தொல்காப்பியப் பூங்கா
அணிந்துரை · 1 / 102
பேராசிரியர் மா. நன்னன், புலவர், எம்.ஏ., பிஎச்.டி. நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். அது ஒருவகைத் தொகை நூலுமாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில் பிறபல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பன போலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும்.
தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்துகொள்ள உதவும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக்கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா எனும் நூல். இன்பச் சுவை பயக்கும் இல்லறத்தைச் “சம்சார சாகரம்” எனக் கூறியது போல், தொல்காப்பியத்தைக் கடத்தலாகாப் பெருங்கடல் என்றும், அணுகலாகாக் காடு என்றும், அளக்கலாகா மலை என்றும் கருதிக் கொண்டிருப்போர் பலரிருக்கக் கலைஞர் அதனைப் பூங்காவாகக் கொண்டு தாம் தும்பியாகித் தொல்காப்பியத்தேன் மாந்தித் தமிழ் மாந்தர்க்கும் அதனை இந்நூலால் வாயிலாக வழங்குகிறார்.
இந்நாவுள் இடம் பெற்றுள்ள சில பகுதிகளைப் பொதுவாகவும் “புகுமுன்” எனும் பகுதியைச் சிறப்பாகவும் பொருளுடன் படிப்போர்; கலைஞர் முயற்சியின் அருமையையும் பெருமையையும் நன்கு அறியக் கூடும். தொல்காப்பிய உரைகள் அனைத்தையும் பயன்படுத்தியுள்ளதோடு, நூல் பற்றியும் உரைகள் பற்றியும் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் பலவற்றையும் அகரமுதலிகள் போன்ற பிற ஆதாரங்களையும் நன்கு பயன்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கற்பிக்கும் முறைகள் பலவும் இந்நூல் முழுதும் பின்பற்றப்பட்டிருப்பதை அம்முறை வல்லார் காண முடியும். தொல்காப்பியம் கடவுள் வாழ்த்தொடு தொடங்கப்பட்டிலது எனத் தொடங்கி வளரும் இந் நூலின் போக்கும் இதன் விளைவும், தொல்காப்பியக் கருத்துகளை விளக்க முயன்று பெருமளவு அதற்குத் துணை செய்த திருக்கோவையார் போன்ற கோவைகள், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த நூலாசிரியராகிய கலைஞர் கற்பிக்கும் முறையைக் கையாள்வதில் வல்லவர் என்பதற்குச் சான்றுகளாக உயிர், மெய் ஆகிய எழுத்துகளின் எண்ணிக்கையைக் கற்போர் உள்ளத்தில் பதியவைக்கக் கையாளும் பாங்கையும், தமிழ் என்னும் சொல்லில் மெய்யெழுத்துகளின் மூவினமும் அடங்கியிருப்பதை எடுத்தியம்பும் பான்மையும், மானமில்லை, மாத்திரை போன்றவற்றைக் குட்டிக் கதைகளின் வாயிலாகத் தெளிவாக விளங்கச் செய்யும் சிறப்பையும், காட்டலாம்.
நீர் மேல் எழுத்தை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கலைஞர் இந் நூலில் கால் (காற்று) மேல் எழுத்தை உவமையாகக் காட்டி அனைவரையும் திகைக்கச் செய்கிறார். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல என்னும் உவமையை அறிவியல் முறையில் விளக்கும் சீர்மை கலைஞர் கலைஞர்தான் என நம்மை வாய்விட்டுக் கூற வைக்கிறது. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுக்கும் முறையே பலாக்கனியில், மேலுள்ள முள், சடை, சுவை ஆகியவற்றை உவமைகளாகக் காட்டி நம்மை எண்ண வைக்கிறார் அவர்.
மற்றும் கூற்றுகள், துறைகள் போன்றவற்றை விளக்கி அவர் படைத்துள்ளவை இலக்கியத் தன்மை வாய்ந்தவையாகவும், கற்போர் நினைவிற் பதித்துக் கொள்ளத் தோதாகனவையாகவும் திகழ்கின்றன. மலர்-39 இல் “காஞ்சித் திணையை விட்டு விட்டால், காஞ்சியே கனவில் வந்து குடத்தோச்சி மெல்ல எறியாதா?”
