உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 51 · 53 / 102

குமரன் குமரி வீட்டில் குழந்தை பிறந்த விழாவுக்கு, கோட்டைத் தெரு வேலனும் வந்திருந்தான் - மாட்டுக் கொம்பொன்றில் செய்த சிற்பம் குழந்தைக் கழுத்திலணிந்து மகிழ்ந்தான் என்ன வேலா என்றுமில்லாமல் இன்று தன்னந்தனியாக வந்துள்ளாய் ஏனழைத்து வரவில்லை வஞ்சியினை, என வாஞ்சையுடன் இருவருமே அவனைக் கேட்டார்! பேச்சில்லை சில நாளாய்; பிள்ளையில்லாக் குறையை மூச்சுக்கு முப்பது தடவை நான் முணுமுணுத்தேன் என்று ஆச்சியின் வீட்டுக்குப் போய் விட்டாள் ஆயிற்று ஆறு கிழமை என்றான்.

அவன் முகத்தில் படிந்த சோகம் அகற்றுதல் வேண்டுமென அடுத்த நாளே குமரன் வேலனுடன் ஆச்சி வீடு சென்றடைந்தான். ஊடலா உறவுமா பெண்ணே உமக்கோர் குழந்தை இல்லையெனில் பிரிந்திருந்தால் நீங்கள் இருவரும்; பிறந்திடுமோ குழந்தைச் செல்வம்? என பெற்றோர்கள் சொல்வார்கள்; அவர்கள் வதுவை முடிந்து வருடம் பத்தான பிறகே வயிற்றில் உதிக்கேனாம் நான்! இன்னும் வாய்க்கவில்லை பிள்ளையென்று வம்பு செய்து உம்மைப்போல் என் தாய் தந்தை பிரிந்திருந்தால் - அவர்கள் ஊடலுக்குப் பயந்து நான் பிறந்திருப்பேனா என்ன?

இப்போதும் எங்களுக்கிடையிலேயும் எத்தனையோ வம்பு தும்பம் வாட்டுகின்ற ஊடலும்! பொருள் தேட வேண்டுமென்று புறப்பட்டேன் வெளிநாடு இருளாகும் தன் வாழ்வு; தானும் வருகிறேன் என்றாள் மகளிர், கடல் பயணம் கூடாதென்ற மரபினை நாம் மாற்றலாகா தென்றேன் - நீரின் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் நீர் விழி காட்டி ஊடல் கொண்டு ஊமையாயச் சில நாள் இருந்தாள். முன்னோர் வழக்கம் என்னால் மாற்றதற்கு முடியவில்லை என்னையே நான் மாற்றிக் கொண்டேன் கடல் பயணம் இல்லையென்று!

பக்கத்துத் தலைநகர் பயணம் போனேன் பத்து நாட்கள் பாசறைப் பயிற்சிக்காக! பிரியமாட்டேன் எப்போதும் என்றீரே; புரியவில்லை அப்போது பொய் சொன்னீர் என்று! ஐந்தாம் நாளே எழுதி அனுப்பினாள் ஓலை; அதன்பிறகு எனக்கு அங்கென்ன வேலை? பாதியிலே திரும்பி விட்டேன் பாவை அவள் பிரிவுத்துயர் துடைப்பதற்கு! விட்டுக் கொடுத்தல் ஒரு வழிப்பாதையாக எம் வீட்டில் என்றுமே இருந்ததில்லை மனைவிக்கு செய்யக் கூடாத மாபெரும் பிழையொன்றை மகன் பிறந்த நேரத்தில் செய்து விட்டேன் - அவளோ மலையேற மாட்டேன் என்று சாமியாடத் தொடங்கிவிட்டாள் மன்னிப்பு நான் கேட்டவுடன் மறந்துவிட்டாள் நடந்த கதை!

அப்படி என்னைப் போல் இங்கே யொன்றும் ஆணாதிக்கப் பிழை நடந்து விடவில்லை அதனாலே உன் ஆளனுடன் ஊடல் விடுத்து ஆக்க பூர்வ ஒத்துழைப்புத் தருவாயானால் ஆயிரங் காலத்துப் பயிராம் இல்வாழ்வின் அரிய பயனை அறுவடையாய்ப் பெறுவாய் என்றும் இன்னும் எத்தனையோ வாதம் புகன்றும் இல்லறமல்லது நல்லறமன்று என்றும் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று என்றும் கூறி; “வேலன்! உனக்கும்தான் சொல்லுகிறேன்; வீட்டுக்கென்று ஒரு பிள்ளை இல்லையெனில் என்ன நாட்டுக்கே பிள்ளையாக நாம் உழைப்போம் என்று சூளுரைத்துச் சுடர்முகம் தூக்கி வாளும் உறையுமாக வாழ்ந்திடுவீர் என்று நாளும் நான் வாழ்த்துகிறேன்” என்றான்.

வணக்கமும் நன்றியும் கூறி வாழ்வோம் சேர்ந்தென்று இணக்கம் தெரிவித்தனர் வஞ்சியும் வேலனும்! “........பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும், சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் காமத்தின் வலியும், கைவிடின் அச்சமும், தான் அவள் பிழைத்த நிலையின் கண்ணும் உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும் மடம்படவந்த தோழிக் கண்ணும், வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும் மீட்டுவர ஆய்ந்த வகையின் கண்ணும், அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்......”

(பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 5) பையுள் = மயக்கம், சிறுமை அகல்வு = பிரிவு