உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 53 · 55 / 102

குட்டி போட்ட பூனை போலக் குடும்ப வீட்டுக்குள் அலைந்திடாமல் கூண்டுக்கிளி வாழ்வு நடாத்தி நாடே இதுதான் என்றிருந்திடாமல் ஆண்டுக்கு ஓரிரு முறையேனும் அன்றைக்கே சுற்றுலா செல்லும் வழக்கம் தலைவன் தலைவி கடைப்பிடித்தனர் என்றும்; தலைநகர் கடந்து பிறநகர் சென்றார் என்றும்; குழந்தைச் செல்வங்களையும் கூட அழைத்துக் கொண்டு குளிர் நீர்த் துறைகளிலும் கோலமிகு சோலைகளிலும் இனிதாய் விளையாடிடுவர் இயற்கை இன்பம் நுகர்ந்திடுவர் என்றும்; காப்பியர் நூலில் கற்பியலில் காணும்போது காலம் முளைக்கும்போதே தமிழர் வாழ்வு; காய்த்துக் கனிந்திருந்ததென்ற செய்தி நமக்குச் செங்கரும்பாயினிக்கிறது! “யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 50) பதியிகந்து = ஊரைவிட்டுச் சென்று