என்று அப்பகுதியைத் தொடங்கும்போது கலைஞர் வேறு காஞ்சி வேறு என்றிருந்த நிலை மாறிப் பிறகு கலைஞர் காஞ்சியிலேயே கரைந்து விடுகிறார். நம் நல்வாய்ப்பாக “இத் திணையை இதற்கு மேல் எழுத எனக்குத் திணைத் துணையும் தெம்பில்லை; அதனாலே நிறுத்துகிறேன்” என்னும் போதுதான் கலைஞர் அக் கரைசலிலிருந்து மீண்டு வந்து தனிப்படுகிறார். மாணாக்கர்கள் காஞ்சித் திணையை விளங்கிக் கொள்ளவும், என்றும் விலகாமல் அதனைத் தம் அகத்தே பதித்துக் கொள்ளவும் உதவும் விழுப்பம் சான்றது இப்பகுதி.
மலர்-45 இல் உயிரினும் நாணம் சிறந்தது, நாணத்தினும் கற்புச் சிறந்தது என்பதை விளக்கும் பகுதியும் மலர்-60 இல் பெண்மை பற்றிய கருத்துகளை முட்டறுத்துத் தெளிவிக்கும் முறையும் மலர்-22 இல் மகளிருடன் கடல் கடந்து செல்லும் வழக்கமில்லை என்பதையும் மலர்-27 இல் கொண்டுதலைக் கழிதல், கண்டோர் கூற்று ஆகியவற்றைத் தெளிவிக்கும் திறமும் அதைப்போன்ற பலவும் படித்துப் படித்துச் சுவைத்துச் சுவைத்துத் திளைக்கும் பான்மையவாகும். பகுத்தறிவுப் பகலவனாகிய தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் நடத்திய திராவிட இயக்கத்தின் தொடர் முயற்சிகளால் தமிழ் எழுத்துத் துறை, பேச்சுத் துறை ஆகியன மலர்ச்சியடைந்து மணம் பரப்புவதை அறியாதார் அறியாதாரே.
பெரியார் திருக்குறளுக்கு உரை எழுதி அதைத் தாமே பதிப்பித்து மிகக் குறைந்த விலைக்கு விற்றதாலும், திருக்குறள் மாநாடுகளையும் முத்தமிழ் மாநாடுகளையும் நடத்தியதாலும் இவர்களும் இந்த இயக்கத்தார் பிறரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்ததாலும் திருக்குறளும், சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் நன்கு பரவின என்பதை யாரால் மறுக்க முடியும்? அவ்வாறே கலைஞரின் குறளோவியமும், திருக்குறளுரையும், வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், பூம்புகார் போன்றனவும் செய்த தமிழ் மறுமலர்ச்சிப் பணியை இத்தொல்காப்பியப் பூங்கா தொடர்ந்து செய்து தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தும் என்பது உறுதி.
கலைஞர் தம் பதினான்காம் அகவைக்கு முன்னரே எழுதத் தொடங்கியவர். அவர் தம் பதினெட்டாம் அகவையில் முரசொலி ஏட்டைத் தொடங்கி இன்று வரை அதை வளர்த்துப் பெருக்கிச் சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர். அந்த ஆர்வமும், ஊக்கமும், முயற்சித்திறனும், அறிவு நுட்பமும், பல்வகை ஆற்றலும் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. தேக்க நிலை தோன்றும் அறிகுறியே காணப்படவில்லை. இதில் மற்றொரு சிறப்பு இந் நிலையை அவர் தெளிவாக உணர்ந்தவராகவும் இருப்பதுதான்.
அவர் வளர்ச்சி நிலையிலேயே இருக்கும் முதிர்ச்சி பெற்றவர். சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் போன்ற இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து ஒப்பற்ற படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். குறளோவியமும், திருக்குறளுரையும் அவர்தம் தமிழ்ப் புலமைக்கு எடுத்துக்காட்டுகளாகும். தமிழில் வெளிவந்துள்ள அகரமுதலிகள் அனைத்தையும் அவர் கையாள்கிறார். “நிகண்டு கற்று இலக்கியப் பயிற்சி செய்தபின் இலக்கணம் கற்க வேண்டும்” என்னும் பழைய மரபின்படிப் பார்த்தாலும், இக் கால நிகண்டுகளாகிய அகரமுதலிகளை நன்கு ஆளும் திறன் பெற்றுத் தமிழ் இலக்கியப் பயிற்சியும் நிரம்பப் பெற்றுள்ள கலைஞருக்குத் தொல்காப்பியப் பூங்காவில் புக வேறு எத்தகுதி எஞ்சியுள்ளது?
