உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 95 · 97 / 102

“வேழக் குரித்தே விதந்து களிறு என்றல் கேழல் கண்ணும் கடிவரை இன்றே” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பாக்கள் : 35, 36) “கலை யென் காட்சி உழைக்கும் உரித்தே நிலையிற்றுப் பெயர் முசுவின் கண்ணும்” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 47) இவற்றில் கூறப்படும் களிறு, கேழல், கலை, முசு ஆகியவற்றை நினைவில் பதித்துக் கொள்ள இதோ ஒரு சிறிய வேடிக்கை நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. போருக்குச் சென்ற மன்னர் வெற்றியுடன் திரும்பிவிட்டார்.

படை வீரர்கள் மகிழ்ச்சிக் கேளிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது அரண்மனை விகடகவிகள் இருவர் தெம்பாக ஆடிப் பாடச் சிறிது நேரம் அருந்திவிட்டு படைவீரர் மத்தியில் வெற்றி கீதம் பாடுகிறார்கள். சற்று நேரத்தில் பாட்டை நிறுத்தி விட்டு ஒரு விகடகவி, மற்றொரு விகட கவியைப் பார்த்து “அய்யா! விகட கவியாரே; உமது செல்வாக்கில் அழகான பெண்களைக் கொண்டு ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமே!”

என்றார். “அதற்கென்ன இப்போதே கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி விட்டுப் போனவர்; ஒரு கருங்குரங்கின் கழுத்திலே கயிறு கட்டிக் கொண்டு வந்து, அதன் கைகளில் ஒரு கம்பு கொடுத்து ஆடச் சொன்னார். படைவீரர்கள் மத்தியில் ஒரே சிரிப்பு! மற்றொரு விகடகவி, ஆத்திரத்துடன் கேட்டார்; “ஏனய்யா, இதுதான் அழகான பெண்ணா? இதற்குப் பெயர்தான் கலை நிகழ்ச்சியா?”

என்று! கருங்குரங்கைக் கொண்டுவந்த விகடகவி சொன்னார்; “தொல்காப்பிய மரபியலில் கலை என்பதற்கு முசு என்றும் ஒரு பொருள் உண்டு. அகராதியை எடுத்துப் பாரும்; ‘முசு’ என்றால் கருங்குரங்கு என்று கூறப்பட்டிருக்கிறது. அதிருக்கட்டும்; நீர் சொன்னவுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேனே; அதற்கு ஏதாவது வெகுமதி தரக் கூடாதா?”

“என்ன வெகுமதி வேண்டும் உமக்கு?” “வேந்தரிடம் நீர் பரிந்துரைத்தால் ‘களிறு’ ஒன்றே எனக்குப் பரிசாகக் கிடைக்கும்” “இதற்கேன் வேந்தரிடம் பரிந்துரை? நானே களிறு பரிசு தருகிறேன்; சற்று காத்திரும், இதோ வருகிறேன்” என்று சென்றவர் சிறிது நேரத்தில் ஒரு பன்றியை இழுத்துக் கொண்டு அங்கே வந்தார்.

“விகடகவியாரே; இதோ நீர் பரிசாகக் கேட்ட களிறு! நீர் சொன்னீரே தொல்காப்பியம்; அதே தொல்காப்பிய மரபியலில்தான் ஆண் யானையைக் களிறு என்றும், ஆண் பன்றியையும் களிறு என்றும் குறிப்பிடப்படுகிறது. இதோ வாங்கிக் கொள்ளும்; உம்! அழகான களிறு!”

என்றார். படைவீரர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “கலை” நிகழ்ச்சியும், “களிறு” பரிசும் அவர்களை விலா நோகச் சிரிக்க வைத்ததால் அதுவே போர் வெற்றிக்கான களியாட்டமாக அமைந்தது. நூற்பாக்களுக்கான பொருள் :- (1) ஆண் யானையைக் ‘களிறு’ என்று கூறுவர்.

ஆண் பன்றியையும் ‘களிறு’ எனக் கூறுவர். (2) மானுக்கு உரித்தான ‘கலை’ யென்னும் பொருள் முசு எனப்படும் கருங்குரங்கிற்கும் பொருந்தும். வேழம் = ஆண் யானை களிறு = ஆண்யானை, ஆண் பன்றி கேழல் = ஆண் பன்றி முசு = கருங்குரங்கு உழை = மான்