம் யாத்த அய்யர் இவர்!

ஊர்த் தலைவர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து உத்தமராம் அய்யர் எழுந்து; உற்றார் உறவினர் காதலர்க்கு இருந்தால் பெற்றோர் உட்பட அழைத்து வருக என்றார் உடன் வந்தனர் அவர்கள் ஒப்புதல் உண்டா என்றார்.... ‘ஆம்’ என்று அசைந்தன தலைகள் அது நன்று என்றார் அய்யர்....

கவலையில்லை இனிமேலே களவு ஒழுக்கம் தீர்ந்தது கரணம் எனும் மணவிழா - அதுவே காதலர் வாழ்வில் திருவிழா! “அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் அங்கு அதன் முதல்வன் கிழவனாகும்” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 48) “வெளிப்பட வரைதல், படாமை வரைதல் என்று ஆயிரண்டென்ப வரைதல் ஆறே” (பொருளதிகாரம் - களவியல் - நூற்பா : 49) “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 4) அம்பல் = பழிமொழி, புறங்கூறுதல் அலர் = பழிதூற்றுதல் கிழவன் = உரியோன் வரைதல் = மணந்து கொள்ளுதல் வழு = பிழைபட நடத்தல் அய்யர் = பெரியோர் குறிப்பு :- அய்யர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித்தமிழ்ச் சொல்லாகும்.

அச் சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை ‘ஆர்ய’ என்னும் வட சொல்லின் திரிபாகப் பிறழ உணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் கரணம் யாத்தனரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்தியதென்பதும், அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ‘அய்யர் யாத்தனர் கரணம் என்ப’ எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் விதிக்கப் பட்டதென்பதும் நன்கு துணியப்படும்.

முன் பொய்யும் வழுவுந் தோன்றாத களவு மணத்தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். வெள்ளைவாரணனார் - (தொல்காப்பிய வரலாறு)