தொல்காப்பியப் பூங்கா
பகுதி 96 · 98 / 102
“நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 91) இந்த நூற்பாவுக்கு உரை காணும் இளம்பூரணம்; நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் இந்த உலகம் என்று தொடங்கி விளக்கம் கூறுகிறது. கலத்தல் மயக்கம் என இரண்டுக்கும் பொருள் கூறும்போது, கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் கலந்தது போன்று எனவும், மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதற் போன்று எனவும் குறிக்கப்படுகிறது.
இவற்றில் முதலில் கூறப்பட்ட “கலப்பில்” விரவி நிற்பதும் - இரண்டாவதாகக் கூறப்பட்ட “மயக்கத்தில்” வேற்றுமைப்படாமல் நிற்பதும் - என இருநிலை காண்பதால், இருநிலையையும் உலகம் உடையதாக இருப்பதால் “கலந்த மயக்கம்” எனும் சொற்றொடரை இளம்பூரணம் குறிப்பிட்டிருப்பது புலனாகிறது. “கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது என்பாரே அதன் பொருள் என்ன; புரிகிறதா? கிணறு வெட்ட ‘மண்’ குவியும் - ஒரு பூதம் பூமிக்குள் அடைந்திருந்த ‘காற்று’ வெளிக்கிளம்பும் - மறு பூதம் பொங்கி வரும் புது ‘நீர்’ - அடுத்த பூதம் பொலிவுமிகு ‘ஆகாயம்’ தெரியும் நீர்மீது - நாலாம் பூதம் புவியாளும் ஆதவனின் ‘தீ’க் கதிரால் அந்நீரும் தூய்மையாகும் ஐந்தாம் பூதம் இந்தப் பஞ்ச பூதம் வருவதைத்தான் பழையவர்கள் அழகாய்ச் சொன்னார்; கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதென்று!”
இவ்வாறு அமைந்து; கலந்தும் மயங்கியுமுள்ளது இவ்வுலகம் ஆதலால் மேற்கூறப்பட்ட பொருள்களை உயர்திணை, அஃறிணை எனும் இரு திணையும்; ஒருவன் - ஒருத்தி - பலர் - ஒன்று - பல எனும் ஐந்து பால்களும் தவறாமலும் வேறுபடாமலுமுள்ள மரபுச் சொற்களால் வழங்குதல் வேண்டும். மரபு நிலை திரிந்து வேறுபடுமானால் சொற்கள் எல்லாம் பொருளிழந்து சிதைந்து விடக் கூடும். எனவே இரு திணைகள், ஐம்பால் இவை இயல்பு நெறி தவறாமல்; வேறுபாடற்ற மரபுச் சொற்களால் உலகப் பொருள்களை உணர்த்துதலின் இன்றியமையாமையை இந்நூற்பா வலியுறுத்துகிறது.
குறிப்பு :- நிலம் நீர் தீ வளி விசும்பு என அவை ஒன்றினுள் ஒன்று அடங்குமுறையில் கூறாது, “நிலந் தீ நீர் வளி விசும்போடைந்தும்” என மயங்கக் கூறியது, ஐம்பெரும் பூதங்களாகிய அவை தனித்தனியே பிரிந்து நிற்றலின்றி ஒவ்வொரு பொருளிலும் மயங்கிக் கலந்து நிற்கும் என்பது பேராசிரியம் உரையில் காணும் கருத்தாகும். வளி = காற்று விசும்பு = ஆகாயம் வழு = தவறு திரிபு = வேறுபாடு - விகாரம் தழாஅல் = தழுவுதல்
