தொல்காப்பியப் பூங்கா
பகுதி 54 · 56 / 102
மலை யுருண்டு வருவது போல் களத்தில் யானைகள் வரும்போது நிலை குலைந்து போகாமல் நேர் நின்று மோதும் வீரன், தலை யிழந்து போனாலும் கவலையில்லை; தன் நாட்டுக் கொடி உயர்ந்து பறக்க வேண்டுமெனப் போர் புரிவான்! நெற்றியிலே குருதிப் பொட்டிட்டு விடை கொடுத்தனுப்பிய தலைவி வெற்றி நீ பெற்று வருக என வாழ்த்தினாளே; அவளை மறந்தும் அவன் நினைப்பதில்லை அமர்க்களத்தில்! பகைவர் கோட்டை மீது அவன் நாட்டுக் கொடி - ஏறிப் பறந்த பின்னர்தான் என்னருமைப் பாவாய்; நமதே வெற்றியென்று செய்தி கூறி நாடு கடந்து செல்கின்ற காற்றினைத் தூதாக அனுப்புவான் அந்தத் தூய வீரன் என்று தொல்காப்பியக் கற்பியல்; துந்துபி முழங்குகிறது!
“கிழவி நிலையே வினையிடத்து உரையார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” (பொருளதிகாரம் - கற்பியல் - நூற்பா : 45) கிழவி = தலைவி வென்றி = வெற்றி
