தொல்காப்பியப் பூங்கா
பகுதி 52 · 54 / 102
தரையில் ஓடியாடி தண்ணீரில் விளையாடி நுரையில் குமிழ் ஊதி தண்டை சதங்கை குலுங்க நடந்து தமிழ் மழலை இசைக்கும் தளிர் அவன் தாயிருக்கும் திசை நோக்கிச் சென்ற போது தடுத்திடையே நிறுத்தி, தங்கமே எனத் தழுவிக் கொண்டு தலைமுதல் பாதம் வரை முத்தமீந்தாள், உயிராக ஒருத்தி இருக்கும்போது உபரியாக வந்த மற்றொருத்தி! உதறி விட்டு அவள் பிடியை ஓடிவருவான் பிள்ளை நொடியிலென்று வீட்டோரப் பலகணி வழி விழி நீட்டிக் காத்திருந்தாள் தாயார் - வெகுநேரம் காத்திருந்தும் அவன் வராமையால் வெகுண்டு சொன்னாள்; விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?
தகப்பனைப் போலத்தான் தனயனுமிருக்கின்றான் தாய் எனக்குத்தான் பெற்ற மனம் பித்து தமக்கையாம் நான்; தங்கையர் கூட்டமாம் அவர்கள்! பதக்கத்தின் மத்தியிலே வைரமுத்து நீ, உன்னைச் சுற்றி எத்தனை முத்துக்கள் இருந்தால்தான் என்ன; அத்தனையும் போலி முத்து; நீ மட்டுமே புகழ் முத்து என்று அளவில்லாமல் வர்ணிக்கின்றார்; அடுத்தடுத்து முத்துக் குளிக்கச் செல்கின்றார் எதிர்த்தெதற்குப் பேச வேண்டுமென வாய் மூடியிருந்தால்; எனக்கென் பிள்ளை கூட உறவற்றுப் போகும் என்று வாடினாள் வருந்தினாள் - அப்போது வகைவகையாய் அணிமணி பூட்டப் பெற்று வாய் நிறைய அம்மா என்றழைத்தவாறு வந்தான் மகன்.
எரிமலையாய்க் கனன்ற உள்ளத்தில் பனிமழையே பெய்தது போல் எங்குதான் ஓடிற்றோ அந்த இதய வெப்பம்? இங்குதான் இருக்கின்றீரா என்று குடும்பத் தலைவனைக் கேட்ட குல விளக்கு; இடும்பை கூர் என் வாழ்வுக்கு இவன் ஒருவனே இருள் நீக்கும் கதிர் இனிமேல் இன்றைக்கே கிளம்புகின்றேன் இவனோடு என் தாய் வீடு! சந்திரனில் களங்கம் போல் ஆடவர் சிலர் இருப்பதுண்டு; இங்குக் களங்கமே சந்திரனாய் நீர் ஆகிவிட்டீர் - இந்திரனும் இவ்விஷயத்தில் உம்மிடம் பாடம் கற்கவேண்டும் அருந்திறன் பெற்றவர் நீர் அணங்குகளை அணி சேர்க்கும் காரியத்தில்!
திருத்த முடியும் என இத்தனை நாள் தீப்பாயாமல் இருந்தேன், நிறுத்த முடியாதும்மால் நித்திய கேளிக்கையை! நிம்மதி எனக்கு வழங்குதற்கு இந்த நிறைமதி ஒருவன் இருந்தால் போதும்! குறைமதி கொண்டு குடும்பம் குலைத்தீர் கறைபடு வாழ்வுமக்கு கற்றுத் தரும் விரைவில் பாடம்! பேசிக் கொண்டே அந்தப் பேசும் பொற்சித்திரம்; அவள் மடியில் வீசிக் கொண்டிருக்கும் தென்றலை அணைத்தவாறு வீட்டை விட்டுக் கிளம்பி வெளியேற முற்பட்டாள்.
வேல்கள் ஆயிரம்; நெஞ்சில் பாய்ந்தது போல வாள்கள் ஆயிரம்; இதயம் சிதைத்தது போல கால்கள் நடுங்க நடந்து கதறி அழுது புலம்பினான்! “நடந்ததெல்லாம் மறந்து விடு; இனி நடந்தால் எனைவிட்டு அக்கணமே பறந்து விடு! வானம்பாடி நீயில்லா வாழ்வு எனக்கெதற்கு? கானம்பாடி இனி கவலையற்றிருப்போம் வா! பிறன் பழிப்பதில்லா நல்லறம் நடத்துவோம் வா! நானும் கற்பு காக்கிறேன் வா!”
சுற்றி வந்து காலில் விழுந்து விழுந்து எழுந்தான் “சுற்றத்தார் பார்த்தால் மட்டும் போதாது உமது முன்னாள் சுந்தரிகளும் வந்து உடனே காணட்டும் இக்காட்சியை” என்றாள்! “காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும், சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி நெஞ்சமொடு தன்வரவு அறியாமைப் புறம்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும், தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும், கொடியோர் கொடுமை சுடுமென ஓஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும், கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்று என மாதர் சான்ற வகையின் கண்ணும்......”
(பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 6) ஒப்பர் = போன்றவர் கோடல் = பொறுத்துக்கொள்ளல் அடிமேல் வீழ்ந்த = காலில் விழுந்த எங்கையர் = எம் தங்கையர்
