தொல்காப்பியப் பூங்கா
பகுதி 97 · 99 / 102
“மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப் பட்ட சொல்லி னான” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 92) மரபு நிலை திரியாச் சொற்களால் செய்யுட்கள் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதற்கான இலக்கணப் பயிற்சியினை முழுமையாகக் கற்றவனில்லை யென்ற காரணத்தினால்தான் இன்றைக்கு அறுபது ஆண்டுகட்கு முன்பு நான் எழுதியவை; கவிதை வரிகளாக இருந்து கவிதையாக அமைந்திடவில்லையென்பதை நானே வெளிப்படையாக அறிவித்து “கவிதையல்ல” என்ற சொல்லோவிய நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறேன்.
பெருங்கவிஞர்களாம் தமிழறிஞர்கள் பங்கேற்ற பல கவியரங்குகளில் தலைமையேற்று; குறிப்பாக திருச்சி வானொலி முதல் கவியரங்கில் “விடுதலை வீரர்கள்” என்ற தலைப்பில் 1967 ஆம் ஆண்டு பாடும்போதே, “சிறை வாழ்ந்தார் செக்கிழுத்தார் - இந்தத் தரையாண்ட வெள்ளையரை விரட்டுதற்குக் குறை ஆயுள் பெற்றுப் பலர் கொலையும் உண்டார். உறை மீறி வெளிவந்த கத்தி போல உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்; அவர் பெருமை கூறுதற்கு அணி வகுத்த இந்த நாளில் விடுதலைக்கு உயிரீந்த எவர் பெருமை கூறுதற்கும் இவர் போலக் கவி வளத்தைப் பெற்றேனில்லை; கவிதை பாடக் கற்றேனில்லை.
தளையறுத்த வீரர் கதை பாடுவதால் தளையகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர் தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால் தொடை தட்டும் என் பாட்டும்! என் கவிதை, யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - நம்நாடு, மொழி, மானம், உணர்வெல்லாம் காப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்கை யொன்றால் வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்கக் காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல் நெஞ்சில் ஊறுகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக் கொள்கை மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று சொல்வேன்; எத்தனை உயிர்கள் எத்துணை ரத்தம் நித்தமும் தந்து பெற்றது விடுதலை!
இத்தரை குடைந்து மெத்தவும் உழன்று பத்தரை மாற்றைப் பெற்றபின் அதனைக் கைத்திறம் காட்டி அணிநகை பூட்டிச் சித்திரப் பெண்டிர்க் களித்திடலன்றிக் குப்பைக் குழியில் போடுதல் நன்றோ? புட்கள் கூவிடும் சோலையின் நடுவே முட்கள் கீறிடப் பறித்த நல் ரோஜா கட்கம் ஏந்திய வீரர் முடியில் வெட்கம் ஏந்திய மாதர் குழலில் இருந்திடல் மணமா? அதனைத் துட்டக் குரங்கின் குறுகிய கையில் கொடுத்திடல் நலமா? பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்; பெற்ற மறவர்க்குப் பெருமைகள் சேர்ப்போம்.”
என எழுதியிருந்தேன். இப்போது புதுக் கவிதையுகம், ஹைக்கூ போன்ற பல புதுமைக் கவிதைகளின் யுகம். இன்னும் சொல்லப் போனால் வாக்கியங்களை மேலும் கீழுமாக உடைத்துப் போட்டோ அல்லது ஒடித்துப் போட்டோ வண்ணக் கவிதை பாரீர் என வாய்ப்பறை கொட்டும் யுகம். இந்த யுகத்தில் கவிதை இலக்கணம் நிறைவாகக் கற்றுள்ள கவிஞன் நான் என நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளாவிடினும்; நான் இதுவரை எழுதியுள்ள “கவிதை வரி ஓவியம்” எதுவும் காதறுந்த ஊசிகளாக ஆனதில்லை.
