தொல்காப்பியப் பூங்கா
பகுதி 50 · 52 / 102
“வீடெல்லாம் இசையே; வீட்டில் நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச ஏடெலாம் அறிவே; ஏட்டின் எழுத்தெலாம் களிப்பே; அந்தக் காடெலாம் ஆடும் கூத்தே; காகங்கள் குருவி எல்லாம் மாடெல்லாம் இவ்வா றானால் மனிதர்க்கா கேட்க வேண்டும்?” மூத்த தமிழ் ஆசான் முதுபெரும்புலவர் தொல்காப்பியர் யாத்த பெருநூலில் யாவரும் போற்றிடும் வண்ணம் கோத்த மணியாரமாய்க் குடும்ப விளக்கிரண்டைக் காட்டிவிட்டு பூத்த மலர்க் கொடி போல் புதுமணம் பரப்புகின்ற இல்வாழ்வை பொருளதிகாரக் கற்பியலில் சித்தரிக்கும் சிறப்பு கண்டால் புரட்சிக் கவிஞர் பாவேந்தர்; ‘வீடெல்லாம் இசையே’ என்று ஈராயிரம் ஆண்டுக்குப் பின்னர் எழுதியுள்ள கவிதை போல சீராக இருவர் உள்ளம் அமைந்த இல்லம் அன்றே காண்போம்!
இல்லை குறையேதுமென இனிய வாழ்க்கை இருந்தாலும் பிள்ளை ஒன்றில்லை எனக் குறை உனக்குண்டேயென்று கிள்ளை மொழிப் பாவையிடம் கேட்டுவைத்தான் - அவன் கேள்விக்குப் பதில் சொன்னாள் அவள் ஒரு விரலைக் காட்டி! “நில் அங்கே! எனை மிரட்டுகிறாயா?” என்றான்; கேலியாக! நின்று ஒரு மாதம் ஆகின்ற தென்றாள். நிறுத்தாமல் நகை முழக்கம் செய்தான் - அவள் தடுத்தாலும் கேட்காமல் தழுவிக் கொண்டாடினான் கருத்தாக உடல் நலம் காக்க வேண்டும் கண்ணே, கருத்தரித்தால் கவனம் மிகத் தேவையடி பெண்ணே - என ஓரா மாதம் முதல் ஒன்பதாம் மாதம் முடியத் தீராக் கவலையுடன் அவள் பின்னே திரிந்துகொண்டு பேறு பார்க்க மருத்துவச்சி வந்த பிறகே பிரிந்து வந்தான் பெருமூச்சு விட்டவாறு!
‘ஆண் குழந்தை’ என்ற ஒலி அறைக்குள்ளே கேட்டவுடன் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு அனுமதி கிடைத்தவுடன் அங்கே நுழைந்தான் அவள் வலியெல்லாம் போன இடம் தெரியவில்லை அரும்பை அணைத்தவாறு புன்னகை புரிந்தது அந்தப் பூ துரும்பாய் இளைத்துவிட்டாய் என்று துடைத்துவிட்டான் நெற்றி வியர்வை ‘ஒருநாள் வலியிலா?’
என்று நாணம் காட்டி ஓரக் கண்ணால் கேலி செய்தாள். பெற்றோர் உற்றார் குறிப்பாக அவள் தாய் தந்தை நற்றாய் அவளை வாழ்த்திடவே நல்லோர் எல்லாம் வந்திருந்து எண்ணெய் தேய்த்து நீராட்டிக் குழந்தைக்கும் விழா நடத்தி - அந்த மண்ணை மீட்கும் போரில் அமரரான முன்னோர் நினைவுபோற்றி மகிழ்ச்சிக் கடலில் தலைவி மிதந்தபோது மற்றொருத்தி மீது தலைவன் மையல்கொண்ட செய்தி மழுவெனத் தாக்கியது - அவளோ தீயில் புழுவெனத் துடித்தாள்!
அவள் புலியென மாறிடவும்; இல்லில் புயல் ஒன்று புகுந்திடவும் கூடாதென்று குமுறினான் குன்றாக நின்றவன் குறுகினான். தலைவியின் தோழிகளை அணுகி - அவள் தணல் நெஞ்சம் தணிக்கச் சொன்னான் ஊடல் நீக்கும் வாயிலோரும் ஒவ்வொருவராய் முயன்று பார்த்தார் எதிலும் பயனில்லை என்றவுடன் இரவு நேரம் கட்டிலறையில் பாவையின் பாதமிரண்டையும் பற்றிக் கொண்டு மன்னிப்புக் கேட்டான்; மறுக்க முடியுமா அவளால்? அல்லால் மறக்கத்தான் முடியுமா?
எனவே மன்னித்துவிட்டாள்; ‘மன்னிப்பு எனும் சொல்லை இயற்றியவன் வாழ்க’ என நினைத்தவாறு கோதையிடம் நெருங்கலானான் ‘குழந்தை’ என்றாள், விலகிக் கொண்டான். “........தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும், புதல்வன் பயந்த புனிறு தீர்பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி அய்யர் பாங்கினும் அமரராச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் உறலருங் குரைமையின் ஊடல் மிகுத்தோளைப் பிற பிற பெண்டிரின் பெயர்த்தற் கண்ணும்......”
(பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 5) பயந்த = பெற்ற புனிறு = ஈன்றணிமை, தீட்டு நெய்யணி = பிள்ளைப்பேற்றின் பின் முதல் முழுக்கு உயங்குதல் = வருந்துதல், வாடுதல் குரைமை = பெருமை உறல் = உறவு
