உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 98 · 100 / 102

(1) “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 93) (2) “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 95) (3) “வழியின் நெறியே நால்வகைத்தாகும்” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 97) (4) “தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 98) இந்த நான்கு நூற்பாக்களுக்கும் விரிவான விளக்கம் வருமாறு : (1) உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உயர்ந்தோர் வழங்கும் சொற் பொருளமைப்பாகிய வழக்கினைச் சார்பாகக் கொண்டு நிகழ்வதால், வழக்கு எனச் சிறப்பித்துக் கூறப்படுவது அந்த உயர்ந்தோர் வழக்கேயாகும்.

அஃதன்னியில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு, இயல்பு வழக்கு என்பனவற்றைக் குறிக்கும். சொற்களின் பொருள் நிலை மாறுபடாமல் உயர்ந்தோர் வழக்கினை அடியொற்றி உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளையும் எல்லா தரப்பினருக்கும் சென்று சேரக் கூடிய அளவில் எளிமைப்படுத்திப் போற்றிக் காத்தல் மொழி வளர்ச்சிக்கு அரண் செய்வதாகும். (2) அவ்வாறு அரண் அமைத்திடும் பணியில் அடுத்தடுத்துத் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பு, இந்த நூலின் மூலமும் எனக்குக் கிட்டியது எனலாம்.

தொல்காப்பியம் முதல் நூல் என்றும், அந்த நூலையும் அறிவின் முனைவன் இயற்றினான் என்றும், அதுவும் எத்தகைய முனைவன் என்றால்; வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் என்றும்; நூலாசிரியரான தொல்காப்பியரே தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வாரா என்ற கேள்வி; இந்த நூற்பாவுக்குத் தவறான பொருள் கொண்டால் நமக்கு எழத்தான் செய்யும். வழி நூல்கள் வருவதையொட்டி அல்லது வந்ததையொட்டி அவற்றுக்கு முந்தைய நூல் முதல் நூல் எனப்படும்.

முனைவர் இலக்குவனார் தொல்காப்பியம் பற்றித் “தொல்காப்பிய ஆராய்ச்சி” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும்.

இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று. தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது.”

முதல் நூல் தொல்காப்பியமா என்ற வினாவுக்கு விடை கிடைப்பதற்கு முன்பே தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்றும் அவர்தான் முதல் நூல் இயற்றியவர் என்றும், வடநூலார் பாணினி என்பார் தொல்காப்பியருக்கு முன்பே இலக்கணம் வகுத்தவர் என்றும், தொல்காப்பியர் சமதக்கினி என்ற ஆரிய முனிவரின் மகன் என்றும், சமதக்கினி பரசுராமனின் தந்தை என்பதால் பரசுராமனும் இராமனும் சம காலத்தவர் என்ற நிலையில்; அகத்தியர் இராமன் காலத்தவர் என்றும், அவரது மாணவரான தொல்காப்பியரும் அதே காலத்தவர் என்றும், பொய்ப் புராணங்கள் புறப்பட்டுவிட்டன புற்றீசல் போல! வேடிக்கை என்னவெனில் இராமன் காலம் கி.மு.

2000க்கு முற்பட்டது. பாணினியின் காலம் கி.மு. 350. பாணினிக்குப் பின்னர் தொல்காப்பியர் தோன்றியிருப்பின் பனம்பாரணார் பாடிய தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனக் குறிப்பிட்டி ருக்கமாட்டார். “பாணினியம் நிறைந்த தொல்காப்பியன்” என்றே குறிப்பிட்டிருப்பார். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது தொல்காப்பியர் பாணினிக்கு முற்பட்டவர் என்பதைச் சந்தேகம் நீங்க நிலை நாட்டுகிறது.

இப்பொழுது இந்த நூற்பா; தொல்காப்பியம் முதல் நூலா என்பது பற்றிப் பேசவில்லை. மாறாக; வழி நூல்கள் எவ்வாறு அமைகின்றன என்பதைச் சொல்ல வந்து; வழி நூல்கள் என்றால் அவற்றுக்கு ஒரு முதல் நூல் இருக்க வேண்டுமே; அந்த முதல் நூல், யாரால் எப்படிப் படைக்கப்பட வேண்டும் என்பதற்கு அடியெடுத்துக் கொடுக்கிறது அவ்வளவுதான்! ஆனால் நமது பழம் பெரும் அறிஞர் பெருமக்களான உரையாசிரியர்கள் சிலர் முதல் நூலை இறைவனே படைத்திட்டான் என்பது போல கருத்தறிவித்துள்ளனர்.

அது மட்டுமல்ல; அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்றும் அதன் வழி நூல் தொல்காப்பியம் என்றும் கூறுவது எத்துணை பயங்கரமான சூழ்ச்சி என்பதைச் சிந்தித்து உண்மை உணர வேண்டாமா? தொடக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளது போல்; முதல் நூல், வழி நூல், வழி நூல் வகை பற்றி விளக்குகிற நூற்பாக்களாக இவற்றைக் கருத வேண்டுமேயல்லாமல் முதல் நூல்; தொல்காப்பியர் இயற்றியதா? அல்லது இறைவன் இயற்றியதா? என்ற ஆராய்ச்சி தேவையில்லை.

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்” என்பதை, விளங்கிய அறிவின் முனைவன் கண்டது வினையின் நீங்கி முதல் நூலாகும் என்று கருதுவதே பொருத்தமானதாகும். “அறிவிற் சிறந்து விளங்குவோர் முனைந்து கண்டதே; குற்றம் குறைவில்லா முதல் நூலாக அமையும்” எனப் பொருள் கொள்வதே சிறப்பாகும். (3, 4) வழி நூல் நான்கு வகைப்படும். முதலில் விளக்கப்பட்டுள்ள நூற்பா சுட்டிக் காட்டும் முதல் நூலின் வழியில் வருவது வழி நூல் எனப்படும்.

அந்த வழி நூல் வகை முதல் நூலில் இருப்பவைகளைத் தொகுத்து நூலாக்குதல், விரித்து நூலாக்குதல், தொகுத்தும் விரித்தும் நூலாக்குதல், மொழிபெயர்த்தல் ஆகிய இவை நான்கும் எனப்படும்.