காதறுந்த ஊசிகளையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கற்களாகவே விளங்குகின்றன என்பதைப் பெருமிதத்துடன் அறிவிக்கும் பீடு எனக்கு உண்டு. அதற்குரிய ஆதாரங்களாக இதோ சில :- ஊரெல்லாம் இணைந்து ஒருலகாய் ஆவதென்பதும் உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும் உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூட தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே கணியன் பூங்குன்றன் எனும் கவிஞனாய் உலவியதைக் கவனமுடன் எண்ணிப் பார்த்தால் - அந்த மாமனிதனையும் மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ?
அடுத்து ஒன்று : தவழ்ந்து வரும் தன் மகவை முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல் தலைக்கு மேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச் சிங்கம் அவன்! நிலம் நோக்கும் வழக்கமின்றி நேர்ப்பார்வை செலுத்தித்தான் நிலவு முகத்தரசி நெற்றியிலே இதழ் பதிப்பான். படுத்திருக்கும்போதும் பஞ்சணையில் வினாக்குறி போல் வளைய மாட்டான் வில்லில் தொடுத்திருக்கும் கணையைப் போல் கால் நீட்டித் துயில் கொள்வான்! ‘வளையாத முதுகெலும்பு பெற்றவனோ?
வணக்கம் எனும் பொருள் விளையாத வயற்காடோ அவன் இதயம்?’ என வியந்து, வாய்பிளந்து மூக்கின்மேல் விரல் வைத்து - அவனை வாழ்த்தியவர் பலருண்டு! இன்னொன்று : பனிமுட்டை அடை காக்கும் பசும்புல்லின் தரைமீது மணித் தேர் அசைவது போல் மாதொருத்தி நடந்து வந்தாள் கனித் தமிழ்ச் சொல் உதிர்க்கும் புலமை மிக்காள் காக்கைப் பாடினி பொன்முடியார்க்குத் தமிழில் அவள் அக்காள் அதியமான் நெடுமானஞ்சி - வேள்பாரி வள்ளல் நாடன் சேரமான் மாவெண் கோவன், கானப்பேர் தந்த வழுதி - மற்றும் சோழனாம் பெருநற்கிள்ளி ஆகியோர் புகழைப் பாடித் தமிழுக்கு அணி பல பூட்டி நின்ற அறிவொளி ஒளவை நல்லாள்!
மேலும் மற்றொன்று : மானம்; என் மகன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு! பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதே வேல் பிடிக்கும் வித்தையினைக் கற்றுத் தந்தேன் ஆல் விட்ட விழுது போல் தந்தைக்கு மகனாகி - ஆட்டு வால் போலக் குட்டை மனம் கொண்ட பகை; நம் கோல் பறிக்கக் கூடாதென்று கொந்தளித்து; அவர் தோல் உரித்துத் துரத்திவிட்டுப் போரில் மாளுகிறான்; பெரும் புகழை ஆளுகிறான்! என் இருவிழி மழைதனைக் காணாதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரே!
வேறொன்று : மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு! அவன் இறந்துகிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை அடடா! கருத்தெரிய பொய் சொன்ன கயவன் எங்கே? வாள் இங்கே! அவன் நாக்கெங்கே? வாள் வீச்சின் ஓசையையும், யாழின் ஓசையையும் ஒத்ததாய் தமிழர்களை வீறுகொள்ளவும் வியப்பு கொள்ளவும் செய்திட்டதும் செய்து கொண்டிருப்பதுமான இந்தக் கவிதை வரி ஓவியங்கள் போன்ற பலவற்றைத் தமிழன்னையின் காலடிகளில் காணிக்கையாக்கி வருகிறேன்.
மரபு நிலை கூட திரியலாம், என் மனநிலை திரியவில்லை; திரியாது என்பதை இதுவரை நான் இந்தப் பூங்காவில் பறித்தளித்துள்ள ஒவ்வொரு மலர் நிலையையும் உணர்ந்தோர் அறிவர்! அறிந்தோர், உணர்வர்!