இவற்றாற்றான் கலைஞர் தமிழாய்ந்த தமிழர் என்றும், முத்தமிழறிஞர் என்றும் தகுதி மிக்க அனைவராலும் பாராட்டப்படுகிறார். “தொல்காப்பியத்தைத் தொடுவதற்கே தயங்கித் தயங்கி மலர் வனத்தில் நுழைந்த ஒரு மங்கை ஆங்குப் பூத்துக் கமழும் அனைத்து மலர்களையும் சூடிக் கொள்ள ஆசைப்படினும், தன் தலை தாங்கும் அளவே ஆய்ந்து மலர்களைப் பறிப்பது போலவே நானும் பறித்தெடுத்து சூடிக் கொள்ளச் சுழன்று சுழன்று தொல்காப்பியத் தோட்டத்திற்குள் குறிப்பாக நூறு மலர்களைக் கொய்திடவும் அதனால் இன்பம் எய்திடவும் விரும்புகிறேன்” என்று தொல்காப்பியப் பூங்காவிற் புகும் கலைஞர் “காலத்தால் பாணினிக்கும் கொடில்யருக்கும் முற்பட்ட தொல்காப்பியரின் இலக்கிய இலக்கண இன்பத்தில் நானும் மூழ்கித் திளைத்து உங்களையும் பூங்கா புக அழைத்தேன்; வந்தோரை வெறுங்கையுடன் அனுப்புவது தமிழர் பண்பாடல்ல என்ற முறையில் நூறு மலர்களை அள்ளித் தந்திருக்கிறேன் உங்கள் அழகுக் கைகளில்” என்று கூறுவதன் வாயிலாக அவர் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாகவும், சூடிக் கொடுத்த சுடராகவும் தம்மை உருக்காட்டிக் கொண்டுள்ளார்.
வளரும் வலிமையும் பெற்றோர் சிலர் தொல்காப்பியப் பொய்கையை வலிந்து திருத்தியும், மாற்றியும் குழப்பும் நிலையைக் காணும் எமக்குக் கலைஞரின் நேர்மை குன்றா அணுகுமுறை களிப்பூட்டுகிறது. கலைஞர் தமக்கெனத் தனிக் கோட்பாடுடையவரெனினும் மரபுகளை மதிப்பவர். எதையும் தாமே, தக்கவாறும், முறைப்படியும் முயன்று, உழைத்துக் கண்டுபிடித்து, ஆய்ந்து பயன்படுத்துபவர். அவர் தமக்குச் சரி என்று படாவிட்டால், எவர் கூற்றையும் ஏற்கமாட்டார்.
தாம் நாத்திகராயினும் பிறர் கருத்தை மதிக்கும் பேராண்மையால் இந்நூல் பல இடங்களில் ஆத்திகக் கருத்துகளை ஆளத் தயங்கவில்லை. இந்நூல் முழுதும் அவர் தமக்கென ஓர் அரங்கத்தைத் தாமே அமைத்துக் கொண்டு அதில் நிற்கிறார். மேலும் அப்பெருமகன் நுனிக் கொம்பர் ஏறியும் இடைக்கண் முறியாது ஊக்கமுடன் உயர்பவர். மாணிக்கவாசகர் தம் திருக்கோவையாரில் “தீந்தமிழின் துறைவாய் நுழைந்ததால் மெலிவு ஏற்படும்” என்கிறார். ஆனால் நம் கலைஞர் இலச்சினை பதிக்குமளவுக்குத் தொல்காப்பியம் ஈரமாக உள்ள தமிழ்த் துறையில் புகுந்து புறப்படும் மெல்லிய வலிமையுடன் திகழ்கிறார்.
அத்தகைய கலைஞர் அகம் புறம் எனும் இருவகை மலர்களையும் தொல்காப்பியப் பூங்காவிலிருந்து கொய்துத் தாம் சூடி மகிழ்வதோடு தேனி போல் பிறர்க்கும் சூடக் கொடுத்தும் மகிழ்கிறார். இதனைத் தொல்காப்பியத்தில் என்ன இருக்கிறது என எள்ளி ஒதுக்குவோரும், தொல்காப்பியம் எப்படி இருக்குமோ என அஞ்சி ஒதுங்குவோரும் கற்றால் அவர்தம் நிலை மாறித் தொல்காப்பியத்தைச் சுவைக்க முனைவர் என்பதில் ஐயப்பாடில்லை. சென்னை, 21-10-2002.
மா. நன்னன்
