உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 94 · 96 / 102

அகராதியில் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய பல சொற்கள் இன்று வழக்கில் இல்லை யென்பதையும், சில சொற்கள் வழக்கொழிந்து போய் விட்டன என்பதையும் இந்த நகைச்சுவைத் துணுக்கு விளக்குகிறது. “மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே” (பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 48) அறிஞர் அண்ணா எழுதிய “நீதி தேவன் மயக்கம்” எனும் நாடகத்தில் இராவணன், கம்பர் மீது ஒரு வழக்குத் தொடுக்கிறான். “கம்பர் இராவணனை இரக்கமற்ற அரக்கன்” என்று அவரது இராமாயணத்தில் குறிப்பிட்டதை மறுத்துத் தொடர்ந்த அந்த வழக்கில் இராவணனே நீதிதேவனின் முன்னே வாதாடுகிறான்.

“அகல்யையின் கற்பைச் சூறையாடிய இந்திரனை விட; குரு பத்தினி தாரையைக் கற்பழித்த சீடனாம் சந்திரனை விட; சூர்ப்பணகையின் மூக்கு முலையை அறுத்த இலக்குமணனை விட; தாருகாவனத்து ரிஷிபத்தினிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சிவபெருமானைவிட; வாலியை மறைந்திருந்து வதைத்த இராமனை விட, சீதையை அசோக வனத்தில் வைத்து அவள் கற்பு கெடாமல் பாதுகாத்த நான் எப்படி இரக்கமற்றவன் ஆவேன்?”

என்பது இராவணனின் வாதம்! நீதி தேவன், தேவர்களுக்கு விரோதமாகத் தீர்ப்பளிக்க இயலாமல் மயங்கி விழுகிறார்! அதே போல் இதோ ஒரு கற்பனை - நால்வர் எனப்படும் இறையன்பர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். நால்வரும் தமிழ்ப் பெரும் புலவர்கள். இவர்களில் அப்பர் எனும் திருநாவுக்கரசர் நீதி தேவனிடம் ஒரு வழக்குத் தொடுக்கிறார். தொல்காப்பிய மரபியலில் என் பெயர் அஃறிணைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது; அதை நீக்க வேண்டும் என்று!

“உங்கள் பெயரை தொல்காப்பியர் வேண்டுமென்றே உங்களைக் குறைவுபடுத்திட சேர்த்ததாகத் தெரியவில்லை - காரணம்; காப்பியர் காலம் உங்கள் காலத்திற்கு எவ்வளவோ முற்பட்ட காலம். அவருக்கு பிற்பட்ட காலத்தவராகிய தங்கள் பெயருக்குக் குறைவு ஏற்படுத்த முன்கூட்டியே அவர் எப்படி நினைத்திருக்க முடியும்?”

என்று நீதி தேவன் கேட்டார். அதற்கு அப்பர் சொன்ன பதில். “கால வேறுபாடு குறித்த தங்கள் விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவே நான் தொல்காப்பியனைக் குற்றம் சாட்டவில்லை. என் பெயரை நீக்கினால் போதுமானது!” என்பதாகும். நீதி தேவன்; அப்பர் என்ற பெயரை நீக்கி விடுமாறு ஆணை பிறப்பித்துத் தீர்ப்பளித்தார். அதன் பிறகு மோத்தை என்றும், தகரும் என்றும், உதளும் என்றும் இருந்த அந்தச் சொற்களோடு இருந்த ‘அப்பர்’ எனும் சொல் நீக்கப்பட்டு விட்டது.

மோத்தை, தகர், உதள் எனில் ஆண் ஆடு என்றும், செம்மறிக் கடா என்றும், ஆட்டுக்கடா என்றும் பொருள். அந்தப் பட்டியலில் அப்பர் என்பதும் இருந்து வழக்கொழிந்துவிட்டது. இது ஒரு கற்பனையான நகைச்சுவைத் துணுக்கு மட்டுமே! ஆடினத்தில் ஆணுக்குரியதாய் வழங்கிய ‘அப்பர்’ என்ற வழக்கு பிற்காலத்தில் வீழ்ந்தது என்று தொல்காப்பிய உரைக் கருவூலங்களில் ஒன்றான பேராசிரியம் எடுத்துக் காட்டுகிறது.