தொல்காப்பியப் பூங்கா
பகுதி 49 · 51 / 102
காப்பிய நூலில் குறித்துக் காட்டியவாறு கரணம் என்பது கொடுப்பதற்குரியோர் கொடுத்திடக் கொள்வது! களவொழுக்க காலத்தில் உடன் போகியபோது கரணம் என்பது கொடுப்போரின்றியும் உண்டாம் என்பதற்கேற்ப இல்வாழ்வேற்றனர் குமரன், குமரி! மன்பதை போற்ற வாழ்ந்திடத் தொடங்கினர். குமரருக்கே முதலிடம் காப்பியர் காலத்திலே குடும்ப வாழ்விலும் பிறவற்றிலுமிருந்த காரணத்தால் காப்பியப் பூங்கா இயற்றிடுங்காலை - தமிழ்க் காசினி அந்நாள் கண்டிருந்த நிலை மாற்றி புதுக் கதை புனைந்திட விரும்பினேனில்லை புலவர் பெருமான் தொல்காப்பியர் போற்றியதாகப் புகலும் சமயமெது, கடவுள் எது என்பதிலே பூசல் ஏதும் தோன்றாவண்ணம் இரண்டையும் பொதுவில் வைத்தார்.
அவர் வழியில்தானே அய்யன் வள்ளுவரும் அனைவர்க்கும் பொதுவாய்க் குறளில் வாழ்கிறார்! அவர்களின் நெறியே அகவாழ்வு நெறியாய்க் கொண்டு அன்பால் இணைந்து குமரன் குமரி இல்லறம் நடாத்தினர். களவொழுக்கமெனும் கட்டவிழ்ந்த காரணத்தால் கணவன் மனைவி கூட்டம், மொட்டவிழ்ந்த மலராயிற்று! புணர்ச்சி போன்றவையால் ஏற்படும் ‘மலிவு’ எனும் மகிழ்ச்சியும்; புணர்ந்த நினைவு தேயாமல் நிலைக்கும் ‘புலவி’ எனும் நிகழ்ச்சியும்; வாய்த்த காமத்துக்கின்பம் தரும் ‘ஊடலும்’; வாயிலோர் தூதுவர் உதவியாலே ஊடல் தீர்த்தல் எனும் ‘உணர்வும்’ பொருளீட்டவும், போர்க்களம் செல்லவும் புதிய கலை பயிலவுமான கடமை கருதி; தலைவன் தலைவியிடம் ஏற்படும் பிரிவும் கரணத்துக்குப் பின்னர்; காதலர்க்கிடையே தோன்றுவதே!
தெள்ளமுதே! தெவிட்டாத தேனே! உள்ளதொன்றும் ஒளிக்காமல் சொல்லிவிடு! கள்ளவொழுக்க மெனும் களவியல் நாம் கற்றபோது அள்ளக் குறையா அன்பை நாமிருவர் பொழிந்தபோது மெள்ள நீ என் மனம் வருடி - பக்தி வெள்ளத்தில் எனை ஆழ்த்த முனைந்தது ஏன்? தலைவன் கேட்டான் தலைவியிடம்! தலைவி சொன்னாள் “நம்முடைய காதல், பழுதேதுமில்லாமல் வெற்றி பெற வேண்டுமானால் தொழுதேத்த வேண்டும் கடவுளையென்று தோழி சொன்னாள்; அதற்கு இப்போதென்ன கோபமா?”
என்றவாறு அன்னத்தை இலையிலிட்டு அருகில் அமர்ந்தாள் இணைந்து உணவருந்த! “ஆஃதென்ன உன் கை பட்டால் அடிசிலும் அமுதமாகிறது? அதுமட்டுமா? பூவின் மணம் கூட புதுமணம் பெறுகிறதே; இதற்கென்ன காரணம்? இவையும் இறை அருள்தானோ?” என்றான். “என் இறைவன் இங்கென் இதயத்தில் இருப்பதால்தான்” என்றவுடன் உலையிலிட்டு, இலையிலிட்ட அன்னத்தை உண்பதற்கு இருவருமே மறந்துவிட்டு ஒருவரை யொருவர் முந்திக் கொண்டு ஒருவர் இதழை ஒருவர் உண்ணலானார்.
உணவருந்தி முடிந்த பின்னர் ஒரு சுவையே இனிது, அது அமிழ்தமல்ல, இதழே! என்றார். மணமான புதிது என்பதாலே மதியம், காலை, மாலை, பகல் இரவெனப் பாராது களவொழுக்கக் காலத்தில் காம தாகத்தில் கண்ட கனவெல்லாம் செயற்படுத்திக் களிப்புற்றார். அந்தணர் என்போர் அறவோர் எனத் தெளிந்து அறிவார்ந்த முறை பின்பற்றி நடப்போமென்று அவர் இருவருமே முடிவெடுத்து நடக்கலானார்; ஆனாலும் களவு கால நினைவுகளை முற்றாக மறக்கவில்லை. அப்போது சந்தித்த தடைகளையும் அவற்றை தகர்த்தெறிந்த முறைகளையும் தோழியும் தோழனும் துணை நின்று தோல்வி காணாது தொண்டாற்றிய வகையினையும் பேசிப் பேசி மகிழ்ந்தனர் இருவரும்; நடந்தவற்றைப் பூசிப் பூசி மெழுகினர்!
‘பொட்’டென ஒலித்தது ஊடல் முரசம்! “காலொடியும் மட்டும் காத்திருந்தேன் ஒருநாள்; காதல் தலைவன் நீ வரவில்லை” என்று துணைவியும் “நீ என்ன ஒழுங்காம்? ஒருநாள் இரவு முழுதும் நித்திரை கொள்ளாமல் நின்றிருந்தபோது நீயும்தான்வரவில்லை” என்று துணைவனும் நீட்டி முழக்கினர் என்றாலும் அந்தக் குற்றச்சாட்டு அனைத்துமே அந்தரத்தில் எழுதிய எழுத்தாகிப் போனதாம்!
உருவான ஊடல் போரினையே உடன் வாயிலோர் எனும் தூதுவர் உணர்த்தி மாற்றிய உணர்வினால் உவகை பூத்ததாம் மீண்டும்! ஊடுதல் காமத்திற் கின்பம் எனப் பழகி உணர்ந்தோர்க்கு உணர்த்தவும் வேண்டுமோ? “கரணத்தின் அமைந்து முடிந்தகாலை நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் அஞ்சவந்த உரிமைக் கண்ணும் நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையின் நினைக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் நாமக் காலத்து உண்டு எனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும், சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கு என அடிசிலும் பூவும் தொடுத்தற் கண்ணும், அந்தணர் திறத்தும் சான்றோர் தேத்தும் அந்தமில் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும், ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும், அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் தான் அவள் விழைத்த பருவத்தானும், நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி.........”
(பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 5) எஞ்சா = நீங்காத இறந்துவரும் = மிகுந்து தோன்றும் நாமக்காலத்து = பயந்த காலத்து ஏமுறு = பெருமைக்குரிய அடிசில் = உணவு அழியல் = மனக்கலக்கம் நோன்மை = பொறுமை வாயில் = வாயிலோர், தூதுவர்
