தொல்காப்பியப் பூங்கா
பகுதி 99 · 101 / 102
பூங்கா ஒன்று அமைக்கிறோம் என்றால் அங்கே எத்தகைய செடி கொடிகள் மரங்கள், உலவிட வருவோர்க்கான வசதிகள் வேண்டுமென சிந்தித்து அவற்றைச் செயல்படுத்துகிற அதே நேரத்தில் பூங்காவில் எவை எவை இடம் பெறக் கூடாது என்று பார்த்துக் கொள்வதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. பூங்கா அமைப்பு; நூல் அமைப்புக்கும் பொருந்துமென்பதால் ஒரு நூல் அமைப்பில் எத்தகைய சிதைவுகள் (குறைகள்) இருத்தலாகாது என்பதை ஒரு நூற்பா எடுத்துக் காட்டுகிறது.
போக்குவரத்து விதிகளின்படி ஒரு சாலையில் இடது பக்கமாகச் செல்வதும், வலது பக்கமாகச் செல்வதும் நாட்டுக்கு நாடு வேறுபட்டு இரண்டில் ஒன்று விதியாகச் செய்யப்படுகிறது. எந்தப் பக்கம் என்பது முக்கிய பிரச்சினை ஆனாலும் அதை விட மிக முக்கியமான பிரச்சினை அனுமதி அடையாளம் கிடைக்காமல் சாலையின் குறுக்கே போகக் கூடாது என்பதாகும். அதே போல பூங்காவில் ஒரு நீச்சல் குளம் தேவைதான் எனினும்; வேறொரு புறத்தில் தரைக் கிணறு அமைத்திடக் கூடாது.
காரணம்; பூங்காவில் தாய் தந்தையருடன் வந்த குழந்தைகள், பெற்றோர் அறியாமல் ஓடி விளையாடிடும்போது தவறிப் போய் அந்தத் தரைக் கிணற்றில் விழுந்து விடக்கூடும். பூங்காவில் அமர்ந்து படிக்கலாம் என்று புத்தகமும் கையுமாகச் சிலர் வருவர். அவர்களுக்கென ஒளி மயமான விளக்குகள் ஓரிரு இடங்களில் எரிந்திடல் வேண்டுமெனினும்; நாள் முழுவதும் அலுவலகத்திலும் வீட்டிலும் பணியாற்றிவிட்டு ஓய்வாக உட்கார்ந்து உற்சாகமாக உரையாடிட ஆடவர், பெண்டிர் என வீட்டு விளக்குகள் ஆங்காங்கு தனித்தனியாக அமர்ந்து ஒளி மறைவாகப் பொழுது போக்கிட விளக்குகள் இல்லாதிருக்க வேண்டும்.
இருப்பினும் மங்கலாக மட்டுமே எரிய வேண்டும். அவசரத் தேவைக்குக் கழிவறை வேண்டுமெனினும் அதைப் பூங்கா நடுவே அமைத்திடல் கூடாது. இவ்வாறு பூங்காவில் அனுமதிக்கக் கூடாதவை, இருக்கக் கூடாதவை பற்றியெல்லாம் கூறியுள்ளது போலவே; ஒரு நூலில் இடம் பெறலாகாத குறைகளை வரிசைப்படுத்தி இந்த நூற்பா குறிப்பிடுகிறது. “சிதைவு எனப்படுபவை வசை அற நாடின் கூறியது கூறல், மாறுகொளக் கூறல் குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள் இலமொழிதல், மயங்கக் கூறல் கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல் பழித்த மொழியான் இழுக்கம் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனக்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 109) முன்பு கூறியதையே பின்பும் கூறுவது என்ற கூறியது கூறல், முதலில் ஒன்றைக் கூறி விட்டு பிறகு அதற்கு முரணாகக் கூறல், கூற வேண்டியதை நிறைவாகக் கூறாமல் குறைவாகக் கூறல், ஒன்றை மிகைப்படுத்திக் கூறல், பொருளற்ற செய்திகளைக் குறிப்பிடுதல், கேட்போரோ படிப்போரோ குழப்பமடையுமாறு விளக்குதல், கேட்போர் செவிக்கு இனிமை கிட்டாத வண்ணம் சொல்லுதல், பெரியோர் பழித்திட்ட சொல்லை; அதன் இழிந்த நிலை கருதாமல் எடுத்தாளுதல், நூலின் வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய அறிவுரை பற்றிக் கவலையுறாமல், தன் கருத்தை எப்படியும் புனைந்துரைத்து இடைச் செருகலாற்றுதல், படிப்போரும் கேட்போரும் சுவைத்திட முடியாத பழுதுற்ற நிலையில் படைத்தளித்தல் எனப்படும் இந்தப் பத்து குற்றம் குறைகளும் அவற்றின் குட்டிக் குறைகளும் ஒரு நூலுக்குப் பெருமை வழங்காது!
இத்தகைய குற்றங்குறைகள் இல்லாதிருப்பின் “எதிர் மறுத்து உணரின் அத்திறத்தவும் அவையே” எனும் நூற்பாவுக்கு ஏற்ப நூலின் சிறப்பு மிகும். குறை நீங்கும். குன்றத்து விளக்காகும். “சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல் முறையின் வைப்பே உலக மலையாமை விழுமியது பயத்தல் விளங்கு தாரணத்த தாகுதல் நூலிற் கழகெனும் பத்தே” “நன்னூல்” -
